
புகைப்படம்: சொல்வனம்
பிப்ரவரி மார்ச்சு மாதங்களில் எனக்கு நோய் பிடுங்கித் தின்கிறது. இதுவரை பத்துப் பன்னிரண்டு முறை ஆயிற்று. ஓர் ஆண்டு சுரத்துடன் காலும் நடக்க முடியாமற் போய் முடங்கிக் கிடந்தேன். ஒரு முறை மஞ்சள் காமாலை. எப்போதும் ஆஸ்துமா.
இப்படி நோய்கண்டு படுத்திருக்கும் நாட்களில் அதிகம் எழுத முடிவதில்லை. ஒரு முறை மட்டும் மூன்று சிறுகதைகள் எழுதினேன். அது 1962ஆம் ஆண்டில். டைபாயிடு சுரம். டைபாயிடு என்று கண்டறியக் காலதாமதம் ஏற்பட்டு விட்டது. அதனால் இரு மாதங்கள் படுக்கையோடும் மருந்தோடும் கிடக்க நேர்ந்துவிட்டது.
1961-1962ஆம் ஆண்டுகள் எனக்கு ஒரு திருப்புமுனைக் காலம். உலகமே ஏதோ முடிவுக்கு வந்துவிடுவது போன்ற எண்ணம். இருமுறை வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டேன். இலட்சக்கணக்கில் சில ஜபங்கள் செய்து முடித்திருந்தேன். ஏதோ நாளைக்கே யாரிடமோ கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்கிற பரபரப்பு. அப்போது சுரம் வந்தது. முதலில் நாள் கணக்கில் விடாத அசாத்தியமான தலைவலி. அப்புறம் இதர உபாதைகள். படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது என்கிற நிலை. சுரம் இறங்கிய பிறகும் மூன்று வாரங்களுக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது என்றார்கள். அப்போதுதான் அந்த மூன்று கதைகளை எழுதினேன். பரபரப்பு கணிசமாக அடங்கிப் போயிருந்தது. சுரம் வந்து படுத்த படுக்கையாகக் கிடந்திராவிட்டால் ஏதாவது ஏடாகுடமாக நடந்திருக்கக்கூடும்.
ஆனால் அந்த மூன்று கதைகளைச் சுரம் வந்துதான் எழுதியிருக்க வேண்டுமென்பதில்லை. நான் அவற்றைப் பற்றி முன்பே நிறைய யோசித்து வைத்திருந்தேன். ஆனால் கதைகளைப் பொறுத்த வரையில் நாம் எவ்வளவுதான் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாலும் அவை நம் மனதில் ஓர் உருவம் பெறவேண்டும். உருவமும் ஓரளவுக்கு மொழிநடையும் கதைக்குக் கதை மாறும். மாறவேண்டும். உண்மையில் படைப்பிலக்கியத்தில் இந்த உருவம் அமைவது மிகக் கடினமான பகுதி. அதற்காக நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
‘நம்பிக்கை’, ’தப்ப வேண்டியதில்லை’, ‘பிரயாணம்’ ஆகிய இந்த மூன்று கதைகளையும் நான் 1950ஆம் ஆண்டு அளவிலேயே எழுதத் தீர்மானித்து விட்டேன். ஆனால் 1962ல் தான் மூன்றையும் எழுத முடிந்தது. ‘பிரயாணம்’ கதையை முடிக்க இன்னும் கூடச் சிறிது அவகாசம் தேவைப்பட்டது.
இப்போது இம்மூன்று கதைகளைப் பரிசீலனை செய்து பார்க்கும்போது எனக்குச் சிலப் பொதுச் சரடுகள் தென்படுகின்றன. மூன்றிலும் ‘நான்’ வருகிறேன். முதலிரண்டில் பார்வையாளனாகவும் கதை சொல்பவனாகவும்; மூன்றாவதில் கதையிலேயே பங்கு பெறுபவனாக. மூன்றிலும் சாதாரண மானிட நிலைக்கு அப்பாற்பட்டதொன்றைத் தேடும் முயற்சி. ‘நம்பிக்கை’ சம்பிரதாயச் சாமியார் ஒருவரை முன் வைத்து எழுதியது. ‘தப்ப முடியாதது’ ஒருவன் தன் செயலாற்றாமையை ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறும் Choiceless awareness நிலை எனத் தனக்குத் தானே ஏமாற்றிக் கொள்வது பற்றியது. மூன்றாவது கதையாகிய ‘பிரயாணம்’ ஹட யோக அப்பியாசங்களினால் சமாதி நிலையை எட்டிய போதிலும் அது சாத்தியமாகாமல் போகுமோ என்ற ஐயத்தை உட்கொண்டது. மூன்றிலும் நோயும் சாவும் வருகின்றன. ஆனால் இவைதான் முக்கிய அம்சங்கள் என்றில்லை.
நோய் என்னும் எண்ணத்தை எளிதில் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. நோய்க்கான அறிகுறிகள் தோன்றினால் கூட மனம் ஏற்றுக்கொள்ள எதிர்க்கிறது. ஆரோக்கியம் என்பதே நாம் ஆரோக்கியமற்றுப் போகும்போதுதான் உணருகிறோம் என்கிறார்கள். ஆனால் ஓர் அடிமன நிலையில் நாம் என்றும் ஆரோக்கியம் பற்றிய நினைப்பு உடையவர்களாக இருப்பதால் தான் நோயை ஏற்க நம்மையறியாமலேயே நம்முள் எதிர்ப்பு ஏற்படுகின்றது. ஆனால் விரைவிலேயே ஒரு சமரசமும் செய்துகொண்டு விடுகிறோம். நோய் பற்றி நாம் அளவு மீறி அலட்டிக் கொள்வதில்லை.
நோய் நிலையை ஏற்க மறுத்த ஒரு மேற்கத்தியர் நினைவு வருகிறது. எர்னஸ்ட் ஹெமிங்வே. 1940களின் இறுதியில் அவர் புகழேணியின் உச்சியில் இருந்தார் — பிரமுகராக, எழுத்தாளராக, போர் வீரராக. அப்போது பிலிப் யங் என்னும் ஓர் இளம் பட்டதாரி டாக்டர் பட்டத்துக்கென (Ernest Hemingway: A Reconsideration – Philip Young – Google Books) ஹெமிங்வே படைப்புகளை ஆராய்ந்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஹெமிங்வேயின் ஆதரவு இருந்திருக்கிறது.
ஆனால் நிலைமை மாறத் தொடங்கியிருந்தது. சுமார் இருபது வருட காலம் அதிகம் பிரபலமடையாமல் ஒதுங்கியிருந்த வில்லியம் ஃபாக்னர் திடீரென்று ஓர் உலக எழுத்தாளராகக் கண்டெடுக்கப்பட்டார். காரணம் மால்கம் கவ்லி என்னும் விமர்சகர் ஃபாக்னரின் பல்வேறு நூல்களிலிருந்து சிறப்பானவற்றைத் தொகுத்து, தொகுப்புக்கு விமர்சன அணிந்துரையும் எழுதி வெளியிட வழி செய்தார். இப்போது ஃபாக்னருக்குக் கிடைத்த கவனம் மற்றெல்லா அமெரிக்க எழுத்தாளர்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டது. அது மட்டுமல்ல. 1949-ஆம் ஆண்டு நோபல் பரிசு ஃபாக்னருக்கு அளிக்கப்பட்டது.
ஹெமிங்வேயுக்கு இன்னொரு அடி. பத்தாண்டுக் காலம் காத்திருந்த அவருடைய வாசகர்களுக்கு அவர் அடுத்து வெளியிட்ட நாவலான ‘அக்ராஸ் தி ரிவர் அண்ட் இண்டு தி ட்ரீஸ்’ கொஞ்சமும் பிடிக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தவர்களெல்லாம் அந்த நாவலை மட்டந்தட்டினார்கள். ‘நியூயார்க்கர்’ பத்திரிகை ஒரு கேலிக் கட்டுரை கூட (The Moods of Ernest Hemingway – The New Yorker) எழுதி வெளியிட்டது. நான் இந்த நாவலைப் படித்தேன். வழக்கமாகவே ஹெமிங்வேயின் கதாநாயகிகள் பலகீனமான வார்ப்புகள் — இதிலும் அப்படித்தான். ஆனால் நாவல் பல இடங்களில், கவிதை நயம் தொனிக்க இருந்தது. அது வரை அவர் அனுபவித்த முக்கியத்துவத்திற்காகவே ஹெமிங்வே பழி வாங்கப்படுவது போலத்தான் தோன்றியது. இந்த வேளையில் பிலிப் யங் ஆராய்ச்சி. பிலிப் யங் அநேகமாக ஹெமிங்வே படைப்புகளையே சார்ந்துதான் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருந்தார். அதன் முக்கிய சாராம்சம் ஹெமிங்வே 1918ல் பலமாகக் குண்டடிபட்டு படுத்த படுக்கையாகக் கிடந்ததன் அதிர்ச்சி, அவர் படைப்புகள் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது என்று வாதிட்டிருந்தார். இதை Trauma theory என்று குறிப்பிட்டிருந்தார். இதையும் நான் படித்தேன். மிகவும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருந்தது. திடீரென்று தன் செல்வாக்கு குறைந்திருக்கும் இந்த வேளையில் இந்த Trauma theory மேலும் குழப்பம் விளைந்திருக்கும் என்று ஹெமிங்வேகருதியிருக்க வேண்டும். யங் ஆராய்ச்சிக்குத் தன் ஆதரவைத் தராததோடு யங் டாக்டர் பட்டம் பெறுவதையும் ஹெமிங்வே எதிர்த்தார் என்று யங் குறை கூறியிருக்கிறார்.
இதற்கெல்லாம் மேலாக ஹெமிங்வே உண்மையிலேயே அப்போது நோயுற ஆரம்பித்தார். முதலில் ஏதோ சரும எரிச்சல், அலர்ஜி என்றிருந்தது. இறுதியில் புத்தி தடுமாற்றம் வரை கொண்டு விட்டிருந்தது. எப்படியோ பெரும்பாடுபட்டு அடுத்த நாவலை எழுதி வெளியிட்டார். ‘தி ஓல்ட் மான் அண்ட் தி ஸீ’. ‘அக்ராஸ் தி ரிவர் …’ நாவல் பகிஷ்கரிப்புக்குப் பரிகாரம் செய்வது போல் இப்புது நாவலை எல்லாரும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்கள். விமரிசகர்கள் பரிசு, புக் கிளப் தேர்வு, புலிட்ஸர் பரிசு, எல்லாவற்றிற்கும் மேலாக நோபல் பரிசு.
இதெல்லாம் ஏதோ தற்காலிகமாகத்தான் ஹெமிங்வேயுக்கு ஆறுதல் அளித்திருக்க வேண்டும். அவருடைய உடல், மனநிலை தொடர்ந்து பேதமுற்றது. மாதக் கணக்கில் வைத்திய விடுதியில் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. அவர் அந்த ஆண்டுகளில் அவ்வப்போது எழுதிய படைப்பிலக்கிய எழுத்தை அவர் பிரசுரிக்கவில்லை. நோபல் பரிசு பெற்று ஏழாண்டுகளுக்குப் பிறகு, 1961-ஆம் ஆண்டில் மனச்சோர்வையும் நம்பிக்கை வரட்சியையும் தாங்க மாட்டாமல் தற்கொலை செய்துகொண்டு இறந்தார், அவருடைய வாழ்நாளெல்லாம் திடகாத்திரமும் தன்னம்பிக்கையும் சாகசமும் உற்சாகமும் ஒரு சேர இருப்பவர் என்ற தோற்றத்தை நேரடியாகத் தன் படைப்புகள் மூலமாகவும் மறைமுகமாக அவருடைய சாகசச் செயல்கள் பற்றிய செய்திகள் மூலமாகவும் உண்டு பண்ணியிருந்த ஹெமிங்வே இந்த முடிவு அடைந்தது உலகுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
உண்மையில் ஹெமிங்வே அவ்வளவு பீதியடைந்திருக்க வேண்டியதில்லை. அவருக்குப் படைப்பிலக்கியத்தில் ஒரு சாசுவதமான இடம் உண்டு. அவருடைய நாவல்கள் அநேகமாக நிராகரிக்கப்பட்டு விட்டாலும் அவருடைய சிறுகதைகள் இன்றும் சிறப்பான இலக்கியமாகவே கருதப்படுகின்றன, பயிற்றுவிக்கப்படுகின்றன. அவர் படைப்பு பற்றிய பல கண்ணோட்டங்களில் யங் தந்த trauma theoryயும் ஒன்று; இதற்கு அதற்கு மேல் முக்கியத்துவம் இல்லை.
ஆனால் நோய்வாய்ப்பட்டவர்களின் மனம் எப்படியெல்லாம் செயல்படும் என்று யாரால் நிச்சயமாகக் கூற முடிகிறது? இதில் கலாச்சாரப் பின்னணியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்திய எழுத்தாளர்கள் யாரும் நோயால் இப்படி நிலை தடுமாறிப் போய் விடவில்லை. நம் மொழியிலேயே கு.ப.ரா., புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி போன்றோர் நெடுங்காலம் நோயால் அவதியுற்றார்கள். சுந்தர ராமசாமியாவது ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார், தான் நோய்வாய்ப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு. ஆனால் இவர்களும் இன்னும் பல இந்திய எழுத்தாளர்களும் தாம் அனுபவிக்க நேர்ந்த நோயை விஸ்தரித்து எழுத வேண்டும் என்ற எண்ணம்கூட கொண்டிருக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளவில்லை.
வெகு நுண்ணியமான வகையில் இந்தியக் கலாச்சாரத்தின் மதிப்பீடுகள், முக்கியமாக இந்த உடல், ஜன்மம் பற்றிய மதிப்பீடுதான், நம் இலக்கியத்தில், அதுவும் தற்கால எழுத்தில் கூடச் செயல்படுகிறது என்று கூறத் தோன்றுகிறது. காயமே இது பொய்யடா என்பது அவ்வளவு வேரூன்றியிருக்கிறது.
வெளியான விவரம்: தமிழில் சிறு பத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்
1973 ஏப்ரல் மாதம், மாத இதழாகத் திட்டமிடப்பட்டுத் தோன்றிய சுவடு-வின் ஐந்தாவது இதழ் டிசம்பர் மாதம்தான் வெளிவர முடிந்தது. அந்த இதழ் தனிச் சிறப்பு உடையது. படைப்பாளி லா.ச.ராமாமிருதத்தின் தத்துவத் தேடல்கள் என்ற பேட்டிக் கட்டுரை அதில் வந்தது. அத்துடன் மூன்று பல்கேரியப் படங்கள் பற்றி எஸ். ஏ. ராம் விரிவான கட்டுரை எழுதியிருந்தார்.
சுவடு அந்தக்கால ஆனந்தவிகடன் அளவில் வந்தது. ஆரம்பத்தில் 24 பக்கங்களும், பின்னர் 32 பக்கங்களும் கொண்டிருந்தது. அதன் ஏழாவது இதழ் இரண்டாம் ஆண்டுச் சிறப்பிதழ் என்று 56 பக்கங்களோடு வந்தது. அதில் ஈழத்து இலக்கியங்கள்- ஓர் அறிமுகம் (ஜவாது மரைக்கார் ), மெய்-பொய் (அசோகமித்திரன்), வார்த்தைகளும் வாழ்க்கையும் (மெளனி கதைகள் பற்றி-அகல்யா), ஞானபீடம் பரிசு பெற்ற சச்சிதானந்த ஹீரானந்த வாத்ஸ்யாயன்- ‘ஆக்ஞேய பற்றிய அறிமுகம் (என். ஸ்ரீதரன்), டில்லியில் ஏழாவது உலகத் திரைப்பட விழா ( கலாஸ்ரீ) ஆகிய கட்டுரைகள் உள்ளன. நா. விச்வநாதன் கவிதைகள் – நான்கு பக்கங்கள் மற்றும் புவியரசு, கலாப்ரியா, அபி, கிவி கவிதைகள். சுந்தர ராமசாமி, பா. செயப்பிரகாசம், வா. மூர்த்தி கதைகள் இவற்றுடன் இம்மலர் வெளி வந்திருந்தது.
தொடர்புள்ள பதிவுகள்:
1. எழுத்தாளர் ஜெயமோகன்: அசோகமித்திரனின் ‘பிரயாணம்’
2. ஜெகதீஷ் குமார்: அசோகமித்திரனின் பிரயாணம்
3. Hemingway, Style, and the Art of Emotion – David Wyatt – Google Books
4. William Faulkner on Ernest Hemingway
“He has never been known to use a word that might send a reader to the dictionary.”5. Ernest Hemingway on William Faulkner
– “Poor Faulkner. Does he really think big emotions come from big words?”
– ‘Have you ever heard of anyone who drank while he worked? You’re thinking of Faulkner. He does sometimes — and I can tell right in the middle of a page when he’s had his first one.’