கடைசியாக இந்தப் படத்தை டெண்ட்கொட்டாய் உபயத்தில் பார்த்து முடித்தேன். இப்போது இது புத்தகமாக வந்திருக்கிறது.
புத்தகம் குறித்து தெரியவில்லை. படத்தை தயவுசெய்து பார்த்துவிடாதீர்கள். ஏன்?
1. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013) – கருந்தேள் ராஜேஷ் | Karundhel.com
படத்தில் நடித்திருக்கும் மிஷ்கினின் கதாபாத்திரத்தின்மீதும் சரி, ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் மேலும் சரி, முதல் பாதி முடியும்வரை எந்த அட்டாச்மெண்ட்டும் வரவில்லை. படத்தின் துவக்கத்திலேயே மிஷ்கினின் பாத்திரத்தைப்பற்றி போலீஸ் மூலமாக நமக்குத் தெரிந்துவிடுகிறது. கதையில் ஒரு சிறிய துணுக்காக, ஒரு சமூக விரோதிக்கு சிகிச்சை செய்து போலீஸில் மாட்டிக்கொள்ளும் ஸ்ரீயின் கதை இருந்தாலும், அதனால்கூட அவர் பாத்திரத்தின் மேல் எந்தவித உணர்ச்சிகளும் வரவில்லை.
2. காட்சியாக சொல்லப்பட வேண்டிய கதை எல்லாம், கடைசி ஐந்து நிமிடத்தில் டெலி ப்ராம்ப்டரைப் பார்த்து படிக்கும் மிஷ்கினால் ஓவர் ஆக்ட் செய்யப்படுகிறது. கொடுமைடா சாமீ.
3. ‘முகமூடி’ எடுத்தவரின் அடுத்தகட்ட வீழ்ச்சியாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
4. ஒரு இயக்குனருக்கு தன் போதாமைகளும், அடுத்தவரின் திறமையை சிறப்பாக வெளிக்கொணரும் ஆளுமையும் இருக்கவேண்டும். இத்தனை திறமையான பட்டாளத்தை வைத்துக் கொண்டிருக்கும் மிஷ்கின் தான் மட்டுமே போதும் என்னும் அகங்காரத்தில் இந்தப் படத்தில் சறுக்கியிருக்கிறார்.
5. ரேப் சீன் வைத்தால் அதில் காமம் தலைதூக்கக் கூடாது. எண்பதுகள் வரை வந்த பெரும்பாலான தமிழ்ப்படங்களில் வல்லுறவு காட்சிகள் காதல் காட்சிகள் போல் படமாக்கப் பட்டிருக்கும். அந்த மாதிரி அந்த பிச்சைக்காரியின் லட்சணமான முகம் கூட இந்தப் படத்தில் பாவப்பட வைக்காமல், ‘குழந்தை விவாகம் செய்து கொண்டாளோ?’ என பிற எண்ணங்களில் பார்வையாளரை மூழ்கடிக்கிறது.
6. தயவுசெய்து இதை திரைப்பட விழாக்களிலோ, வெளிநாட்டினருக்கு தமிழ்ப்பட அறிமுகமாகவோ சொல்லிவிட வேண்டாம். டாகேஷி கிட்டானோ, டாரன்டினோ என்றெல்லாம் டகால்டி விட்டு என்ரான் போல் மோசடியாக சீட்டுக்கட்டு ராஜாக்களைக் கொண்ட கோலிவுட் என்று தப்பாகக் கருதி, மொத்த தமிழ் சினிமாவையும் எள்ளி நகையாடிவிடுவார்கள்
7. அரிதான விஷயங்களைப் பாராட்டினால் மட்டுமே நாம் நினைவில் நிற்போம். பலரும் தூற்றும் விஷயங்களை, நாமும் கிண்டலடித்து கீழே தள்ளினால், இலக்கிய விமர்சகராக மாட்டோம். ஜாய்ஸ் குறித்தும் எலியட் குறித்தும் ஹெமிங்வே குறித்தும் அறிய நாம் எட்மண்ட் வில்சனை நாடுகிறோம்; காஃப்காவைக் குறித்து ஆராயவேண்டுமானால் வில்சனைத் தொட மாட்டோம். என்றாலும், நாம் அனுபவித்த நரகத்தை இன்னொருவரும் அனுபவிக்கக்கூடாது என்பதால், இந்தப் படத்தைப் பாராட்டாதீர்கள் என்கிறேன்.
8. போரடிக்கும் படம் என்பதால் மட்டும் விமர்சிக்கவில்லை. வித்தியாசமான காட்சியமைப்புகள் என்பதால் மட்டும் நிலைக்கூடிய படமில்லை. மேஜிக் நிகழவேண்டும். ராஜா இருக்கிறார். பூடகமான சங்கதி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அசத்துகிறார். ஆனால், அவியலில் அவியல் சுவைக்க வேண்டும். இது லட்டுவும் பாகற்காயும் பீட்சாவும் போட்ட அவியல். சகிக்கவில்லை.
9. பாடல்கள் இல்லை. ஐட்டம் சாங் இல்லை. பஞ்ச் வசனங்கள் இல்லை. கூடவே படமும் படமாகவில்லை.
10. திரைப்படங்களில் லாஜிக் பார்ப்பவன் நானில்லை. ஆனால், அந்தந்தப் படங்களில் நம்பவியலாத விஷயங்கள் நம்பக்கூடிய முறையில் உருவாக்கப்பட வேண்டும். ’ஜோக்கர்’ படம் தலைப்பில் ஜோக்கடித்தாலும் படு சீரியசாக செல்லும்; ஆனால், இந்தப் படம் முழுக்க காமெடியாக எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஆதார முடிச்சான — மிஷ்கின்-ஸ்ரீ சந்திப்பு ஏன் தேவை?
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
பதிப்பாளர்: பேசாமொழி பதிப்பகம்
எழுதியவர்: திரைப்படத்தின் இயக்குநர் மிஷ்கின்
விலை: ரூ.600.00
சவரக்கத்தி படமாவது திருப்தி செய்ய வேண்டுகிறேன்.
பிங்குபாக்: மிஷ்கின் – சைக்கோ | Snap Judgment