நீச்சலுடை உடுத்திக் கொண்டுதான் எல்லோரும் கடற்கரைக்கு வர வேண்டும் என்னும் சட்டத்தை பிரான்ஸ் முன்மொழிகிறது. இடத்துக்குத் தகுந்த ஆடை என்பதில் – கிறித்துவ கன்னித்துறவிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒப்புதல் கிடையாது என்பது தெரிய வருகிறது.
கீழ்க்கண்ட புகைப்படத்தில் இயற்கையை ரசிக்க விரும்பும் கிறித்துவ கன்னிமார்களுக்கும் ஆடை ஒரு தடைக்கல்லாக இருப்பதை இமாம் ட்வீட்டுகிறார்:
மேற்கத்திய கடற்கரையில் இந்தியா மாதிரி இல்லாமல் சில வித்தியாசங்கள் இருக்கிறது. அவை என்ன?
– சென்னையில் வெயில் தாழத்தான் கடற்கரைக்குச் செல்கிறார்கள். பிரான்ஸில் காலை எட்டு மணிக்குச் சென்றுவிட்டு, மாலை ஐந்து மணி வரை குடியிருக்கிறார்கள்.
– சென்னையில் காலார மணலில் புதையப் புதைய நடப்பது குறிக்கோள். பிரான்ஸில் வெயிலில் காய்ந்து உடலின் மேற்தோலை பழுப்பு நிறமாக்குவது குறிக்கோள். சென்னை கோடை உச்சிவெயிலில் கடற்கரைக்குச் சென்றால், “கறுத்துப் போயிடுவே!” என்பது சாதாரணரின் அச்சமாக இருக்கும்.
– சென்னையில் மெரினா போன்ற பலர் கூடும் சமயத்தில் நீச்சலுடையில் வந்தால் பெரும்பாலும் பொறுக்கிகளாவே இருப்பார்கள். பலர் அச்சத்துடன் அவர்களின் பக்கம் செல்லாமல் ஒதுங்கிவிடுவார்கள். பெண்கள் எவராவது குட்டைப் பாவாடை போட்டுக் கொண்டு வந்தால் கூட, அவர்களின் கால்களை வெறித்துப் பார்ப்பவர்களையே சென்னை கொண்டிருக்கிறது.
– பாரிஸில் முழுக்கால் சட்டை அணிந்துகொண்டு, நீச்சலுடை அணிந்து கொண்டிருப்பவர்களை பார்த்துக் கொண்டிருப்பவர்களை துரத்த நினைக்கிறார்கள். பாரிஸில் இருப்பவர்களைப் பொருத்தவரை, கடற்கரை என்பது சூரியக் குளியலுக்கும் வெயில் உடலில் ஏறிவிட்டால் சற்றே நீந்தி குளிர் தண்ணீரில் முழுமையாக நனைவதற்கும்.
உடலைக் குறித்தும் தங்களின் தோற்றத்தைக் குறித்தும் மனக்கிலேசம் உடையவர்களுக்கு பிகினி ஆடை எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்கி நாணம் கொள்ளச் செய்கிறது. எனவே, அந்த நீச்சலுடைக்கு பதிலாக முழு உடலையும் மறைக்கும் பர்கினி என்னும் உடையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் சொல்லிவிட்டது.
இந்த சமயத்தில் மிஸ் ஐடாஹோ நினைவிற்கு வருகிறார். அவரோ நீரிழிவினால் அவதிப்படுபவர். இன்சுலின் இல்லாவிட்டால் அல்லது குறைந்துவிட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடிவிடும். இதுவே சர்க்கரை வியாதிக்கு வழிகோலுகின்றது. எப்போதும் குளூகோஸ் ஏற்றிக் கொண்டேயிருக்கும் இறைப்பான் (பம்ப்) கருவியை எங்கே வைத்துக் கொள்வது? மிஸ் அமெரிக்கா போட்டியில் கலந்துகொள்ளவும் வேண்டும். கலந்து கொண்டால், நீச்சலுடையும் தரிக்க வேண்டும். ’முதலாம் வகை நீரிழிவு’ பாதிப்பில் இருந்து உயிர் காக்கும் கருவியும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவரின் செய்கை பலரின் வாழ்க்கையை மாற்றியது. குழந்தை பிறந்ததினால் வயிற்றில் ஏற்படும் பிறப்புச் சுருக்கங்களைக் காட்டுவதற்கு வெட்கப்பட்டோர், இதே போல் நோயினால் அவதிப்பட்டோர் எல்லோருக்கும் ஒரு சுதந்திரச் சின்னமாக மாறியது.
பிரான்சில் எப்போதுமே மதச்சின்னங்கள் இல்லாமல் நாட்டை நடத்துவது குறித்து சிக்கல்கள் எழுந்துகொண்டேயிருக்கின்றன. இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு பர்கா போட்டு அவர்களின் முழு உடலையும் மறைக்கும் ஆடையை ஷரியா சட்டமாக்க வலியுறுத்துகிறது. பிரான்ஸ் நாடோ, இதன் எதிர் பக்கமாக படுதா போட்டுக் கொண்டு குளிக்க வரக்கூடாது என சட்டம் போட பார்க்கிறது.
ஆனால், காலாகலத்திற்கும் நீச்சலுடை என்பது இப்படித்தான் இருந்திருக்கிறதா? இல்லை என்று எவரும் சொல்வார்கள். ஆனால், 1890களிலேயே இருக்கலாமே என்கிறது இஸ்லாம்:
1950களில் இந்த மார்க்கச்சை + ஜட்டி ஆடை, இத்தாலி போன்ற மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. எவராவது மார்புக்கச்சையும் உள் காற்சட்டையும் மட்டும் அணிந்துகொண்டு வந்தால் தண்டம் விதித்தனர். 1957ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காவல் துறையினர் அபராதம் விதிப்பதை இங்கே பார்க்கலாம்:
இப்போதெல்லாம் ஒலிம்பிக் போன்ற நீச்சல் போட்டிகளில் நீச்சலுடை கூட தங்களின் வேகத்தைக் கட்டுபடுத்துவதாக நினைக்கிறார்கள். எனவே, உடலின் மீது ஆங்காங்கே ஆடையைத் தெளிக்கப் போகிறார்கள். இதெல்லாம் சரிதான்…
ஆனால், நிகோல் கிட்மன் போட்டுக் கொண்ட நீச்சலுடையை, இரண்டாயிரத்து ஐநூறு டாலர்களுக்கு விற்கும் வாய்ப்பையும் அந்த மாதிரி நன்கொடை இந்தியாவில் இருக்கும் ஒன்பது ஏழை விவசாயிகளுக்கு ஆளுக்கு ஒரு பசுமாடு கொடுக்கும் திட்டமும் கைநழுவும் அபாயம் இருப்பதை எவரும் யோசிப்பதில்லை.
அந்த மார்க்கச்சை நம்ம நாட்டுலே புராதனப் பழக்கம். இந்தியச் சிலைகள் (சாமி சிலைகள்) பார்த்தாலே தெரிஞ்சுரும்!
இப்பெல்லாம் ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலுடையில்தான் ஓட்டப்பந்தயம் கூடநடக்குதே!
பிகினி, பர்கினி ஆராய்ச்சி நன்றாகத்தான் இருக்கிறது. 1957-ல் பிகினி அழகியை `புக்` செய்யும் போலீஸ்காரரின் நடவடிக்கையைக் கவனியுங்கள். அழகிக்கு எதிர் நின்றும், அவரது பார்வை நோட்டுப்புத்தகத்தில் இருக்கிறது. சென்னையின் மெரீனாவில் இந்த நிகழ்வைக் கற்பனை செய்துபாருங்கள். நமது போலீஸின் கண் நோட்டுப்புத்தகத்திலா இருக்கும்?
உடுத்தும் ஆடை கடற்கரை, வெயில் சம்பந்தப்பட்டதுமட்டுமல்ல; நீங்கள் வாழும் இடம், சீதோஷ்ணநிலை, சமூக நெறிகள் (!) சம்பந்தப்பட்டது. மூடுவதும், திறப்பதுவும் அவ்வளவு எளிதானதல்ல!