“You see, in this world, there is one awful thing, and that is that everyone has his reasons.”
― Jean Renoir
சமீபத்தில் ‘கல்வாரி’ (Calvary) படம் பார்த்தேன். ஒருவர் ஏன் கத்தோலிக்க பாதிரியாராக ஆனார் என்பதைச் சொல்லியிருந்தார்கள். அது போல் நான் எழுதுவது என்பதும் திருச்சபையின் பிரசாரகர் போன்று ஃபேஸ்புக் சபையில் சொற்பொழிவாளராகும் விருப்பத்தினால்தான்.
தேவாலயத்தை வைத்தும் கல்வாரி திரைப்படத்தை வைத்தும் மேலும் விவரிப்பதற்கு முன் எழுதுவதற்கான வெளிப்படையான காரணங்களைப் பார்க்கலாம்:
1. மற்றவர்களைத் திருத்துதல்: அதிவிற்பனையாகும் விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களில் வரும் பொதுமைப்படுத்தல்களைப் படித்து, அவற்றின் போதாமைகளையும் பிழைகளையும் சுட்டிக் காட்டுதல்
2. அனுபவங்களைப் பகிர்தல்: அண்டார்டிகாவிற்கே செல்லாமல், பயணக்கட்டுரை எழுதும் தமிழ்ச்சூழலில், சுயமாகக் கண்டறிந்ததை பலரும் அறிய வைத்தல்
3. விவாதங்களை உருவாக்குதல்: பேசாப்பொருளாக மூடுமந்திரமாக தாளிட்டு வைக்கப்படும் கொள்கைகளுக்கு, மாற்றுக் கருத்துகளைச் சுட்டிக் காடுதல்
4. பொழுதுபோக்கு கேளிக்கையில் ஈடுபடல்: வேலை முடிந்த சோர்வடைந்த வேளைகளில் புத்துணர்ச்சிக்காக ஐ.பி.எல், என்.எஃப்.எல், என்.பி.ஏ எல்லாம் பார்க்காமல், விளையாட்டாக உற்சாகம் அடைதல்
5. தியாகம் செய்தல்: எண்ணங்களைப் பதிவு செய்து காப்புரிமை பெற்று காசாக்குவதில் கிடைக்கும் பணத்தை விட எழுத்தில் பகிர்வதால் திருப்தி கிடைத்தல்
6. தனிமையைக் போக்குதல்: எனக்கெனவே நான் வாழ்கிறேன் என நினைத்து சுயநலத்தில் மூழ்காமல், நண்பர்களைக் கண்டடையும் முயற்சியில் இறங்குதல்.
குதிரைப் பந்தயத்தை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? பந்தயத்தின் துவக்கத்தில் பத்து பன்னிரெண்டு குதிரைகள் ஓட ஆரம்பிக்கும். குதிரையை ஓட்டுபவர் அதன் மீது உட்கார்ந்து கொண்டு அதை விரட்டுவார். கடைசியில் ஒரேயொரு குதிரை ஜெயிக்கும். மற்ற குதிரைகளுக்கு தான் தோற்று விட்டோம் என்பது சரியாகப் புரிந்து கொள்ளும் சூட்சுமம் கிடையாது. ஆனால், அதற்கு முன்பு கிடைத்த நல்ல சாப்பாட்டிற்கும், தோல்விக்கு பின் கிடைக்கும் பசும்புல்லுக்கும் பெரிய வித்தியாசம் தெரியப் போவதில்லை. ஜெயித்த குதிரையும் தங்கக் கோப்பையை தன் கால்களினால் தூக்கிக் காட்டி புகைப்படத்திற்கு குதிரைப்பல்லை ஈயென்று இளித்து காண்பிக்கப் போவதில்லை. குதிரை ஜாக்கிக்கும் குதிரையை வாங்கிய பணமுதலைக்கும் ஒளிபாய்ச்சப்படும்.
நான் எழுதுவது என்பது குதிரையைப் போன்றது. தன்னால் இயன்ற அளவு நன்றாக ஓட வேண்டும், யாரோ விரட்டுகிறார்கள் என்பதற்காக, என்னால் எழுத முடியாத ஓட்டத்தில் ஓட்டி, காலை உடைத்துக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு. சில சமயம் ஓட்டத்தில் இருந்து நிறுத்தம் கண்டு, கொட்டிலில், போட்டதைத் தின்று, காலங்கழிக்கும் தருணங்கள் உண்டு. சில சமயம் நன்றாக ஓடி, முதல் பரிசை யாருக்கோ வாங்கிக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரியாமல், தன் பாட்டுக்கு அடுத்த ஓட்டத்திற்கு தயார் செய்து கொள்வதும் உண்டு.
நல்ல எழுத்து என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. அதே போல் ‘நீங்கள் எழுத்தாளரா’ என்பதற்கு என்ன அடையாளங்கள் என்று பட்டியலிட்டால், ஏன் எழுதுகிறேன் என்பதற்கான விடைகள் கிடைக்கலாம்.
யார் எழுத்தாளர் என அறியப்படுகிறார்?
அ) தொடர்ந்து எழுதுவது: இந்த நேரம்தான் எழுத முடியும்; இந்த மனநிலையில்தான் எழுதமுடியும்; இந்தச் சூழலில்தான் எழுத முடியும் என்றில்லாமல், எங்கும் எப்பொழுதும் தயாராக இருப்பது
ஆ) பல்வகையில் எழுதுவது: நகைச்சுவைதான் வரும்; சினிமா விமர்சனம்தான் போடுவேன்; கவிதை மட்டுமே வார்ப்பேன் என கொம்பனாக இல்லாமல், எல்லா விதமான முயற்சிகளையும் செய்வது
இ) உரையாடலில் ஈடுபடுவது: இன்னாருடன் பேசினால் விதண்டாவாதம்; இந்தக் கொள்கையை ஆதரித்தோ/எதிர்த்தோ எழுதுவது நேரவிரயம் என்று புறந்தள்ளாமல், பொறுமையாக விளக்குவது
ஈ) நல்ல மனிதராக இயங்குவது: சமரசங்கள் செய்துகொண்டாலும் தன்னளவில் நேர்மையாகவும் தெளிவாகவும் குடும்பத்துக்கும் உற்றார் உறவினருக்கும் பாந்தமான சொந்தமாகவும் நேசிக்கத்தக்கவராக இருப்பது
உ) கல்லுளி மங்கராக இருப்பது: இந்தப் பத்திரிகைக்கு இது போதும்; இந்த வாசகருக்கு இவ்வளவு சொன்னால் போதும் என்று விட்டுவிடாமல், தொடர்ந்து ஆழமாகவும் எளிமையாகவும் முழுமையாகவும் எழுதிக் கொண்டேயிருப்பது.
இப்பொழுது நான் யாரை எழுத்தாளர் என நம்புகிறேன் என்பதைச் சொன்னால், ‘எதற்காக எழுதுகிறேன்… எப்படி அவர் போல் ஆக முயல்கிறேன்’ என்பது எனக்கு பிடிபடலாம்.
சுஜாதாவை எழுத்தாளர் என நினைக்கிறேன். அவரைப் போல் இரட்டை குதிரைச் சவாரி முடியும் என நம்புகிறேன். ஒரு பக்கம் அறிவியல் வேலை; இன்னொரு பக்கம் புனைவு அமர்க்களங்கள்; மற்றொரு பக்கம் தொழில்நுட்ப விளக்கங்களை – சுவாரசியமான கட்டுரைகளாக்குதல்; பிறிதொரு பக்கம் இதழ் ஆசிரியராக பணி; அது தவிர ஆன்மிக ஈடுபாடு; தத்துவ விசாரம்; அறிபுனை ஆக்கங்கள் என ஒவ்வொரு துறையிலும் முத்திரை படைப்புகள். கூடவே எழுத்தாளர் இல்லாத மற்றொரு பணியில் 9 முதல் 5 வரையிலான வேலையிலும் தீவிர செயல்பாடு என பன்முகம் கொண்டவராக இருக்க வேண்டும்.
இதற்கும் ‘கல்வாரி’ திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம்?
படத்தின் துவக்கத்தில் இந்த மேற்கோள் வரும்:
“மனந்தளர வேண்டாம்; ஒரு திருடன் காப்பாற்றபட்டான்.
மட்டுமீறிய ஊகம் வேண்டாம்; ஒரு திருடன் பழிக்கப்பட்டவன் ஆனான்!’
– புனிதர் அகஸ்டீன்
கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்துவோடு இரு கள்வர்களும் சிலுவையில் அறையப்பட்டார்கள். அவர்களில் ஒருவன் தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கோரினான். இன்னொருவன் மனத்தினால் வருந்தாமல் அன்பு உள்ளம் கொள்ளாமல் புறத்தால் மட்டும் பாசாங்கிட்டு சொர்க்கத்திற்கு வழி கேட்கிறான். அப்போது தன் தந்தையை நோக்கி ’பரமபிதாவே இவர்களை மன்னியும்’ (லூக்கா 23:24) என்று பேசினார். தந்தையிடம் பேசிவிட்டு தம் இரு பக்கங்களையும் நோக்கியபோது, இரு திருடர்கள் தம்மை இரண்டாகப் பங்கு போடுவது தெரிந்தது.
அந்த இருவரையும் பாவத்திற்குப் பரிகாரமாக, அன்பின் அடையாளமாக ஆளுக்கொரு சிலுவையைச் சுமந்து கொண்டு கோயிலுக்கு வரவேண்டும் என்று அனுப்பி வைக்கிறார். இருவரும் பக்கத்திலிருந்த காட்டிற்குச் சென்று ஆளுக்கொரு மரத்தைத் தேர்ந்தெடுத்து சிறப்பானதொரு ஆக்கத்தைச் செய்கிறார்கள். தம்முடைய புத்தம்புதிய சிலுவையைச் சுமந்து செல்லுமிடத்திற்குப் புறப்பட்டார்கள். பயணம் நெடுந்தூரமாகவும் முடிவில்லாததாகவும் தெரிகிறது. சிலுவையின் பாரம் அதிகமாகவும் இருக்கிறது. ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார்கள். ஓய்வு எடுத்த பிறகு ஒரு திருடன் கேட்கிறான். “சிலுவையின் எடையைக் குறைத்து கொள்வோமா?” என்று கேட்டான். “எனக்கு வேண்டாம். நீ வேண்டுமென்றால் சிலுவையைக் குறைத்துக் கொள்” என்று சொன்னான் இன்னொரு திருடன். மற்றவன் குறைத்துக் கொண்டான். மீண்டும் பயணம் தொடர்ந்தது. மீண்டும் ஓய்வு; மீண்டும் மற்றவன் சிலுவையை இன்னும் கொஞ்சம் குறைத்துக் கொண்டான். கூட்டாளி மறுப்பு ஏதும் சொல்லவில்லை. கோவில் முகப்பை அடைந்தார்கள். அப்போது தான் தெரிந்தது கோவில் வளாகத்தை அடைய, வழியாக இருந்த பாலம் உடைக்கப்பட்டு இருந்தது. சிலுவையோடு கோவில் வளாகத்தை அடைவது எப்படி என்று இருவரும் யோசித்தார்கள். சிலுவையைக் குறைக்காமல் எடுத்து வந்தவன் சிலுவையைப் பாலமாக வைத்துப் பார்த்தான் சரியாக இருந்தது. சிலுவை மேல் ஏறிக் கரை சேர்ந்து சிலுவையை எடுத்துக் கொண்டான். சிலுவையை குறைத்துக் கொண்டு வந்தவன் சிலுவையை வைத்துப் பார்த்தான் சிலுவை சரியாகப்படவில்லை கரையிலேயே நின்றான். அக்கரை சேர முடியவில்லை.
என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தம்மையே துறந்து தம் சிலுவையை நாள் தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23).
அப்போது தான் மனம்மாறிய கள்வனுக்கு ’நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்’ என ஆறுதலாக யேசு கூறியதாக லூக்கா 23:43 சொல்கிறது. இந்த மாதிரி கடைத்தேறத்தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒன்றைப் பற்றி எழுதும்போது அது குறித்த புரிதல் மேம்படுகிறது. திரைப்பட விமர்சனம் ஆகட்டும்; நூல் அறிமுகம் ஆகட்டும்; மனிதரை விமர்சிக்கும் புனைவுகள் ஆகட்டும்; டுளவியலை பூடகமாக உணர்த்தும் கவிதை குறித்த அனுபவப் பார்வைகள் ஆகட்டும்; எழுதும் போது சிலுவையே பாலமாக என்னை மற்றொரு இடத்திற்கு தோணியாக்கி இட்டுச் செல்கிறது – என்றெல்லாம் கற்பனை செய்வதால் எழுதுகிறேன்.
ஆனால், எழுதுவது என்பது போதை மருந்து போல் என்பதை தெளிவாக உணர்ந்தே இருக்கிறேன். வேளா வேளைக்கு உட்கொள்ளாவிட்டால் உடல் சோர்வுறும். மனம் களைப்புறும். அந்த நேரத்திற்கு அபின் தேவை. அதற்காக பிறர் வீட்டிற்கு சென்றுத் திருடவும் தயங்குவதில்லை. திருட்டினால் கிடைக்கும் பொருளை விற்று, உருத் தெரியாமல் மொழிமாற்றி, அதை மயக்கப் பொருளாக உட்கொள்ளும் வரை வெறி அடங்குவதில்லை. இது ஒருவிதமான அடிமைத்தனம். அந்த போதையின் பித்தின் உச்சியில் என்ன சொல்கிறோம் என்று உணராமல் ஜடமேயென்று கொலையும் செய்துவிட்டு, அந்தக் கொலைக்குற்றம் என்னைக் குறிவைக்கும்போது, எழுத்தாளரின் சுதந்திரம் என்று பதுங்கித் தப்பித்து திரிவதற்காக எழுதுகிறேன்.
எதற்காக எழுதுகிறான் என்று பிறர் கேட்கவைக்காதபடி எழுதும்வரை, எதற்காக எழுதுகிறேன் என்றெல்லாம் யோசிக்கப் போவதில்லை.
—-