சின்ன வயதில் தூர்தர்ஷனில் மட்டும்தான் இந்தப் படங்களைப் பார்த்து இருக்கிறேன்.
- சாவித்ரி – எனக்குத் தோன்றிய பிம்பம்: எப்போது பார்த்தாலும் அழுகை; மூக்கு சிந்தல்; ஜோடியாக பொருந்தா கதாபாத்திரங்கள் (miscast)
- சாரதா – அய்யஹோ… துலாபாரம்… இப்பொழுது என் பெண்ணிடம் தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ பார்க்கச் சொன்னாலே, அரண்டு ஓடுகிறாள்.
- பானுமதி – bearable; அதுவும் ‘தொட்டு நடிக்கக் கூடாது’ என்னும் பிரஸ்தாபம், பிராண்ட் நன்கு முன் வைக்கப்பட்டதால், கொஞ்சம் போல் intrigue
இந்த சமயத்தில் ஸ்ரீவித்யாவும் அபூர்வ ராகங்களும் நிஜமாகவே கொஞ்சம் ஆசுவாசம் கொடுத்தது. மற்றவர்கள் எல்லாம் சோக சாகரத்தில் மூழ்கடித்து வாழ்க்கையையே எதிர்மறையாக, ஏமாற்றமாக, தோல்விகளாக உணர்த்திய போது, இவரைப் பார்த்தால் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அந்தத் தலைமுறையின் குறியீட்டின் எச்சமாக இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன்.
விக்கிப்பிடியாவின் பட்டியலை பார்ப்போம்:
- அறுபதுகள் – ஜெயலலிதா (சரி… திமுக ஆட்சியில் இருந்தால், யாருக்கு விருது கொடுப்பார்கள்)
- எழுபதுகள் – சுஜாதா, லஷ்மி
- எண்பதுகள் – ஷோபா, சரிதா
- 90கள் – அர்ச்சனா, ரேவதி
நிறைய பேரை விட்டிருக்கிறேன். இருந்தாலும், டக்கென்று பார்த்தால், இவர்கள் எல்லோருமே மெரில் ஸ்ட்ரீப் போல் உருகி நடிப்பவர்கள். அதாவது, சிரமதசையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே மதிப்பு. விக்ரம் கண் தெரியாதவராக, சிவாஜி கால் முடியாதவராக நடிப்பது போன்று ஏழை பிச்சைக்காரராக திரையில் தோன்றினால் விருது கிடைக்கும், நல்ல நடிகர் என்று மதிப்பு உயரும். இவர்களுக்கு நடுவில் அச்சுபிச்சுத்தனமாக நடிக்கும் மோகன், துள்ளலாக வந்துபோகும் நதியா போன்றோர செல்லுபடியாவதில்லை.
ஸ்ரீவித்யாவும் அப்படிப்பட்ட ஒருவரோ?
இதையெல்லாம் இந்தக் கட்டுரை சொல்வதில்லை என்றாலும், குறிப்பால் உணர்த்துகிறதோ!