Via Senkottai Sriram
வானதி பதிப்பகத்தின் சார்பில் நூலாகியுள்ளது. ஆர்.பொன்னம்மாள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திரத்தை ஒட்டி வெளியிடப்பெற்றுள்ள தொகுப்பு!
வழக்கமாக தற்போது நடைபெறும் புத்தக வெளியீடுகள் போல் அல்லாது, வித்தியாசமாக யோசித்தார் வானதியின் பெயரன் சரவணன்.
ஒருநாள் காலை… கைபேசியில் அழைத்தார். அண்ணா, ஸ்ரீமத் ராமானுஜர் புத்தகம் போடுகிறோம்.. என்று சொல்லி, நூல் தலைப்பு, உள்ளடக்க குறிப்பு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டார். சொன்னேன். அடுத்த சில நாட்களில் மீண்டும் அழைத்தார். அண்ணா… நாம ஸ்ரீபெரும்புதூர் போய், அங்கேயே உடையவர் சந்நிதியில் நூலை வெளியிட்டு உடையவர் பாதத்தில் வைத்து வந்துடலாம். நீங்கதான் வெளியிட வரணும். உங்க கையால் வெளியீடு. ராமானுஜ நூற்றந்தாதி பாடிய உஷா பத்மநாபன் அம்மாவ அழைச்சிண்டு வரேன். அவர் முதல் பிரதியை வாங்கிப்பார் என்றார்.
மறுக்கவில்லை. சரியாக நேற்று திருவாதிரை. எம்பெருமானார் திருநட்சத்திரம். காலை அடியேன் பொத்தேரியில் இருந்து வண்டியில் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றுவிட்டேன். அவர்களும் வந்தார்கள். சந்நிதிக்குச் சென்று பெருமாளை, உடையவரை ஸேவித்தோம். பாதத்தில் புத்தகக் கட்டை வைத்து ஆசி பெற்றோம். அப்போது நம் எம்பார் ஜீயர் நினைவுக்கு வர, சரவணனிடம் சொன்னேன்…. நம் ஜீயர் ஸ்வாமிதான் புத்தகத்தை வெளியிட சிறப்பானவர். அவர் திருமாளிகைக்குப் போய், அவர் கையாலேயே வெளியிட்டுவிடுவோம் என்றேன்.
அவ்வாறே சென்றோம். ஜீயர் ஸ்வாமி திருமாளிகையில் அன்று அன்பர் குழாம் அதிகம்! அதோடு அதாக, ஜீயர் ஸ்வாமி புன்னகையுடன் நூலை வெளியிட்டு, பிரதியை உஷா பத்மநாபனுக்கும் அடியேனுக்கும் வழங்கினார்.
பின்னர், அப்படியே எல்லாரும் அமருங்கள். பிரசாதம் சாப்டுட்டு போயிடலாம் என்றார் ஸ்வாமி. அருமையான கதம்ப சாதம், தயிர் சாதம்..! பக்கத்தில் உள்ள மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சிஷ்ய கோடிகள் பாகவத சிரோமணிகள் வழக்கமாக திருவாதிரை நட்சத்திரத்தில் கோயிலுக்கு வந்துவிட்டு ஸ்வாமி சந்நிதிக்கு வந்து மதியம் சாப்பிட்டு விட்டுச் செல்வார்களாம். அதனால் ஒரே தடபுடல்!
பரம திருப்தியுடன் எளிய, ஆனால் ஆத்மார்த்தமான ஒரு நிகழ்வுடன் அங்கிருந்தே அலுவலகம் விரைந்தேன்.
பின் இணைப்பு:
புத்தகம் குறித்து பலரும் விசாரிப்பதால், வானதி பதிப்பக எண் தருகிறேன்… போனில் விசாரித்துக் கொள்ளுங்கள்..
VANATHI PATHIPPAKAM
23,Deenadayalu street,T.nagar, Chennai-17
Ph-no: 044 – 2434 2810 / 2431 0769
நூலின் முன்னுரையில் சுதா சேஷய்யன் எழுதியதில் இருந்து சில பகுதிகள்:
(இந்த நூலின்) சிறப்பு, நூலின் எழுத்தமைப்பால் ஏற்படுகிறது. பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் உள்ள செய்திகளை, அதுவும் மரபும், சமயமும் சார்ந்த செய்திகள, எடுத்துரைக்கும்போது, அவ்வாறான நூலின் மொழி நடை, பாரம்பரியமும், பரிபாஷையும் சார்ந்ததாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு. மிகுதியான பரிபாஷைச் சொற்களும் வடமொழி மணிப்ரவாளச் சொற்களும் கலந்துவிடுமானால், வாசகர்கள் பால்ர் ஒதுங்கிவிடுவார்கள். குறிப்பாக இளைய தலைமுறை வாசகர்கள் அத்தகைய நூலைக் கையிலெடுக்கவே தயக்கம் காட்டுவார்கள்.
…
…
நூலின் மூன்றாவது சிறப்பு, கருப்பொருளுக்கு முன்னாலும், பின்னாலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் தக்க இடங்களில், தக்க முறைகளில் அமைத்திருக்கும் பாங்கு. …
… வைணவ குரு பரம்பரையின் பிரபாவத்தை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த நூலாசிரியர், அதற்கான தகவல்களை, திருமலை நம்பி – ராமானுஜர் ஆகியோரின் உரையாடல்களில் பொதித்துக் கொடுப்பது மிகச் சிறந்த யுத்தி.
…
வைணவ உரைகளில் ‘ஈடுகள்’ முக்கிய இடம் பெறுகின்றன. ஈடு என்பது என்ன, எதைக் கொண்ட ஈட்டுக் கணக்கு வருகிறது போன்ற தகவல்களையும் நூலாசிரியர் போகிற போக்கில் விளக்கியுள்ளார்.