இந்தப் புகைப்படங்களில் நான் எங்கே இருக்கிறேன்? சிவப்பு வட்டத்திற்குள் இருப்பவர் பிரபுதேவா.
நடிகர் + இயக்குநர் பிரபு தேவா தி ஹிந்துவில் வாரந்தோறும் பத்தி எழுதுகிறார். அதில் கிடைத்தவை இவை இரண்டும்:
1. இதுதான் நான் 12: அழுதா அழுவாங்க… சிரிச்சா சிரிப்பாங்க!
சென்னையில் நான் படிச்ச சாந்தோம் ஸ்கூலுக்கும், அதுக்கு பக்கத்துல இருந்த செயின்ட் பீட்ஸ் ஸ்கூலுக்கும் இடையிலதான் ரோஸரி கேர்ள்ஸ் ஸ்கூல் இருக்கு. பாய்ஸ் ஸ்கூலுக்குப் பக்கத்துல ஒரு கேர்ள்ஸ் ஸ்கூல் இருந்தா, அந்த வயசுல மனசுக்கு ஜாலியா இருக்கத்தானே செய்யும்! அதுக்கும் போட்டியா ஒரு பாய்ஸ் ஸ்கூல் எதிர்ல இருந்தா எப்படி? அதுமட்டுமல்ல; நாங்க கிரிக்கெட்ல பெஸ்ட் காட்டினா, செயின்ட் பீட்ஸ் பசங்க ஃபுட்பாலில் சாமர்த்தியம் காட்டுவாங்க. நாங்க தமிழ் பேசுவோம். அவங்க இங்கிலீஷ் பேசுவாங்க.
இப்படி சின்னச் சின்ன எதிரெதிர் விஷயங்கள் இருந்தன. அதனாலேயே ரெண்டு ஸ்கூல் பசங்களுக்கும் எப்பவும் ஒரு கேப் இருக்கும். இதையெல்லாம் ஒருத்தரோட ஒருத்தர் பார்வைகள்ல காட்டுறதோட சரி. எப்பவுமே சண்டை போட்டுக்கிட்டதே இல்லை.
2. இதுதான் நான் 13: 12பி பஸ்ஸும் 5 பைசா வெல்லமும்
சாந்தோம் ஸ்கூல் கிரவுண்ட் ரொம் பவும் பெருசு. அப்போ ஃபுட்பால்தான் என் விருப்பம். கிரவுண்ட்ல ஒரே நேரத்துல 800 பேர் விளையாடலாம். பதினோறு பதினோறு பேராப் பிரிஞ்சி விளையாடு வோம். எந்த பந்து எங்களோடதுன்னு சரியா கண்டுபிடிச்சு விளையாடுவோம். பெரும்பாலும் கையில சிலிப்பரை வெச்சிக்கிட்டேதான் விளையாடுவோம். அதை யாராவது எடுத்துட்டு போய்டு வாங்களோன்னுதான்.
இப்பொழுது இந்தப் புகைப்படங்களில் நான் எங்கே இருக்கிறேன் எனத் தேடினேன். சில விஷயங்கள் புலப்பட்டது.
அ) எனக்கு எப்போதும் தரை டிக்கெட்டோ அல்லது ஓரத்தில் ஒரு இடமோ ஒதுக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களின் நடுவில் நிற்க வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் போதவில்லை. மண்ணில் உட்காருவதை பெரும்பாலானோர் கௌரவமாக உணராததால், அது மட்டுமே எடுத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.
தொடர்புள்ள பதிவு: Shut Up and Sit Down – The New Yorker
ஆ) என்னை நானே அடையாளம் தெரிந்து கொள்ளுமளவுக்கு சுய ப்ரேமை இன்றி இருந்திருக்கிறேன். கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்ப்பது; சின்ன வயதில் நிறைய நிழற்படம் எடுத்து ஒப்புமைக்காக சரி பார்த்து, பள்ளி க்ரூப் போட்டோவில் தெரிந்து கொள்வது எல்லாம் சாத்தியம் இல்லை.
தொடர்புள்ள பதிவு: The Freedom of Young Photographers – The New Yorker
இ) ஜெயலலிதா எங்கே உட்கார்ந்து இருந்தாரோ, அங்கேதான் அமர்ந்து இருக்கிறேன்.
உ) பிரபுதேவாவினால் நிறைய விஷயங்களைச் சொல்ல இயலவில்லை. ‘ஒரு நாள் இரவில்’ போல் திரைப்படமாக எடுத்தாலோ அல்லது புனைவினாலே மட்டும் சாத்தியப்படக்கூடிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அவர் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர். பத்தாம் வகுப்பிற்குப் பிறகு எங்களுக்கு கால்பந்து ஆர்வம் போய் வேறு விஷயங்களில் நாட்டம் வந்து சுற்றுலா சென்றது என்று நிறைய சங்கதிகளை எழுதினால், ’இவன் தான் பாலா’ ஆகக்கூடிய அபாயங்களைத் தவிர்த்துவிடுகிறார்.