Imposter syndrome is a predictor of success. If you feel like a fraud, research suggests you may be on the right track.
இந்தியாவில்தான் நாடி ஜோசியம், ஜாதகம், பரிகாரம், கைரேகை, கிளி சீட்டெடுத்தல் என்று நினைத்திருந்தேன். அமெரிக்காவும் அதே கதிதான் என்பது ஜார்ஜ் டபிள்யூ புஷ் (பெரியண்ணன்) நீதிபதிகள் என்னும் கிளிகளின் சீட்டுக்களில் ஜெயித்தபோது தெரிந்தது. அதன் பின் நேற்றைய தேர்தலில் யேசு கிறிஸ்துவின் உதவியுடன் டெட் குரூஸ் (ஜோ. டி. குரூஸ் மாதிரியே பெயர் கொண்டிருப்பவர்) ஜெயிப்பது வரை உறுதியாகிக் கொண்டே இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக அறிவியல்தனமான இரு புத்தகங்கள்:
Medical Medium: Secrets Behind Chronic and Mystery Illness and How to Finally Heal by Anthony William
அறிவியல் என்றால் கவனிப்பது, கவனித்ததை அளவெடுப்பது, அளவுகளைப் பரிசோதிப்பது, பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதன் அடிப்படையில் இறுதி முடிவை நிரூபிப்பது என்பார்கள். அந்தோணி வில்லியம் அந்த வகையைச் சேர்ந்தவர் அல்லர்.
கியானு ரீவ்ஸ் நடித்து ‘கான்ஸ்டாண்டின்’ என்று ஒரு பேய் + சாமியார் + கிறித்துவ பூதம் படம் வரும். அதில் வருவது மாதிரி நான்கு வயதில் அவருக்கு முன் அரூப உருவங்கள் தோன்றி அவருக்கு ஞானப்பால் கொடுத்திருக்கிறது. நான்கு வயதிலேயே நேராகச் சென்றார். பாட்டியின் மார்பில் கை வைக்கிறார். ‘பிஞ்சிலேயேப் பழுத்திடுச்சு’ என்போமே… அது போல். அப்பொழுதே கையடித்து சொல்லி இருக்கிறார்: “நுரையீரல் புற்றுநோய்” (தமிழில் சொல்லவில்லை; லங் கேன்சர் என்று ஆங்கிலத்தில் மழலையாகச் சொன்னதை கற்பூரம்… சாரி… மெழுகுவர்த்தி அடித்து சத்தியம் செய்கிறார்).
அடுத்த நாள் காலையே மருத்துவமனைக்கு பாட்டியை அழைத்துச் செல்கிறார்கள். சரியான கருநாக்கு. அப்படியே பலித்துவிட்டது.
நீங்கள் வில்லியமை நினைத்தவுடன் தரிசிக்க முடியாது. அதற்கு பெரிய க்யூ நிற்கிறது. லாட்டரியில்தான் நோயாளிகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் தேர்ந்தெடுத்தாலே உங்களின் பிணி பரிபூரண குணமடையும். அறுவை சிகிச்சையின்றி மருந்தின்றி மாத்திரையின்றி குமுதம் பிரார்த்தனை கிளப் இல்லாமல் நலமடைவீர்கள்.
இவருக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று சொல்லவும் வேண்டுமோ! நீங்கள் விசுவாசியா?
Cure: A Journey into the Science of Mind Over Body by Jo Marchant
எஸ்.வி. சேகரின் ‘காட்டுல மழை’யில் சில புகழ்பெற்ற கடிஜோக்குகள் உண்டு. கீழ்கண்ட சம்பவத்தைப் படித்தால் வடிவேலு, விவேக் கூட நினைவிற்கு வரலாம்.
”முதல் நாள் கொதிக்கும் தண்ணீரில் கால் வைத்தேன். என்னால் அதைத் தாங்கவே முடியவில்லை.
அடுத்த நாள் என்னுடைய பிடித்தமான விளையாட்டை ஐ-பேட் எடுத்து விளையாடிக் கொண்டே, அதே கொதிக்கும் வென்னீரில் காலை வைத்தேன். என்ன ஆச்சரியம்… சூடே தெரியவில்லை!”
திருநாவுக்கரசர் அன்றே பாடினார்:
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
காதலன் காதலியிடம் மயங்குகிறான். சிலர் ஃபேஸ்புக்கில் விழுகிறார். சிலர் ஆசானிடம் அடிமையாகிறார்கள். மனவசியம் எனலாம். தொழுகையில் லயிக்கலாம்.
எல்லாம் நம் சிந்தையில்தானே இருக்கிறது. பூதம் இருக்கிறது என நினைத்தால் அது நம்மை விழுங்கும். பூச்சிதான் இருக்கு, என்று நினைத்து எல்லாப் பிரச்சினைகளையும் நசுக்கு என்கிறார்.
’ஏமாறாதே… ஏமாற்றாதே’ என்று வாத்தியார் பாடியிருக்கலாம். கடைபிடிக்கவில்லையே!
திருக்குறள் : 1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.