திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு – நூலில் இருந்து ஒரு நறுக்
நான் கேரளத்தில் எம்.ஏ. முதலாண்டுக்குச் சேர்ந்த போதுதான் இலக்கியம் என்பது கதை, நாவல், கவிதை இவற்றைத் தாண்டிய ஒன்று என்பது விளங்கியது. ஆனால், அதற்குப் பிறகு எவ்வளவோ வாசித்தாலும் இன்றும் ‘இதுதான்’ என்று ஒரு வாக்கியத்தில் இலக்கியம் பற்றிச் சொல்ல என்னால் முடியவில்லை.
அதனால்தான் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு மல்லாடியவர்களைப் பற்றி கேள்விப்படும் போது அவர்களைச் சந்திக்க விரும்பியிருக்கிறேன். இலக்கியம் என்றால் என்ன என்ற தலைப்பில் ழான் பவுல் சார்த்தர் எழுதிய நூலை என் அலமாரியில் எப்போதும் வைத்திருக்கிறேன்.
இன்றுவரை தமிழில் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியோடு வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் க.நா.சு. என்பது என் கருத்து. வேறு ஏதாவது வேலை செய்தால் இந்தக் கேள்வி மனசிலிருந்து மறைந்துவிடும் என்று பயந்து எந்த வேலையும் செய்யவில்லை க.நா.சு.
க.நா.சு.வை முதன்முதலில் நான் சந்தித்தது பெங்களூரில் நண்பர் ப.கிருஷ்ணசாமியின் வீட்டில். க.நா.சு. ஒரு வாரத்துக்கு மேல் வந்து தங்கினார். கையோடு ஒரு சிறிய போர்ட்டபிள் டைப்ரைட்டர் கொண்டு வந்திருந்தார். ஓய்வு நேரத்தில் அதில் ஆங்கிலத்தில் டைப் செய்தது தவிர எப்போதும் பேசிக் கொண்டேயிருந்தார் என்பது என் நினைவு. இன்னுமொரு நினைவு வெள்ளைக் கதராடையில் எப்போதும் காட்சி தந்தார்.
இந்தக் காலத்துக்குச் சற்று முந்தி நான் அப்போது தமிழகத்தில் இருந்த நக்சலைட்டுகள் ஓரிருவரைப் பார்த்திருக்கிறேன். அதாவது எமர்ஜென்சி நடைமுறையில் இருந்த காலகட்டம். அவர்கள் ரொம்பவும் கோபமாக இருந்தார்கள் என்பது என் கருத்து.
இந்த இரண்டு ரக மனிதர்களும் மற்ற தமிழர்களைவிட தனிமைப்பட்டு ஒரு வகையான இரகசிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மற்ற தமிழர்கள் தமிழ்சினிமாவில் தங்கள் தங்கள் கனவுகள் நிறைவேறியதைக் கண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கனவை நிறைவேற்றியவர்களுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டு போடக் கற்றிருந்தார்கள்.
ஆனால், க.நா.சு. அப்படிப்பட்டவர் அல்லர் என்பது அவரைப் பார்த்தவுடன் தெரிந்தது. அவருடைய வெள்ளைக் கதர் ஜிப்பாவும் (அவர் காலத்தில் எழுத்தாளர்கள் ஜிப்பா போட வேண்டும். புதுமைப்பித்தன் புகைப்படம் ஜிப்பாவோடுதான் எப்போதும் பிரசுரிக்கப்பட்டது), அவருடைய கறுப்புக் கண்ணாடியும் என்னை அவர் வேறுபட்டவர், வேறொரு காலத்திலிருந்தும் வேறொரு இடத்திலிருந்தும் வந்தவர் என்று நினைக்க வைத்தது. அதுபோல் அவருடைய ஆங்கிலம்.
நன்றி: திராவிடம் – தமிழ்த் தேசம் – கதையாடல்: ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு
எழுதியவர் – தமிழவன்
முதல் பதிப்பு: 2014
வெளியீடு: அடையாளம்
விலை: ₹ 180
பக்கங்கள்: 237