நான் அமெரிக்காவில் கால் பதித்த பிறகுதான், இந்த நாள், மார்ட்டின் லூதர் கிங் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1983இலேயே கால்கோள் இடப்பட்டு, 1986இல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பரவினாலும், அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களும் 2000ஆவது ஆண்டில்தான் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை எம்.எல்.கே. தினம் என்று அனுசரிக்கத் துவங்கினார்கள்.
இந்தியாவில் எங்கு திரும்பினாலும் மகாத்மா காந்தி சாலை. தமிழகத்தில் அண்ணா தெரு. அமெரிக்காவில் 730 நகரங்களில் இவர் பெயரைத் தாங்கிய தெருக்கள் இருக்கின்றன.
கடந்த வருடம் வெளியாகிய ‘செல்மா’ படத்தின் இயக்குநருடன் உரையாடும் பகுதியை கீழே பார்க்கலாம்:
வாக்குரிமைக்காக போராட்டம். சம உரிமைக்காக குரல் எழுப்புதல். காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த விழிப்புணர்வு முழக்கங்கள். பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்களை ஒருங்கிணைத்தல். வன்முறையில் இறங்க விரும்புவோரை வலியுறுத்தி சத்தியாகிரகத்தில் ஈடுபட வைத்தல். கிறித்துவ மதத்தின் அடிப்படையிலான சமூக அறத்தையும் புதிய ஏற்பாட்டில் இருந்து அன்பையும் எடுத்துக் கொண்டாலும், அதை கிழக்கத்திய சித்தாந்தங்களான காந்தியின் அரசியல் எழுத்தையும் புத்தரின் ஒவ்வொரு உயிரும் மற்றொரு உயிரினத்தோடு ஒன்றி ஒருங்கிணைந்து வாழும் மதக் கோட்பாடுகளையும் தன் சொற்பொழிவுகளில் முன்வைத்தல்.
மார்டின் லூதர் கிங்கின் அஹிம்சை கொள்கை என்றால் என்ன என்பதை ஆறு வகையாகப் பிரித்து முன் வைக்கிறார்:
1. அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல: கோழைகளால் தைரியமாக இயங்க முடியாது. நீங்கள் தைரியமானவராக இருந்தால் மட்டுமே, சத்தியாகிரகத்தில் ஈடுபடவும். வெறும் பயத்தினாலோ, ஆயுதம் கிடைக்காததாலோ, வன்முறையின்மையை நீங்கள் கடைபிடிக்கக் கூடாது.
2. எதிரியை தாழ்வாகக் காட்ட நினைப்பதோ தோற்கடிப்பதோ அகிம்சையின் நோக்கம் அல்ல: எதிரியை நட்புறவு பேணவைத்து, எதிரியாக நினைக்கவைக்காமல், நம்முடைய நிலையைப் புரிய வைப்பதுதான் வன்முறையின்மையின் நோக்கம் ஆகும். பகிஷ்கரிப்பதும் ஒத்துறையாமை இயக்கமும் நம்முடைய வழிமுறை ஆகும். ஆனால், அந்தப் பாதையில் நம் நோக்கம் நிறைவேறியவுடன் எதிரியின் அகம் திறந்தவுடன் அவருடன் கைகோர்த்து வாழ்வதற்குப் பழக வேண்டும். அகிம்சாமுறை சத்தியாகிரகத்தின் இறுதியில் அன்பார்ந்த சமூகம் உருவாகி இருக்கும். துப்பாக்கி எடுத்து நடக்கும் வன்முறையின் முடிவில் பழிவாங்கும் வெறுப்பு மேலோங்கியிருக்கும்.
3. நம்முடைய எதிரி — தீவினைகளின் ஏவுகணைகள் அல்ல; அந்தப் பொல்லாத்தனமான வழிமுறை மட்டுமே நம் எதிரியாகும்: எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவானேன்? எங்கோ, எவரோ தீங்கான செய்கைகளை வழிவகுத்து, அந்தத் தீவினைகளுக்கு காரியகர்த்தாவாக களத்தில் வேறொருவரை ஏவுகிறார்கள். நம்முடைய குறிக்கோள் அந்தப் பொல்லாத சித்தாந்தத்தை முறியடிப்பது மட்டுமே. இனவெறி என்பதைத் தாண்டி, இந்தப் பிரச்சினை அக்கிரமத்திற்கும் தர்மநீதிக்கும் நடுவே நடக்கும் போராட்டமாக அகிம்சாவாதி உணர்வான். வெள்ளைக்காரனை வீழ்த்துவது அல்ல குறிக்கோள். வெளிச்சத்தின் பாதையில் அனைவரையும் இட்டுச்செல்வதே நம் குறிக்கோள்.
4. தப்பித்துச் செல்லாமல் இருப்பது: ஜெயில் தண்டனையோ… லத்தியடியோ… அதைத் தாங்கும் மனோதிடம் வாய்த்தவரே அகிம்சாவாதி. எப்படி திருப்பி அடிக்கலாம் என்று எண்ணாதே!
5. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை: குண்டு வீசி எதிரியை அழிக்க நினைப்பது புறவயமான வன்முறை. அதே சமயம், மனத்தினுள்ளே வன்மமும் குரோதமும் கொழுந்துவிட்டெரிவது அகவயமான வன்முறை. வெறுப்பைக் கக்கும் பிரச்சாரங்களையும் அடுத்தவரை அழிக்கத் தூண்டும் கோபதாபங்களையும் அகிம்சாவாதி தூண்டமாட்டான். அவன் வழி அன்புமயமானது. குறள்மொழியில் சொல்வதானால்
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈ.னும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.பொருள் : அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
காதலியிடம் அன்பு பாராட்டுவது போல், தோழமையிடம் நட்பு பாராட்டுவது போல், நம்மை வெறுத்து ஒதுக்குபவரிடம் எவ்வாறு பாசமாகப் பழகுவது? அது இயலாத செயல் அல்லவா?
இங்கு Agape எனப்படும் கிரேக்கத் தத்துவத்தை மார்டின் லூதர் கிங் ஜூனியர் முன்வைக்கிறார். இவ்வாறு விரும்புவதற்கு எவ்விதமான லாபநோக்கங்களும் கிடையாது. எதிரியின் மீதான விருப்பம் கொள்வதற்கு அவர் மீதான பற்றோ, அல்லது அவரின் பொருள் மீதான வாஞ்சையோ காரணம் கிடையாது. இது பற்றற்ற பாசம். அவரின் மீது பரிதாபம் கலந்த பாசம். அடுத்தவரின் நன்மைக்காகவே நாம் உருவாக்கி கொள்ளும் பாசம். பாசம் வைப்பதால் நமக்கு நயா பைசா நன்மை கிடைக்காது. எனினும், அந்தத் தருவாயிலும் பாசம் மட்டுமே தோன்ற வைக்கும் அகவயமான அகிம்சையை நீங்கள் உங்கள் எதிரியின் மீது பாய்ச்ச வேண்டும்.
பௌத்தத்தைப் பொறுத்தளவில் அதன் மையக் கோட்பாடாக அன்பும் கருணையும் உள்ளன. மெத்தா(அன்பு), கருணா (கருணை), முதிதா (கருணை அன்பின் விளைவாகத் தோன்றும் மகிழ்வும் களிப்பும்) , உபேகா (அமைதி, சாந்தி) என்பன மிக அழுத்தமாக அதில் வலியுறுத்தப்படுகின்றன. இங்கு உபேகா எனக் குறிப்பிடப்படுவது, வெறுப்பு, பகைமையைப் போக்கி உள்ளம் அமைதியும் நிம்மதியும் அடைவதாகும். உள்ளமானது கோபம், வெறுப்பு, பகைமை உணர்விலிருந்து மீட்சிபெற்ற நிலையிலேயே அன்பும் கருணையும் உருவாக முடியும் என பௌத்தர் கூறுகின்றார். உள்ளத்தில் நல்ல சிந்தனைகளைக் கொண்டிருப்பது வெறுப்பை நீக்குவது, அன்பு, கருணை என்பன உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். கோபமும் வெறுப்பும் பகைமை உணர்வும்- மன உளைச்சல், மோதலுக்கு இட்டுச் செல்கின்றன என்பது புத்தரின் கோட்பாடாகும்.
6. நீதி சார்ந்தே இந்த உலகம் இயங்குகிறது: உங்களுக்கு வருங்காலத்தின் மீது நம்பிக்கை இருந்தால் அறவழியில் போராடுவீர்கள். இப்போது அடிவாங்கினாலும், நாளை நமதே என்னும் விசுவாசம் இருந்தால் மட்டுமே உடனடியாக தடியெடுத்து எதிராளியை அடிக்காமல் இருக்க முடியும். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். மதநம்பிக்கை வேண்டாம். ஆனால், நல்லது மட்டுமே வாழ்வாங்கு வாழும்; அகிலத்தில் தீயது அழிந்து பொசுங்கும் என்று உணர்வீர்களானால் அகிம்சையின் பக்கம் நிற்பீர்கள். அதற்கு என்ன பெயராக வேண்டுமானாலும் இருக்கலாம். பிரம்மம் என்றுகூடச் சொல்லலாம்.