பிரையன் ஈனோ இங்கே கதை சொல்கிறார். அந்தக் கதையை நான் இவ்வாறு என் மொழியில் சொல்லிப் பார்க்கிறேன்:
1978ஆம் வருடம். நியு யார்க் நகரத்தில் இருந்தேன். அரசல் புரசலாக எனக்கு அறிமுகமாகியிருந்த அந்தப் பணக்காரரின் புதுமனைப் புகுவிழாவிற்கு அழைப்பு வந்திருந்தது. குண்டும் குழியுமான சாலைப் பயணம். வாடகைக் கார் ஓட்டுனர் என்னை சந்தேகாஸ்தபமாகப் பார்த்துக் கொண்டேதான் வண்டியோட்டினார். போகும் வழியி்ல் வீட்டின் வெளிச்சுவர்களில் விவகாரமான மொழியில் கரியினால் மிரட்டப்பட்ட கிறுக்கல்களும் காணக்கிடைத்தது.
இறுதியாக அந்தப் பாழடைந்த பழைய பின்னி மில்ஸ் கட்டிடம் போல் சிதிலமடைந்த கோடவுனில் வண்டியை நிறுத்தினார். அதன் வாயிற்படிகளில் இருவர் மயங்கி உலகமறியாத போதையில் கிடந்தனர். தெருவில் வேறு அரவமே இல்லை.
”நாம தப்பா வந்துட்டோம்னு நெனக்கிறேன்”, என்று ஈனஸ்வரத்தில் சொல்லிப் பார்த்தேன்.
அவர் சரியான விலாசத்திற்குத்தான் கொண்டு வந்து சேர்ந்த்திருந்தார். என்னுடைய நண்பன் உற்சாகமாகக் கூவினான், “மேல் மாடி!!”. எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை பாக்கி இருந்தது. அவன் விளையாட்டுப் பையன். அழைப்பு மணியை அடித்துவிட்டு, திறக்கும்போது, “எல்லாம் நிஜம்னு நம்பிட்டியா…” என்று வேடிக்கை மாயம் செய்யப்போகிறான் என கற்பனை செய்துகொண்டேன்.
மின்தூக்கி க்ரீச்சிடும் அபாய ஓசையுடன் அசைந்தாடி அதல பாதாளத்தில் தள்ளும் பிரக்ஞையுடன் வந்து சேர்ந்தது. லிஃப்டில் இருந்து வெளியே வந்தால், தகதகவென இழைக்கப்பட்ட கோடானுகோடி மினுக்கும் மாளிகை அரண்மனைக்குள் கால் வைத்தேன்.
எனக்கு விளங்கவில்லை. இவ்வளவு படோடாபமாய், இத்துணை பணம் வாரியிறைத்து, இந்த மோசமான பகுதியில் எதற்காகக் குடியேற வேண்டும்? விருந்துபசரிக்கும் அவனின் குடும்பத்தலைவியிடம் கேட்டே விட்டேன்: “உங்களுக்கு இந்த டஞ்சன் பிரதேசம் பிடித்திருக்கிறதா?”
“நான் குடியிருந்த வீடுகளிலேயே, இந்த இடம்தான் பெஸ்ட்!
“ஆனால், வெளியில் பார்த்தால் பயமாக இருக்கிறதே?”
“ஓ… பேட்டையைச் சொல்கிறீர்களா! அது வெளியில் அல்லவா இருக்கிறது!?!”
நியு யார்க் என்றால் இந்த மனநிலைதான். இந்த மனோபாவம்தான் என்னை மீண்டும் மீண்டும் நியு யார்க் நகரத்திற்கு இழுக்கிறது. எல்லாமே கொண்டாட்டம்; எதிலும் வேகம்; இப்பொழுதைய தருணத்தைக் கொண்டாடுவோம்; நாளை நம் நாளோ… நமன் நாளோ!
இந்த தடவை நான்கு நாள் நகரத்தில் கழிக்க முடிந்தது.
- முதல் நாள்: விட்னி அருங்காட்சியகம்
- இரண்டாவது நாள்: செண்ட்ரால் பார்க்
- உலக வர்த்தக மையம் + 9/11 நினைவுச் சின்னம்
- டைம்ஸ் சதுக்கம் & அலாவுதீனும் அற்புத விளக்கும்
நான்கையும் பற்றி தனித்தனியே எழுத வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் இயக்குநர் இளமுருகுவையும் எழுத்தாளர் அரவிந்தன் கன்னையனையும் சந்தித்ததையும் நண்பர் டைனோ மற்றும் அவரின் மனைவியின் அறுசுவை விருந்தோம்பலையும் அவர்களின் உபசரிப்பையும் டைனோ வீட்டில் உண்ட நளபாக விருந்தையும் விவரிக்க வேண்டும்.
இன்ஷா நியு யார்க்.
நியூயார்க் நகரம் விழித்திருக்கும் நேரம்னு பாடிருக்கலாமே.
நண்பர் இளமுருகைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
நீங்க மேல சொன்ன கதையும் ரொம்ப நல்லாருந்தது. 🙂