”உங்களை சந்திக்கணுமே…” என்றவுடன், நீச்சலுடையை முதன் முதலில் அணியும் சினேஹா போல் சிணுங்கலுடன், “அதெல்லாம் வேணாம் சார். நான் ரொம்ப பேச மாட்டேன்.” என்று தொலைபேசியில் செல்லமாக மறுத்தார்.
தவணை அட்ட்டையில் கடன் வாங்கியது தொடர்பாக நுகர்வோர் எண்ணை அழுத்தினால், ஸ்வாதீனமான குரலில் பெண்மணி பேசுவார். எண் இரண்டை அழுத்தவும்; எண் நான்கை அழுத்தவும் என்று உடனடியாக பதிலளிப்பார். அவ்வாறே எனக்கு பாஸ்கர். நான் அனுப்பும் அஞ்சல்களுக்கு உடனடியாக பதில் போடுவார். தீர்மானமான மறுவினையாக இருக்கும். ஆக்ஷன் கிங் என்னும் அடைமொழிக்குப் பொருத்தமானவர். டூரிங் சோதனை செய்து பார்த்தால், நட்பாஸ் என்பவர் ஒரு ரோபோ, என்னும் முடிவுதான் வரும் என்று நான் தெளிவாகவே அறிந்து வைத்திருந்தேன்.
எனவே, இதுவரை மின்னஞ்சல் மூலமாகவே பேசிக்கொண்டிருந்தவரை தொலைபேசியில் பிடித்தது, அவர் எந்திரன் – 2, அல்ல… நிஜம்தான் என உறுதி செய்தது.
எங்காவது இனிப்பை வைத்துவிட்டு சென்றுவிடுங்கள். கொஞ்ச நேரத்தில் ஒரேயொரு எறும்பு மோப்பம் பிடித்து வரும். அந்தர் பல்டி அடித்து, உள்ளே நுழையும். செல்லும் பாதையையும் அங்கே கிடைக்கும் பதார்த்தங்களையும், தன் புற்றுக்குச் சென்று தோழர்களிடம் சொல்லும்.
பாஸ்கர் இந்த எறும்பு.
ட்விட்டரில், வலைப்பதிவில், வலை இதழில், மொழி பெயர்ப்பில், செம்மையான கட்டுரைகளாக, முழுமையான குறிப்புகளாக, தமிழுக்குக் கொணர்வார்.
அதே எறும்பை நீங்கள் இன்னொரு இடத்தில் பார்த்து இருப்பீர்கள். கரப்பான் பூச்சியையே சுமந்து வரும். அதன் இறக்கையை, உடலை, பகுதி பகுதியாகப் பிரித்து, தன்னுடைய சிற்றெரும்பு தலையில் தாங்கி இழுத்து வரும்.
அந்த எறும்பும் பாஸ்கர்.
எங்காவது நல்ல கட்டுரை, வித்தியாசமான பார்வை, புதுமையான எண்ணம் என ஆங்கிலத்தில் கிடைப்பதை சமூக ஊடகங்களில் பகிர்வதோடு நில்லாமல், அதை தமிழாக்கம் செய்து தந்து கொண்டேயிருக்கிறார். திங்கள்கிழமைக்குள் ஆயிரம் வார்த்தைகள் வேண்டும் என்று ஞாயிறு இரவு சொன்னால் கூட, “இன்னும் ஒரிரண்டு மணி நேரத்தில் சரக்கு வந்துரும்” என்று உறுதிமொழி மட்டும் தராமல் செழுமையான, சரளமான மொழிமாற்றம் செய்பவர்.
அவரை நேற்று பார்க்க முடிந்தது. ஒரு பயங்கரவாதியை, அதி தீவிர வீர்யத்துடன் செயல்படும் தீவிர செயலாளியை, அடுத்த தலைமுறையில் தமிழை நிலைநிறுத்தி இணையத்தில் பரவலான ஆக்கங்கள் உருவாக்குவதில் மொழி அரக்கனாகவும் விளங்குபவ்ரை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி.
என்ன கொடுமை ஸார் இது, ஐஸில் ரேஞ்சுக்கு ஹைப் பண்ணிட்டீங்களே!
மொத்தமாக ஆமோதிக்கிறேன். பாஸ்கர் ஒரு விஷயத்தில் நம்முடன் ஈடுபட்டிருக்கிறார் என்றால் நிம்மதியாக மூச்சு விடலாம. எப்படியும் அதை நன்றாக சமயத்துக்குள் முடித்துக் கொடுத்துவிடுவார். இந்தத் தீவிரவாதியை நான் இன்னும் சந்திக்க இயலவில்லை.
பாஸ்கர் ஒரு தீவிரவாதி என்பது தெரியாமலேயே இத்தனை நாள் பழகியிருக்கிறேன். இப்போது இதைப் படிக்கும் போது எம்.ஜி.ஆர் படங்களில் வருகிற சி.ஐ.டி ஆக இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. எதற்கு வம்பு? இனி சந்திக்கும் போது, அவர் எழுதுகிற எல்லாவற்றையுமே படித்ததாக அவரிடம் சொல்லி விடுகிறேன்.
@suka: எம்ஜியார் படங்களில் இவர் CIDயாகவரும்போது ஒரு கருப்பு மச்சம் வைத்துக் கொண்டு வருவார். அதனால்தான் யாருக்கும் தெரியாது இவர் யாரென்று.