கமலின் தூங்காவனம்: விமர்சனம்


நந்தவனம் x பாலைவனம்

  • அஜீத் நடிப்பில் ‘வேதாளம்’ வெளியான தீபாவளி அன்றே கமலின் ‘தூங்காவன’மும் வெளியாகி இருப்பது, காக்டெயில் விற்கும் இடத்தில் மாக்டெயில் அருந்துவது போல் அமைந்திருக்கிறது. விசைப்பலகை இடுக்குகளில் ஒளிந்திருக்க வேண்டிய துகள்கள், விஸ்வரூபமெடுத்து தமிழ் சினிமாவை ’வேதாளம்’ மாதிரி நிரப்பினால், அந்த பாலவனத்தில், கொஞ்சம் போல் துளிர்க்கும் சோலைவனமாக தூங்காவனம் இருக்கிறது.
  • சந்தானபாரதி இயக்கிய ‘கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு’ படத்தில் பாடல்கள் கிடையாது. தூங்காவனத்திலும் பாடல்கள் இல்லை. எனினும், இரண்டுமே பாடல்கள் நிறைந்த படங்களை விட நந்தவனம்.

Posters_Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

தீவனம்

  • நிரலியை சி ஷார்ப்பில் எழுதிக் கொடுத்தால், அதே நிரலியை பைத்தான், ரூபி, ஜாவா போன்ற கணிமொழிகளில் எவ்வாறு எழுதுவது என்று செய்து பார்ப்பது கணி நிரலாளர்களுக்கு உவப்பான விஷயம். கொஞ்சம் சவாலான விஷயமும் கூட. கமல் இந்த மாதிரி உருமாற்றி, அதை தமிழ் மசாலா சேர்த்து நமக்கு தீவனம் ஆக்குகிறார்.
  • பார்வையாளர்களுக்கு விஷயம் வைக்க வேண்டும் என்று குவிமையம் இல்லாமல், சகல இடங்களுக்கும் பயணித்து குழப்பிக் கொள்ளாமல், எளிமையான பயணத்தில், சுருக்கமான நேரத்தில், பல இடங்களுக்கும் பாய்ந்து பறந்து திக்கின்றி திணறாமல், தீவனம் போடுகிற படம்

சஞ்சீவனம்

  • சோலையில் சஞ்சீவனம் என்பது உணவகம். இங்கே சாப்பாட்டுக் கடையில் பாதி படம் அரங்கேறுகிறது. சமையல் பொருள்களைக் கொண்டு சண்டைக்காட்சி நடக்கிறது.
  • சஞ்சீவியாக கமல் இந்தப் படத்திலும் உலாவுகிறார். அசல் படமான ஃபிரெஞ்சு படத்தில் இருந்து சற்றே விலகி, பெண்கள் கமலை மொய்க்கிறார்கள். வயிற்றில் குத்துப்பட்டாலும், சாவடி வாங்கினாலும் நிமிர்ந்து மீண்டெழுகிறார்.

சீவனம்

  • வேலையில் இருப்பது சம்பாத்தியத்திற்கா? பணியில் அமிழ்ந்து கிடப்பது மணவாழ்வை முறிக்குமா? குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா? போன்ற ஜீவனம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் படம்.
  • இன்றைய இளைய தலைமுறை போதைக்கும் மதுவிற்கும் கொண்டாட்டத்திற்கும் அடிமையாகி இருப்பதை அமைதியாக சொல்லிச் செல்கிறது.

Thungavanam_Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

வனம்

  • கூகுள் கொண்டு சகல தகவல்களையும் அறியும் காலத்தில், முன்னாள் மனைவிக்கு தொலைபேசி போட்டு, மருந்துகளையும் ஊசிகளையும் கேட்டறியும் நாயகன் சி.கே.டி, என்ன சி.ஐ.டி.?
  • மகனின் திறன்பேசியில், எங்கே இருக்கிறான் என்று கண்டறியும் எளிய ஜி.பி.எஸ். கூட இல்லாமல், என்ன ஐஃபோன்?

பிருந்தாவனம்

  • பூஜாகுமாரும் ஆண்ட்ரியாவும் இல்லாமல் இருப்பதே பிருந்தாவனம். மது ஷாலினி அளவாக நடிக்கிறார். வெள்ளித்திரைக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறார். மிடுக்கான த்ரிஷா அதனினும் சிறப்பு.
  • ஃப்ரெஞ்சு அசலில் கொஞ்சம் போல் உங்கள் ஊகத்திற்கு விட்டுச் சென்றிருப்பார்கள். தமிழில் தெள்ளத் தெளிவாக போட்டுடைப்பது, திரையரங்கு வருகையாளரை மட்டம் தட்டும் புவனம்.

யெளவனம்

  • நேற்று ஓய்வுபெற்ற 61 வயது காவல்துறை அதிகாரி மாதிரி கமல் இல்லாத யெளவனம். முன்னாள் மனைவி ஆஷா ஷரத்தைப் பார்த்தாலும் நாற்பதுகள் போல் தெரியும் யெளவனம். இந்த மாதிரி உடம்பை வைத்துக் கொள்வது தனி உஜ்ஜீவனம்
  • பாரதியை இன்று படித்தாலும் புத்துயிர் பெறுகிறோம்; மலைக்கள்ளனையும் தூக்கு தூக்கியையும் இன்று பார்த்தாலும் ரசிக்கிறோம். அது போல் பிறமொழிக்காரர்களிடம் போட்டுக் காண்பித்தாலும் காலா காலத்திற்கும் சுவாரசியமாக்கும் சொரூபம் கொண்டிருக்கும் படம்.

தாருகாவனம்

தாருகாவனத்தில் பல முனிவர்கள் வேள்வி செய்து கொண்டும் தவமியற்றியபடியும் வாழ்ந்தார்கள். தங்களது தவத்தின் வலிமையால் முக்தியினை நாடினார்கள். முனிசிரேஷ்டர்களுடைய மோனத்தையும், குருபத்தினிகளது கற்பையும் குலைக்க நாராயணரின் துணையோடு சங்கரன் சதி செய்கிறான். மும்மூர்த்திகளில் இருவரையும் ஒழித்துக் கட்ட அபிசார வேள்வியை நிகழ்த்தினார்கள். திடீரென்று வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து மகா பயங்கரமான உருவத்தோடு ஒரு புலி உருமியபடி வெளியே வந்தது. அக்னியிலிருந்து அடுத்தடுத்துத் யானை, மான், பூதங்கள், மழு, முயலகன், கொடிய நாகங்கள் என்று ஏவினார்கள். ஏவப்பட்ட பூதங்கள் சிவனின் பூதகணங்கள் ஆகின. மழு அவருக்கே படைக்கலனாகி விட்டது. முயலகன் சிவனின் காலடியில் சிக்கி நகரவே முடியாதவனானான். நாகங்களுக்கு காளி, காளாங்திரி, யமன், யமதூதன் என்று நான்கு விதமான நச்சுப்பற்கள். அவற்றிலிருந்து விஷத்தைப் பீய்ச்சி அடித்தபடி அவை ஆக்ரோஷமாக சிவன் மீது பாய்ந்தன. ஏற்கெனவே, கருடனுக்கு அஞ்சித் தன்னிடம் சரண் புகுந்த பாம்புகள் அவருக்கு ஆபரணமாக விளங்கி வந்தன. இப்போது வந்த கொடிய நாகங்களையும் தம் கையில் பற்றி ”உம் குலத்தவர் ஏற்கெனவே இங்கே என்னுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் கூடி வாழுங்கள்!” என்று கூறி அந்த நாகங்களைத் தமது கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞாண் போன்ற ஆபரணங்களாக அணிந்து கொண்டார்.

Insomnia என்னும் கேளிக்கை மையமே தாருகாவனம். அங்கே இளைஞர்களும் இளைஞிகளும் களிவெறிப் பொருள் கொண்டு கூத்தாடி போதையின் துணையோடு முக்தியினை நாடினார்கள். அங்கே நிலவும் மயக்கத்தைப் போக்க காவல்துறை உயரதிகாரியான திவாகர் களமிறங்குகிறார். அவரை எதிர்க்க போதைத்தடுப்பு அதிகாரியான த்ரிஷா தோன்றுகிறார். திரிஷாவின் மேலிடமான கிஷோர் வருகிறார். அவர்களை ஆபரணமாகக் கொண்டு எவ்வாறு வில்லன்களை எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.

Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

உபசீவனம்

  • சௌந்தர்யலஹிரியையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் எம்.எஸ். சுப்புலஷ்மியின் குரலுக்காகவும் அதன் மந்திர உச்சாடனத்திற்காகவும் கேட்பவர்கள் உண்டு. அட்சரம் பிசகாமல் சொல்பவர்களும் உண்டு. ஆனால், அர்த்தம் உணர்ந்து, பொருள் புரிந்து, அனுபவித்து வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவ்வளவு பேருண்டு? அதே போல், சுவாரசியமான படங்களை பார்ப்போர் நிறைய உண்டு. அதனை தமிழ் நாயகர் கொண்டு, மொழிமாற்றுவோர் கூட நிறைய உணடு. ஆனால், பொருத்தமான சினிமாவாகத் தேர்ந்தெடுத்து, அதன் கடுமையான வழிமுறைகளை தமதாக்கி, தமிழுக்குக் கொணர்வோர் மிகச் சிலரே உண்டு. அதற்கு, கமலின் தூங்காவனம் ஒரு சான்று.
  • கிரேசி மோகனின் கத்தி வசனமும் கிடைக்கிறது. காவல்துறையின் தகிடுதத்தங்களும் சத்தமின்றி பூடகமாக வெளிப்படுகிறது. விவாகரத்தான வாழ்க்கையில் மகனின் மேல் செலுத்தும் நேசமும் காணக்கிடைக்கிறது.
  • தான் மட்டும் தனியே எல்லா சட்டகத்திலும் காணக் கிடைத்தால் செல்ஃபி காலத்தில் புளித்துப் போகும் என்றறிந்த கமல், உமா, ஜெகன், பிரகாஷ்ராஜ், கிஷோர் என எல்லோருக்கும் கதாபாத்திரமும் அவர்களுடைய குணச்சித்திரமும் தனித்துவமாகத் தெரியுமாறு அமைத்திருக்கிறார். தானும் வந்துபோகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.