தூங்காவனம் – ஸ்லீப்லெஸ் நைட்


கமல் படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு நிறைய பிரயத்தனம் வேண்டும். 1980ல் ஸ்டான்லி க்யூப்ரிக் ‘தி ஷைனிங்’ என்ற படம் எடுத்தார். அந்தப் படத்தில் என்னவெல்லாம் குறியீடுகள் இருந்தன, அந்தக் காட்சியமைப்பின் உள்ளே பொதிந்திருக்கும் விஷயங்கள் என்னவென்று சொல்வதற்காகவே ரூம் 237 என்ற ஆவணப்படத்தை சிரத்தையாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
Thoonga_VanamTelugu_-Kamal-Cheekati-Rajyam

உத்தம வில்லனுக்குக் கூட இந்த மாதிரி நிறைய கதை கட்டி விட்டிருக்கிறார்கள். வருடத்திற்கு மூன்று படம் என்றானபின், ஜெயமோகன் எழுதும் மஹாபாரதம் போல் கமலின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் விலாவாரியான அலசல் தேவையிருக்காது.

பாபநாசம் போல் உன்னைப் போல் ஒருவன் போல் ஃப்ரெஞ்சுப் படமான ‘Nuit blanche’ம் அவ்வாறே ஒரு மறு-பதிப்பு. இந்தப் படத்தில் கமலைப் பார்ப்பதற்கு பதில் ஃபிரெஞ்ச் அசலை பார்ப்பது மேல் என்பது போன்ற விமர்சனங்கள் நாளைய தினங்களில் ஃபேஸ்புக்கில் உலாவுவதற்கு முன், அசல் படம் குறித்து பார்த்து விடுவோம்.

வேட்டையாடு விளையாடு‘ போன்ற துள்ளல் போலீஸிற்கும், தூங்காவனம் படத்தின் காவல்துறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது நம்பவியலா சாகசங்கள் புரியும் கூரையேறி கோழி பிடிக்கும் இராமாயணம். ‘ஸ்லீப்லெஸ் நைட்’ உள்ளே அழுகிக்கிடப்பதை மெதுவாக அரங்கேற்றும் சண்டைப்படம்.

மிகையுந்துரத்தவெம்பிணியுந் துரத்த
வெகுளியான துந்துரத்த
மிடியுந்துரத்த நரை திரையும் துரத்தமிகு
வேதனைகளுந் துரத்த
பகையுந்துரத்த வஞ்சனையுந் துரத்த
பசியென் பதுந்துரத்த
பாவந்துரத்த பதிமோகந்துரத்த
பலகாரியமுந் துரத்த
நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளும் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை
நமனுந் துரத்து வானோ ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

திருக்கடையூர் அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) நினைவிற்கு வருகிறார். அவருக்கு இன்னல் வரும்போது அந்தாதி இயற்றினார். இன்றைய காலத்துப் பசங்களை அடுத்த மாதத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்த்தினால் கூட அந்தாதியை ‘கிட்-ஹப்’பில் தேடி, திருடத் தெரியாத அசமஞ்சங்கள் ஆக இருக்கிறார்கள். அவரோ, கீழே குழி, சுட்டெரிக்கும் நெருப்பு ஜ்வாலைகளைக் கக்க, அம்பிகை வருவாளோ என்னும் பயமும் துரத்த, அவர் பாட்டுக்கு தன் வேலையை, பாடல் புனைவதை செய்து முடிக்கிறார்.

ஸ்லீபெலெஸ் நைட் நாயகன் வின்செண்ட்டும் அம்பிகை பட்டர் போல், கடும் பிரச்சினைகளுக்கு நடுவில் சாந்தமாக செயல்படுகிறான். ஆனால், அபிராமி பட்டரைப் போல் உத்தமன் அல்லன். கொஞ்சம் கெட்டவன்; போதை மருந்து தடுப்புப் பிரிவில் இருந்தாலும், அதற்கு மாறாக, சொந்த ஆதாயத்திற்காக செயல்படுபவன். கள்ளக்கடத்தல் நடப்பதாக கிடைத்த துப்பை வைத்து, அந்த பரிமாற்றத்தைத் தடுத்து, போதைப் பொருள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறான்.

போதைப் பொருளின் அசல் உரிமையாளர் வெகுண்டு எழுகிறார். கதாநாயகன் வின்சென்ட்டின் மகனைக் கடத்துகிறார். தனக்குச் சொந்தமான போதைப் பொருளை தன்னிடமே ஒப்படத்துவிட்டால், வின்சென்ட் – தன்னுடைய மகனை மீட்டெடுக்கலாம்.

வின்சென்ட் மீது நம்பிக்கையில்லாமல், அவனுடைய காவல்துறையின் உயரதிகாரிகள், வின்செண்ட்டை பின் தொடர்கிறார்கள். ஆனால், அந்த உயரதிகாரியும் அத்தனை உத்தமரில்லை. அவரும் இன்னொரு வில்லன். வின்செண்ட் விற்பதாக இருந்த போதைப் பொருளை, வின்சென்ட்டின் காவல்துறை உயரதிகாரியே, திருடி, தனதாக்கப் பார்க்கிறார். அதற்கு, அப்பாவி த்ரிஷா போல் ஒரு அழகியை நியமிக்கிறார்.

த்ரிஷாவும் காவல்துறை உயரதிகாரியும் கமலை… அல்ல… வின்செண்ட்டை துரத்துகிறார்கள்.

தன்னுடைய மகனைத் தேடி, மதுபான சாலையெங்கும் வின்சென்ட் தேடியலைகிறான்.

வின்சென்ட் பதுக்கி வைத்திருக்கும் போதை சரக்கை, கள்ளக்கடத்தல்காரர்கள் தேடியலைகிறார்கள்.

மூவரும் ஒருவரை ஒருவர், மூர்க்கமாகத் தாக்குவது, உண்மையை அறிவது, கொஞ்சம் பாசத்தைக் கூட அவ்வப்போது பொழிவது எல்லாம் நடக்கிறது. தந்தை என்னும் பாசத்தைச் சொல்வதும் செயலில் காட்டி நிரூபிப்பதும் வின்சென்ட்டிற்கு அவசியம். புதியவளாக, பெண்ணாக, இளையவளாக இருந்தாலும் நேர்மையான கொம்பராக இருப்பது த்ரிஷாவிற்கு அவசியம். போதைப் பொருளைக் கடத்தி பணம் குவிப்பது அதன் உரிமையாளருக்கு அவசியம். மதுசாலை நடத்துபவருக்கு தன் உணவகத்தின் கெத்து அவசியம். சகுனியாக எட்டப்பனாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி அவசியம். தாய்க்கு தன் மகனின் உயிர் அவசியம்.

இவர்களுக்குள் நடக்கும் போராட்டத்தை அன்றாட வாழ்வின் உபகரணங்களைக் கொண்டு அவர்கள் வெட்டிக் கொண்டு சாவதை கத்திக் குத்துக்களோடும், சுவாரசியமான சண்டைக்காட்சிகளுடனும் ஸ்லீப்லெஸ் நைட் காண்பிக்கிறது.
Sleepless_Night_French_Movies_Films_Thoongavanam_nuit-blanche-2
குழப்பமான சினிமா என்பது கவர்ச்சிகரமான மிக்சர் போல் மாதுளை காக்டெயில் போல் மயக்குறச் செய்யும். கோயன் சகோதரர்களின் ‘பர்ன் ஆஃப்டர் ரீடிங்’ கூட இதே வகையிலான ‘குழப்ப சினிமா’க்கள்தான். ஆனால், கோயன் சகோதரர்கள் மெதுவாக ஆற அமரச் செல்வார்கள். அவர்களுக்கு அவசரம் கிடையாது.

ஆனால், ஸ்லீப்லெஸ் நைட் போன்ற படங்கள் வேறு வகையான குழப்பங்களில் திளைப்பவை. எது நிஜம்… எது பொய்… எது சாத்தியம்… எது நடக்கவியலாது… யார் எங்கே இருக்கிறார்கள்… எவர் எங்கே வருவார்கள்… என்ன நடக்கும்… எப்பொழுது ஒழுங்கு பிறக்கும்? எல்லோரும் எல்லாவிடங்களிலும் பார்த்தாலும் யாருக்கும் எவரும் தெரிவதில்லை. இந்த உலகம் என்பது சந்து பொந்துகள் நிறைந்த ஹோட்டல் போல் அறைகளும் பாதைகளும் நிறைந்த கேளிக்கை மண்டபம். அங்கே ஒரு வாயிலில் நுழைந்தால் பார்; மற்றொரு வாயிலில் வெளியேறினால் சமையலறை. அவையிரண்டிற்கும் நடுவே ஓராயிரக்கணக்கானோர் கூத்தாடுகிறோம். சத்தத்தில் சுற்றிவர என்ன நடக்கிறது என்றறியாமல் திளைக்கிறோம். புறத்தோற்றத்தில் ஆடையின் நிறத்தில் மயங்குகிறோம். கேட்பதற்கு ஜென் தத்துவம் போல் ஜேகே சொற்பொழிவு போல் குழப்பம் ஏற்படலாம். படம் பார்த்தால் தெளிவு பிறக்கும்.

Sleepless_Night_Thoonga_Vanam_Kamal_nuit_blanche

One response to “தூங்காவனம் – ஸ்லீப்லெஸ் நைட்

  1. பிங்குபாக்: கமலின் தூங்காவனம்: விமர்சனம் | Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.