விமர்சனம் + அபிப்பிராயம் ≠ நம்பிக்கையின்மை


சொல்வனம் – வெ.சா. நினைவாக இதழ்

வெளியிட்டிருக்கிறது. அதை முன் வைத்து…

“என் அனுபவம் என்பது நான் எதை பொருட்படுத்த ஒப்புக்கொள்கிறேன் என்பதைப் பொறுத்தது. நான் கவனிக்கும் பொருட்கள் மட்டுமே என் சிந்தையை வடிவமைக்கிறன.”
மனவியல் கொள்கை: வில்லியம் ஜேம்ஸ்

எடுத்த விஷயங்களில் உண்மையான கருத்துகளைச் சொல்வதால் அவநம்பிக்கையையும் சலிப்பையும் இடையறாத கடுமையுடன் வெளிப்படுத்தாமல் இருக்க குழந்தைகளுக்கும் குடுகுடுகிழவர்களுக்கும் மட்டுமே முடிகிறது. நடுவில் இருக்கும் நம் எல்லோரும் இரு புறமுமாக வடமிழுக்கும் போட்டியில் அறிவார்ந்த சிந்தனையையும் நப்பாசையையும் மோதவிட்டு பலப்பரிட்சை செய்கிறோம்.

நப்பாசை இல்லமல் செய்யப்படும் அறிவார்ந்த சிந்தனை என்பது வெறுமையை நோக்கி இட்டுச் செல்லும். அறிவார்ந்த சிந்தனையின் அடிப்படையில் எழாத நப்பாசை, முட்டாள்தனமான மூடநம்பிக்கை ஆகிவிடும்.

எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பது விரக்தியில் கொண்டு போய் விடுகிறது. சூம்படைதல் என்றால் என்ன? நிர்க்கதியே கதி என்று எண்ணங்கொள்ளுவதும், அந்த கதியை மாற்ற முடியாது என்பது சப்பைக்கட்டு வாதங்களை முன்வைத்து தற்காத்துக் கொள்வதும் சூம்படைந்தவரின் குணம். வெற்று நம்பிக்கையில் எதிர்காலத்தில் நல்லதே நடக்கும் என்று நம்புவது எவ்வளவுக்கு எவ்வளவு அறிவிலித்தனமோ, அத்தனைக்கு அத்தனை சூம்படைந்தலும் பயனற்ற எதிர்வினையாக இருக்கிறது.

‘எல்லாம் நன்மைக்கே’ என்று நினைத்துவிட்டால், நாளைய விளைவுகளை நம் செய்கைகள் கொண்டு மாற்றலாம் என்னும் நம்பிக்கை அற்றுப் போகும். ஒரு குழுவாக, ஓரினமாக, தனி மனிதராக முன்னேற, அறிவார்ந்த சிந்தனையும் நப்பாசையையும் பூட்டிய இந்த இரட்டை மாட்டுச்சவாரி அவசியம்.

இதையெல்லாம் வெங்கட் சாமிநாதன் உணர்ந்து இருந்ததால்தான் தன்னுடைய கடுமையான விமர்சனத்தை தமிழ்ச்சூழலில் முன்வைத்தார். செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அளவாக ஊற்ற வேண்டும். அப்போது மட்டுமே அந்தச் செடி தழைத்தோங்கி வளரும். அதிகம் ஊற்றினால் அழுகிவிடும். கொஞ்சமாய் ஊற்றிக் கொண்டிருந்தால், உள்ளே காய்ந்துவிடும். இதைத்தான் வெ.சா. செய்தார்.

தற்காலத்திற்கேற்ப இன்னொரு உவமையையும் பார்க்கலாம். வலைப்பக்கங்களுக்கு மேல்நிலை தரவுகளாக அந்தந்தப் பக்கங்களில் தலைப்பில் சில பகுப்புக்களையும் குறிச்சொற்களையும் தரவேண்டும். சரியான அளவில் தரவேண்டும். அளவுக்கதிமாக கொடுத்தால், கூகுள் / பிங் /யாஹூ போன்ற தேடுபொறிகள் குழம்பிப் போய் நிராகரித்துவிடும். மிகவும் குறைவாகக் கொடுத்தால், தேடுபவர்களுக்குப் பொருத்தமான விஷயமாக தேடல் முடிவுகளில், அந்த வலைப்பக்கம் வந்து சேராது.

எதற்காக இந்த இன்னொரு உவமை?

இன்று ஃபேஸ்புக்கின் தேர்ந்தெடுப்புகளுக்குக் கட்டுப்பட்டு தலைவணங்கி நாம் வாழ்கிறோம். ஃபேஸ்புக் நிரலி நமக்கு என்ன பிடிக்கும், நம்முடைய நண்பர்களின் செய்திகளில் எதைக் காட்டலாம்; செய்தித்தாள்களில் இருந்த எந்தச் செய்தியை நீங்கள் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து வழங்குகிறது. ஃபேஸ்புக் போன்ற ஊடகங்களுக்கு சில குறிக்கோள் இருக்கிறது: மீண்டும் மீண்டும் வரவழைக்குமாறு தூண்டிலிட்டு, தன் பக்கங்களை மயங்கியிருக்க வைத்து, கட்டிப் போடுவது. அப்போது அவர்கள் எந்தவிதமான ரசனை உங்களுக்குப் பிடிக்குமோ அதனையேத் தீனி போட்டு, உரம் கொடுத்து வளர்த்தெடுப்பார்கள். நீங்கள் அறிவாளிதான்; ஆனால், நீங்கள் உபயோகிக்கும் பயன்பாட்டுச்செயலிகளும் நிரலிகளும் ஆழமில்லாத அறிவுக்கூர்மையற்ற மந்தை உலகிற்குள் உங்களை உழல வைக்கும்.

விமர்சகரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? அவரின் பணிகள் என்ன – ஈ.பி. வொயிட் சொல்லக் கேட்போம்: “எழுத்தாளருக்கு எது முக்கியமாகப் படுகிறதோ எதைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டும். எது அவரின் இதயத்தைத் துடிக்க வைக்கிறதோ, எது அவரின் சிந்தனையை மொய்ம்புறச் செய்கிறதோ, எது அவருடைய தட்டச்சு விசையை பொறி பறக்கச் செய்கிறதோ, அதைக் குறித்தெல்லாம் அக்கறை கொள்ளவேண்டும். எனக்கு அரசியல் குறித்து கருத்துச் சொல்லும் கடமை கிடையாது. சமூகத்தைக் குறித்து அச்சாவதில் எனக்கு பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். ஏனோதானேவென்று மேம்போக்காக பட்டும் படாமல் இருப்பது எழுத்தாளருக்கு அழகல்ல; சுத்தமாக இருக்கவேண்டும். உண்மையைச் சொல்லவேண்டும்; உயிர்பெற்றெழுமாறு வார்த்தைகள் அமையவேண்டும்; முழுமையாகவும் துல்லியமாகவும் எழுதவேண்டும். தன் சஹிருதயரை உயர்த்த வேண்டும்; கீழே இறக்கக் கூடாது. எழுத்தாளர் என்பவர் வெறுமனே வாழ்க்கையை பிரதிபலிக்கவும் பொருள் கொள்ளவும் எழுதுபவர் அல்லர்; உயிரை உணர்த்தவும் வாழ்க்கையை வடிவமைக்கவும் போராடுபவர்.

தன் சமூகத்தை, தன்னுடைய உலகத்தை எழுத்தின் மூலமாகப் புரிந்து கொள்ள வைப்பது முதல் கடமை. அதே சமயம் உத்வேகம் தரவேண்டும்; வழிகாட்டியாகவும் ஒளிபாய்ச்சவேண்டும்; சவால்களுக்கு அறைகூவல் விடுத்து பிசகு சொல்லி ஆஷேபணைகளை எழுப்பதுவும் ஆகும்.

எழுத்தாளரின் பாத்திரம் என்பது பாதுகாவலர் போல், காப்பாளர் போல்… எனலாம். அறிவியலும் தொழில்நுட்பமும் அந்தப் பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறதேயொழிய மாற்றவில்லை. எழுதும் பணியைச் செய்யும் செயலாளராக என்னைக் கருதும் நான், நம்மை வசியப்படுத்தும் எதையும் பாதுகாக்கும் பணிக்கு நியமிக்கப்ப்பட்டிருக்கிறேன். அதிசயிக்கப்படும் அந்த வஸ்து எத்தனை சின்னஞ்சிறியதாக இருந்தாலும், காணாமல் போகாமல் பத்திரமாகப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். சொக்கவைக்கும் எதுவும் தொலையாமல் காவல் காக்கிறேன் என்று இதையெல்லாம் எளிதில் தெரிவிக்கமுடியாது.”

வெ.சா.வின் கருத்துலகை சுந்தர ராமசாமி நான்கு பகுதிகளாகப் பிரிக்கிறார்:

1. நமது இலக்கியம், கலைகள், தத்துவம், சிந்தனை ஆகியவற்றின் நேற்றைய, இன்றைய நிலைகளை ஆராய்ந்து அவற்றின் வெறுமையை அம்பலப்படுத்தும் கருத்துகள்.

2. இலக்கியம் பற்றியும் பிற கலைகள் பற்றியும் தன் பார்வையை முன்வைக்கும் கட்டுரைகள்.

3. கலைஞனின் இயக்கத்திற்குச் சூழல் ஆற்றும் பங்கு.

4. கலை உலகை ஊடுருவி உண்மைக்கு எதிராக இயங்கும் சக்திகளைப் பற்றிய விமர்சனம்.

கலைப் பார்வைக்கும் தொழில்திறனுக்குமுள்ள வேற்றுமையை வற்புறுத்தி, தொழில்திறனை அதற்குரிய ஸ்தானத்தில் பின்னகர்த்தி கலை உணர்வுகள் செழுமைப்படும் சூழ்நிலையை உருவாக்குவதே வெ.சா.வின் ஆதார முயற்சி.

இதை முன்வைத்து வெங்கட் சாமிநாதனைக் குறித்த விமர்சனங்களை நான்கு மேற்கோள்களில் வகுக்கலாம்:

1. உள்வட்டம் x வெளிவட்டம்: ஹண்டர் எஸ் தாம்ஸன்: “புறநிலையில் இயங்குவது என்பது போன்ற பம்மாத்து எதுவும் இல்லை. புறவயமான கருத்தியல் என்ற சொற்றொடரின் அடிப்படையில் ஆடம்பரமான முரண்பாடு இருக்கிறது.”

2. ஆளுமை / நான் என்னும் அகங்காரம்: ஜே டி சாலிங்கர் குறித்து டேவிட் ஷீல்ட்ஸ்: “தன்னுடைய படைப்பின் மூலமாக சாலிங்கர் என்னும் நாயக கதாபாத்திரமாக வாசகர் வரித்துக் கொண்டதை அவர் அதீதமாக கொழுந்துவிட்டெறியச் செய்தார். தன்னுடைய புனைவில் கண்டித்ததை, நிஜ வாழ்க்கையில் கொண்டாடிக் கொண்டிருந்தார்.”

3. எண்ணிக்கை / எண்ணங்களை எழுத்தாக்கும் திறமை: வன்னேவார் புஷ்: ”இது நம்முடைய கூட்டு நினைவகம். துல்லியமாகவும் இருக்க வேண்டும்; உத்தரவாதமும் ஏற்க வேண்டும். கலாச்சார மீத்தங்கலின் சாறெடுத்துத் தர வேண்டும்”

4. தீதும் நன்றும் பிறர்தர வாரா: மரியா பொப்போவா: ”மற்றவர்களைக் குறித்து என்னவெல்லாம் கட்டுக்கதைகளை நீங்களை கற்பனை செய்கிறீர்களோ, அவையனைத்தும் மற்றவர்களை விட உங்களின் கற்பிதங்கள் குறித்து அதிகம் உணர்த்தும்.”

வெ.சா. இணையத்தில் எழுதியதை வெங்கட்ரமணன் தொகுத்து இருக்கிறார். இந்தத் தொகுப்பில் மட்டும் 858 பதிவுகள் இருக்கிறது. அது தவிர இன்னுமொரு 858ஆவது அவருடைய அறுபதாண்டு காலப் பதிவுகளில் அச்சில், கையெழுத்தில் இருக்கும்.

அவர் எழுத வந்த ஐம்பதுகளும் அறுபதுகளும் எழுத்தாளர்களுக்கு பொற்காலம். திபெத்தில் இருந்து தலாய் லாமா ஓடி வருகிறார். சீனாவுடன் சண்டை; கல்கத்தாவில் எல்லோரும் சீன மொழி கற்கத் துவங்கும் அளவு பயம் மேலோங்கி இருந்த காலகட்டம். பாகிஸ்தானுடன் விதவிதமான போர்கள் எல்லாம் நடந்தது. லால் பகதூர் சாஸ்திரி வந்தார்; மறைந்தார். பதினைந்து வருடமாகத் தயாரிப்பில் இருந்த ‘முகல் ஏ அசம்’ வெளியாகிறது. இந்தியாவில் வெறும் பதினெட்டு சதவிகித மக்களுக்கே படிப்பறிவு இருந்த காலகட்டத்தில் வெ.சா. இலக்கிய உலகில் தன் விமர்சனங்களுடன் உள்நுழைகிறார்.

vesa_solvanam_Vesaa_Venakt

ஜெயமோகன் எழுதிய “வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல்” -இல் இருந்து:

இலக்கியமும் கலையும் அடைந்துள்ள நுண்மையையும் ஆழத்தையும் புறக்கணித்து விட்டு பெருவாரியான மக்களுக்கு என ஓர் இலக்கியத்தையோ கலையையோ உருவாக்கிவிடவே முடியாது என்று அவர் (வெ.சா.) வாதிடுகிறார். ராஜ்கபூரின் சினிமா ருஷ்யாவில் பரவலாக ரசிக்கப்படுவதைப் பற்றிப் பேசும் சாமிநாதன்:

”நம்மூர் முற்போக்குகள் (இது ஒரு விசித்திர ஜாதி) போதிக்கிற சித்தாந்தங்களைக் கொண்டு பார்த்தால் கோடிக்கணக்கான ரஷ்ய மக்களைத் தன்பால் ஈர்த்துள்ள ராஜ்கபூர்தான் ‘மக்கள் கலைஞர்’ ஆகவும் அக்கோடிகள் தாம் ‘பாட்டாளி மக்கள்’ எனவும் ட்ஸைக்கோவஸ்க்கியையும், ஐஸன்ஸ்டைனையும் புடோவ்கினையும், ஸாஸ்டகோவிச்சையும் ரசிக்கும், ஒரு சில ஆயிரம் ரஷ்யர்கள் ‘மக்களிடமிருந்து’ அன்னியப்பட்டு போன பூர்சுவா மேல்தட்டு வர்க்க உயர்குழுக்கள் எனவும் எனவே மக்கள் விரோதிகள்’ ஆகவும ஆகிவிடுவார்கள்” (இரண்டு தலைமுறைகளுக்கிடையில்கொல்லிப்பாவை” ) என்று கூறுகிறார்.

கலையின் இயல்பு மேலும் மேலும் நுட்பத்தையும் ஆழத்தையும் தேடுவதே. அது தன்னிச்சையானது. கலைஞனின் அக இயக்கத்தால் மட்டுமே முன்னெடுத்துச் செல்லப்படுவது. அதைக் கட்சிப்பிரச்சாரத்திற்கான கருவியாகப் பார்க்கும்போது அந்தத் தன்னிச்சையான இயக்கம் முற்றாகவே அழிக்கப்படுகிறது. அதன் பிறகு அமைப்பு உருவாக்கி அளிக்கும் கோஷங்களை எதிரொலிப்பதாக அது மாறிவிடுகிறது. இந்நிலையில் அந்தக் கலையும் இலக்கியமும் மனித இதயங்களைத் தீண்டி எழுப்பும் சக்தியை இழந்துவிடுகின்றன. எவரையுமே அவற்றால் ஈர்க்க முடிவதில்லை. ஆகவே அவை பரப்பியக் கலையின் கேளிக்கை உத்திகளைத் தாங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றன. தாங்களும் ஒருவகை பரப்புகலையாக பரப்பிலக்கியமாக மாறிவிடுகின்றன. முதல்வகைப் பரப்பிலக்கியம் வெறும் கேளிக்கை; இது பிரச்சாரம் கலந்த கேளிக்கை.

இந்த விவாதத்தின் விளைவாகவே சாமிநாதன் உள்வட்ட வெளிவட்டக் கோட்பாட்டுக்குச் செல்கிறார். … உண்மையில் சாமிநாதன் உள்வட்டத்தில் நிகழும் எந்த ஒரு கலையிலக்கிய உச்சமும் காலப்போக்கில் வெளிவட்டத்திற்கும் சென்று சேரும் என்றே சொல்கிறார். உள்வட்டத்து இலக்கியம்தான் வெளிவட்டத்தில் வெகுஜன வாசிப்புக்காக உருமாற்றம் கொள்கிறது. ஆகவே ஒரு சிறு வட்டத்திற்குள் நிகழும் இலக்கிய, கலைவளர்ச்சி என்பது அர்த்தமில்லாத ஒன்றல்ல. ஒரு சிறிய மக்கள் கூட்டத்திற்கு மட்டும் உரியதுமல்ல. அது அனைவருக்கும் உரியதுதான். அது மக்கள் விரோதமானதல்ல, அது மக்களுக்காகவே நிகழ்கிறது. இவ்வளவுதான் வேறுபாடு.

வெங்கட் சாமிநாதனின் வீச்சைப் பார்க்கும்போது கார்ல் சாகன் காஸ்மோஸ் தொடரில் சொன்னது நினைவுக்கு வருகிறது: “மனிதர்களால் மாயாஜாலம் செய்யமுடியும் என்பதற்கு புத்தகங்களில் ஆதாரம் இருக்கிறது. தட்டையான பொருள்; மரங்களால் தயார் ஆனது; ஆங்காங்கே கருப்புக் கிறுக்கல்கள் கொண்டது. ஒரேயொரு தரிசனம் போதும். இன்னொருவரின் மூளைக்குள் சென்றுவிடுவீர்கள். அவர் நேற்று இறந்தவராகக் கூட இருக்கலாம். ஆனால், இன்றும் அவர் உங்களுடன் உரையாடுகிறார். நேரடியாகவும்… அமைதியாகவும்…”

சொல்வனம் – வெ.சா. இதழ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.