நீல் கெமன் எழுத்துக்கள் சுவாரசியமானவை. இங்கே தந்தைமை குணத்தைப் பற்றி பேசுகிறார். உருக்கமான சொற்பொழிவில் சிரிப்பும் வருகிறது. நகைச்சுவைக்கு நடுவே அழுகைத்துளிக் கூட வந்துவிடலாம்.
அவர் சொல்லும் சமபவங்களில் சில என் வாழ்வில் நடந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாடும்போது, இரு அணிகளுக்கு ஆள் எடுப்பார்கள். புளியங்கொட்டை போல் உள்ளங்கைக்குள் அடங்கும் சிறிய விஷயத்தை இரு அணியின் கப்தான்களும் எடுத்துக் கொள்வார்கள். அதை ஒருவர், ‘எந்தக் கை’யில் வைத்திருக்கிறார் என்று இன்னொரு அணித்தலைவர் சொல்ல வேண்டும். சரியாகச் சொன்னால், முதலில் அழைக்க ஆரம்பிக்கலாம். தன் அணியில் எவர் விளையாடுவார் என்று ஒவ்வொருவராகக் கூப்பிடுவார்.
அவன் அந்த அணி; இவன் அந்த அணி என்று இரு பக்கமும் எல்லோரும் போய்விடுவார்கள். கடைசியில் இருவர் இருப்பார்கள். ஒரு பக்கம் சோடா பாட்டில் கண்ணாடியுடன் நான். இன்னொரு பக்கம், என்னைவிட நாலு வயது இளையவளான எதிர்வீட்டு இலச்சுமி. அப்போது, அவளைத் தேர்ந்தெடுத்து, என்னை விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையாகச் சொல்வார் எதிரணியின் கேப்டன்.
கையில் திறன்பேசி இல்லாமலே, கற்பனைக் கோட்டையாக நகவிரலில் நகாசு செதுக்கி சிந்தனைவயப்பட்டிருக்கும்போது, ‘மொட்டை…. மொட்டை’ என்று எவரோ கதறுவது — கிணற்றுக்குள் இருந்து கூவுவது போல் அரசல்புரசலாகக் காதில் விழும். நிமிர்ந்து பார்த்தால், டென்னிஸ் பந்து என்னை நோக்கி விரையும். அதை அவதானித்து, கீழே விழுந்தபின் தூர்தர்ஷனில் பார்த்த அவார்டுப் படத்தில் வாசலில் கோமூத்திரமும் சாணமும் போடும்வரை காத்திருந்து, பின் ‘பஷூ’ என்று அழைக்கும் மலையாளக்காரர் போல், ‘பந்து’ என்று சொல்லும்போது, “ஏண்டா… உன்னை எனக்குக் கொடுத்தாங்க” என்று திட்டும் அணித் தலைவரை நினைவுகூறும் சமபவம், இவருக்கும் நிகழ்ந்திருக்கிறது.
அவர்… பெரிய, முக்கியமான, புகழ்பெற்ற, விருதுகள் குவிக்கும் எழுத்தாளர். நான் இன்னும் உங்களுடன் பதிவில் பேசிக் கொண்டிருக்கிறேன்.