தந்தையர் தினத்திற்காக பரிசு என்ன தரலாம் என்று மகள் கேட்டாள். புத்தகக் கடையில் கொஞ்ச நேரம் என்னை தனியே விட்டு வைக்குமாறு சொன்னேன். சனிக்கிழமை மாலை அன்று அத்தனை பேரை பார்ன்ஸ் அண்ட் நோபிள் கடையில் பார்த்ததில் மழையைக் கண்ட கலிஃபோர்னியா போல் மகிழ்ச்சி ஏற்பட்டது. இலக்கின்றி மேய ஆரம்பித்தேன்.
முதலில் புத்தம் புதிய அதிவிற்பனை நூல்களைப் பார்த்தேன்.
”Make Something Up: Stories You Can’t Unread By Chuck Palahniuk” அட்டைப்படம் கவர்ந்தது. ‘ஃபைட் கிளப்’ (Fight Club) எழுதியவரின் கதைத் தொகுப்பு. புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் பிரகாசமான பதின்ம வயது மாணவர்கள் புத்தம்புது போதை மருந்தின் தாக்கத்தில் வீழ்ந்து கிடப்பதை ‘Zombies’ சொல்கிறது என்கிறார்கள். தந்தையின் அந்திமக் காலத்தின் கடைசி நிமிடங்களில் சொல்லக்கூடாத நகைச்சுவையை ஜோக்கடிக்க விரும்புவதை ‘Knock, Knock’ல் எழுதுகிறார். தன்னிடம் தசைப்பிடிப்பை நீக்க வரும் சாகக்கிடப்பவர்களுக்கு ‘விடுதலை’ அளிக்கும் ‘Tunnel of Love’ என பலதரப் பட்ட கதை இருப்பதாக உள் அட்டை சொல்லியது.
அடுத்தது “My Fight / Your Fight by Ronda Rousey”. கருப்பு வெள்ளைப் படம் கவர்ந்தது. பெண்களுக்கான சுய முன்னேற்ற நூல். எனக்கு எப்போதுமே ரஜினிகாந்த் பிடித்தேயிருக்கும் என்பது போல், இது மாதிரி உற்சாகப்படுத்தி, ஊக்கமூட்டும் வார்த்தைகளைச் சொல்லும் வாழ்கை அனுபவப் புத்தகங்களும் பிடித்தே இருக்கிறது. இரண்டு மூன்று அத்தியாயங்கள் வாசித்தேன். ‘ஏதாவது சாதிக்கணும்ப்பா…’ என்னும் எண்ணம் கரைபுரண்டோட வைக்கிறது. சகட்டு மேனிக்கு ஃபக் உபயோகிக்கிறார். அதை விட சரளமாகத் தோல்விகளைத் தாங்கிக் கொண்டு வெற்றிப் படிக்கட்டுகளை ஏறி இருக்கிறார்.
கதைப் புத்தகம் ஆச்சு; டானிக் பூஸ்ட் ஆச்சு; கடைசியாக கொஞ்சம் இலக்கிய அரட்டை + வம்பு.

Harold Bloom delivers the chosen ones unto the multitudes. (From left: Willa Cather, Edith Wharton, Edgar Allan Poe, Philip Roth, Ernest Hemingway, and James Baldwin.)
Harold Bloom எழுதிய “The Daemon Knows: Literary Greatness and the American Sublime”. ப்ளூம் – இந்தப் பெயர் எப்படி எனக்கு அறிமுகம் ஆனது?
வழக்கம் போல் செய்திகளில் அடிபட்டுதான் அறிந்துகொண்டேன். 2004ஆம் வருடம். நவோமி வொல்ஃப் (Naomi Wolf) உடைய உள்தொடயில் கைவைத்து பல்லிளித்து அத்துமூறிய இன்னொரு பேராசிரியர் என்ற வகையில்தான் தெரிய வந்தார். பெண்களைக் கருதுவது போல்தான் இலக்கிய மதிப்பீடுகளையும் முன்வைக்கிறாரோ என்னும் சர்ச்சை தொடர்ந்தது. 1994ல் இனம், நிறம், பால் அடிப்படையில் புத்தகங்களை வகைப்படுத்தி, பல தரப்பட்ட நூல்களை வாசிக்க வேண்டும் என்னும் கருத்தை ‘அழுகுணிக்காரர்களின் போதனாசாலை’ என்று இவர் கருதினார். அது இப்போது மாறி இருக்கிறதா என்பதை இந்த நூலை வாசித்தால் தெரியும்.
நூல்கள் ஆச்சு. அடுத்தது சஞ்சிகைகள்.
ஆங்கிலத்தில் வெளியாகும் பத்திரிகைகளைப் பார்த்தால், தமிழ் எழுத்துக்களைப் போல் எக்கச்சக்கம். தமிழில் வெறும் 26 எழுத்துக்கள் மட்டும் இருந்துவிட்டு, இத்துணை நூல்களும் காத்திரமான மாதாந்தரிகளும் வெளியாகிக் கொண்டிருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்!
பார்டர்ஸ் சென்றால் மட்டுமே வழக்கமாகப் புரட்டும், மெண்டல் ஃப்ளாஸ், நி.வொய்.ஆர்.பி., எல்லாம் இப்போது நூலகத்திலேயேக் கிடைப்பதால், அதை அப்படியே விட்டு வைத்தேன்.
லஃபாம்ஸ் குவார்ட்டர்லி மனிதநேயம், அருளுடைமை (philanthropy) குறித்து, சிறப்பிதழ் வெளியிட்டு இருக்கிறார்கள்.
காரல் மார்க்ஸ், பில் கேட்ஸ், கர்ட் வானகட் என்று பல முக்கியமான எழுத்தாளர்கள். ஏதன்ஸ், எகிப்து, பாரிஸ் என்று முக்கியமான நகரங்கள். தற்கால கருத்துருவாக்கிகள் – என பலதரப்பட்ட விஷயங்களைக் கோர்வையாக ஒரே நூலில் அடக்கி இருக்கிறார்கள்.
ப்ரமத்தீயஸ் (Prometheus) பற்றிய குறிப்பு கூட கவர்ந்தது. இந்த உலகின் முதல் பரோபகாரி. கிரேக்கத் தொன்மத்தில் மிகவும் புகழ்பெற்றவர். தேவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தொழில்நுட்பமான ‘நெருப்பு செய்யும் கலை’யை உலகெங்கும் எடுத்துக் கொடுத்தவர். சாதாரண மனிதர்களுக்கும் தீ வளர்க்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். பாறையில் கட்டப்பட்டு வைத்திருக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் கொஞ்ச கொஞ்சமாக அவருடைய ஈரற்குலையை, கழுகுகள் உண்டு வரும். இந்தக் கதை கூட நமது ஊர் வேதங்களின் ’ப்ரா மத்’ (திருடுவது) என்னும் சொல்லில் இருந்து வந்திருக்கிறது. பிரா மத் செய்தவன் பிரமாத்தியஸ், என்னும் நாடகமும் இந்தக் கருப்பொருள் சார்ந்த வெளியீட்டில் இடம் பெற்று இருக்கிறது.
ஜப்பானில் வெளியாகும் ’குரங்குத் தொழில்’ (Monkey Business International) முழுக்க முழுக்க ஜப்பானிய மொழி எழுத்தாளர்களை மொழிபெயர்க்கிறது. தற்கால சப்பானிய இலக்கியத்தை அமெரிக்காவிற்கும் மேற்குலகிறகும் அறிமுகம் செய்கிறது. ஜப்பானிய எழுத்தாளர்களை அமெரிக்காவிற்கு அழைக்கிறது. வாசகர் சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறது. புனைவிலக்கிய கர்த்தாக்களையும், அவர்களின் மொழிபெயர்ப்பாளர்களையும், இவற்றை ஒருங்கிணைக்கும் வர்த்தகர்களையும், எல்லாவற்றையும் வெட்டி, ஒட்டி, கருத்துச் சொல்லும் எடிட்டர்களையும் ஒருங்கிணைக்கிறது. ஐந்து இதழ்கள் வெளியாகி இருக்கின்றன.
”நீங்க எப்படி வாழ வேண்டுமென்று போதிக்காமல், நான் ஆலோசனைகளை சொல்லித் தருவதை விட, உங்க வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற தீர்வுகளைத் தருவது முக்கியமானது” என்னும் கொள்கைப்படி மேக்ஷிஃப்ட் (Makeshift) நடக்கிறது. நைஜீரியாவின் குக்கிராமங்களில் வீட்டிலேயே தயாராகும் விமானங்களைச் சொல்கிறார்கள். மெக்சிகோவின் போதைக் கடத்தல்காரர்களோடு உலாவி, அதையும் பதிகிறார்கள். சீனாவின் கொந்தர்கள், எவ்வாறு சீனப் பெருஞ்சுவரை உடைத்து கணினி சுதந்திரத்தை நாடுகிறார்கள் என்பதையும் செய்திக் கட்டுரை ஆக்குகிறார்கள். பன்னிரெண்டு இதழ்கள் வெளியாகி இருக்கிறது.
இலக்கியம் படித்து களைத்துப் போனது மூளை. கொஞ்சம் கலை வெளியீடுகள் பக்கம் ஒதுங்கினேன்.
கலையும் மருத்துவமும் ஒருங்கிணையும் புள்ளியை ஈஸோப்பஸ் (Esopus) சிறப்பிதழாகக் கொணர்ந்து இருக்கிறது. செம தடிமனான பத்திரிகை. ஐநூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும். எல்லாத் தாள்களும் கெட்டித் தாள். நடு நடுவே இடைச் செருகலாக பதாகைகள், அந்தக் கால மருத்துவக் குறிப்புகள், வெளியீடுகள். இந்த இதழுக்குப் பங்களிப்போர் பட்டியல் மேலும் மலைக்க வைக்கிறது: ஓவியக் கலைஞர்கள், அறுவை மருத்துவர்கள் போல் விதவிதமான வைத்தியர்கள், எழுத்தாளர்கள், மனநோய் வைத்தியர்கள், மனநலக் காப்பகக்காரர்கள், மனநல சிகிச்சை தருபவர்கள், சினிமாக்காரர்கள், பல் வைத்தியர்கள், செவிலிகள், கவிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவ கலன் தயாரிப்பவர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், வைத்தியசாலை நிர்வாகிகள், மருத்துவமனை சிப்பந்திகள், இசை விற்பன்னர்கள், புகைப்பட நிபுணர்கள், உள்ளரங்கு வடிவமைப்பாளர்கள், இரத்தம் எடுப்பவர்கள், வரைபுத்தகம் எழுதுபவர்கள், பேராசிரியர்கள்…
புரட்ட புரட்ட சரித்திரமும், சிற்பமும், உருவாக்குதலும், இறப்பும், கருவியாக்கமும், உயிரும் நிறைந்து இருக்கிறது.
சபீல் ரஹ்மான் பெயரைப் பார்த்துதான் பாஸ்டன் ரிவ்யூ பத்திரிகையை எடுத்தேன். தற்கால செய்தியை அலசி இருந்தார்கள். ஒரு பிரச்சினை. அதைக் குறித்து ஒரு முக்கிய கட்டுரை. அதற்கு பத்து விதமான எதிர்வினைகளையும் மாற்றுக் கருத்துகளையும் வெளியிட்டு இருந்தார்கள்.
இன்றைய பொழுதில் வேலைக்காரர் இன்றி கொள்ளை இலாபம் சம்பாதிப்பதே இலட்சியம். கார்களே வைத்துக் கொள்ளாமல், கார் ஓட்டுனர்களையும் பணிக்கு அமர்த்தாமல், பில்லியன் பில்லியனாகப் புரட்டும் ஊபர் (Uber); ஹோட்டல்களை வைத்துக் கொள்ளாமல், தங்குமிடங்களையும் வாடகைக்கு எடுக்காமல், உலகெங்கும் விடுதிகளை நடத்தும் ஏர் பி அண்ட் பி (Airbnb); செய்தியார்களே இல்லை என்றாலும் உலகின் அனைத்து மக்களும் நொடிக்கு நொடி செய்தி அறிந்து கொள்ளும் தளமாக இயங்கும் ஃபேஸ்புக்; இதே போல் அலிபாபா, அமேசான், பே-பால் (Paypal) என பல நிறுவனங்கள் அசையாச் சொத்து வைத்துக் கொள்வதில்லை; ஊழியர்களையும் நியமிப்பதில்லை; அதனால், மிகக் குறைந்த விலையில் தங்கள் சேவையை, வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
அரசாங்கம் எப்பொழுது மூக்கை நுழைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்? மக்கள் நலன் பாதிக்கும் போது, அதற்கேற்ற சட்டதிட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோருகிறோம். நாம் அதிகம் பணம் செலவழித்து, பொருள்களை வாங்கும்போது, நம்முடைய ஆதாயத்திற்காக அரசு, அந்த அநியாயக் கொள்ளைக்கார நிறுவனத்தைக் கட்டுப்படுத்தப் போராடுகிறோம்.
ஒரு பொருளின் விலையை மட்டும் பார்த்து, அந்தத் துறையில் போதிய அளவு போட்டி நிலவுகிறதா என்பதையும் கணித்துப் பார்த்து, முடிவெடுத்தது அந்தக் காலம். இன்றோ, அந்த நிறுவனம் எவ்வாறு தன் அசுரபலத்தை பிரயோகிக்கிறது, எவ்வாறு தன் வீச்சை பயன்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து, அதன் படி முடிவெடுப்பது அவசியம் என சபீர் வாதிடுகிறார். அமேசானுக்குப் போட்டியாக கூகுள் இருக்கலாம். ஆனால், அவர்களின் அரசியல் என்ன? தூரயியங்கி முதல் பிட் காயின் வரை எப்படி அவர்கள் தங்களுடைய நுகர்வோருக்கும், சிப்பந்திகளுக்கும், பொருள் விற்போருக்கும் ஆக்கபூர்வமான வகையில் இயங்குகிறார்கள் என்பதை ஆய்ந்தறிந்து, புரிந்து கொண்டு, அதற்கேற்ப சட்டவரையறைகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.
இணையம் என்றால் என்ன என்றே ரெஹ்மானுக்கு புரியவில்லை என்பது முதல் அனைவரும் தொழிலாளிகளாவும், உற்பத்தியாளராகவும், வர்த்தகராகவும் இருக்கும் திறமூல சமூகம் எவ்வாறு வருங்காலத்தில் இயங்கும் என்பது வரை பலதரப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் தொடர்கின்றன.
இப்பொழுது மண்டை மெல்ல ‘போதும்’ என்றது. இருந்தாலும் Trans/lation என்று சொன்னதால் விட்னெஸ் எடுத்தேன்.
வாசியுங்கள்.
பிங்குபாக்: தமிழ் மின் இதழ்: ஒரு பார்வை | Snap Judgment
பிங்குபாக்: கனலி – சில எண்ணங்கள் | Snap Judgment