Activism is the rent I pay for living on the planet. -Alice Walker
மகளின் பாடப் புத்தகத்தைப் படித்தால் பல திறப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக சொன்னால், என்னுடைய பள்ளிக்காலத்தில், ஆங்கில இலக்கியத்திற்கு இன்னும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்திருக்கலாம்.
இரண்டு கவிதைகள் வாசிக்கச் சொன்னார்கள்:
1. The Song of Wandering Aengus by William Butler Yeats : The Poetry Foundation
2. The Railway Train, by Emily Dickinson
படித்து விட்டீர்களா? இப்பொழுது கேள்வி நேரம்:
இந்த இரண்டுக் கவிதைகளிலும் உண்மையும் மாயையும் எங்கு கலக்கிறது? இந்த இரு ஆக்கங்களில் இருந்து நேரடியாக விளங்கிக் கொள்ள முடிவதையும் பூடகமாகப் புரிவதையும் விவரி.
எமிலி டிக்கன்ஸனின் கவிதைக்கு ‘புகைவண்டி’ என்று தலைப்புக் கொடுக்காவிட்டால், அந்தக் கவிதை எதைக் குறித்து எழுதப்பட்டது என்பதே புதிராக இருந்திருக்கும். அந்தக் கவிதை எழுதியபோது, எமிலி, எந்தத் தலைப்பும் வைக்காமல், கவிதையை வெளியிட்டிருக்கிறார். ”அது பல மைல்கள் ஓடுவதை பார்க்க விரும்புகிறேன்” என்று துவங்கும் முதல் வரியே, அந்தக் கவிதைக்கு தலைப்பாக வைத்திருக்கிறார். எமிலி எழுதியவாறே, இந்தப் புத்தகத்தில், எமிலியின் கவிதையை தலைப்பு இன்றி கொடுத்திருந்தால், அந்தப் புதிரை விடுவிப்பதில் சுவாரசியம் இருந்திருக்கும்.
எனக்கோ, தலைப்பு தெரிந்துவிட்டது. இப்பொழுது எமிலி எதைக் குறிப்பிடுகிறார் என்பது துவக்கத்திலேயே போட்டுடைக்கப்படுகிறது. கடைசி வரியில் தொழுவம் (stable) என்கிறார். எனவே குதிரையையும் இரயிலையும் ஒப்பிடுகிறார் எனப் புரிந்து கொண்டேன். இதன் பிறகு இந்தக் கவிதையில் எங்கே அசல் முடிகிறது… எங்கே அரூபம் துவங்குகிறது என்பதில் பெரிய குழப்பம் இல்லை.
Boanerges என்னும் புரியாத குறியீடு வருகிறது. அது தெரியாவிட்டாலும் கவிதை புரியும். ( இணையத்தில் தேடியதில் கிடைத்த விடை: Boanerges என்றால் இடியின் மகன்கள். குதிரை போன்ற துள்ளலான கனைப்பைக் குறிக்க, கிறித்துவ விவிலியத்தில் யேசு கிறிஸ்து பயன்படுத்தும் சொல்லாக்கம். )
எமிலி கவிதையின் தலைப்பை சொல்லியிராவிட்டால் சுவாரசியம் இருந்திருக்கும். ‘புகையிரதம்’ என்று போட்டு உடைத்தபின் நேரடியாக ஒரே ஒரு அர்த்தம் விளங்குகிறது. உயிரற்ற புகைவண்டிக்கு, உயிரூட்டமுள்ள குதிரையை ஒப்பிட்டு கவிதை வளரும்போது நிஜம்; பிக்ஸாரும் (Pixar films) டிஸ்னியும் எடுத்த படம் போல் கார்களுக்கும் பொறிகளுக்கும் பிரத்தியேகமான உலகம் இருக்கும் என்பது கற்பனை.
அடுத்ததாக வில்லியம் பட்லர் யீட்ஸ் எழுதிய ’அலைபாயும் ஏங்கஸ்’ கவிதை. எமிலியின் எளிமையான சந்தக்கவியை விட இந்தக் கவிதை எனக்கு பிடித்து இருந்தது. நல்ல புனைவைப் படித்தால், ‘ஏதோ புரிகிற மாதிரி இருக்கு… ஆனால், சொல்ல முடியல’ என்னும் தொண்டையில் மிடறும் நிலைப்பு புரிகின்ற புன்முறுவலை தோன்ற வைக்கிறது.
வனாந்திரத்திற்குள் சென்றவன், ஏதோவொரு காட்டுக் கனியை ஓடையில் விட்டெறிய, அதற்கு கெண்டை மீன் சிக்குகிறது. அதை வறுப்பதற்கு அடுப்பு மூட்டினால், மீனோ, பருவப்பெண்ணாக மாறி, அவனின் பெயர் சொல்லி விளித்து அழைத்துவிட்டு, மரங்களின் நடுவில் ஓடி மறைந்துவிட்டது. அவளைக் கண்டுபிடிப்போம் என்னும் நம்பிக்கையில் கிழவராகிய பின்னும் தாருகாவனத்தில் தவம் போல் தேடுகிறேன் என கவிதை முடிகிறது.
இந்தக் கவிதையில் Aengus என்பது புரியாத பெயர். ( இணையத்தில் தேடியதில் கிடைத்த கதை: அயர்லாந்து நாட்டின் கெல்ட்டிய இனத்தவருக்குரிய தொன்மத்தில் ஆங்கஸ் கடவுள் ஆக இருக்கிறார். இளமைக்கும் அழகுக்கும் உரிய சம்ஸ்கிருத மன்மதன் போல் காதற் கடவுள். ஆங்கஸின் கனவில் தினசரி அந்தப் பெண்மணி வருகிறாள். அவனை பசலை நோய் பீடிக்கிறது. அவனால் தன்னுடைய காதலியை நேரில் காண இயலவில்லை. உறக்கத்தில் வரும் தேவதையைத் தேடித் தேடி அலைகிறான். அவளோ ஒரு வருடம் அன்னமாகவும் அடுத்த வருடம் மானுடப் பெண்ணாகவும் வலம் வருபவள். அவளை நூற்றுக்கணக்கான அன்னங்கள் நீந்தும் வெள்ளி நீரோடையில் மிகச்சரியாக கண்டுபிடிக்கிறான். அவளை அடையாளம் கண்டுகொண்ட அடுத்த நொடியே அவனும் அன்னமாக மாறி அவளுடன் பிருந்தாவனம் செல்கிறான். )
தன்னுடைய கவிதையின் துவக்கத்தில், யீட்ஸ், இவ்வாறு சொல்கிறார்: ‘ஏனென்றால், என்னுடைய தலைக்குள் தீப்பிடிக்கும் ஜ்வாலை கழன்று கொண்டிருந்தது’. ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தில் தணிக்கவியலா ஆர்வம் இருக்கும். அந்த நெருப்பு எரிந்து கொண்டேயிருக்கும். அந்த ஆர்வம் என்பது நிஜம். அது கொழுந்து விட்டெறியும் அக்னியாக தோன்ற வைப்பது கவியின் பொய்.
ஆயிரத்தோரு இரவுகள் போன்ற கதைகளில் மீன்கள் பெண்ணாக மாறுவதைக் கேட்டிருக்கிறேன். கவிஞர் யீட்ஸ், அந்தக் கதைகளைப் படித்து, அவற்றையும் தன்னுடைய ஐரிஷ் தொன்மத்தையும் இங்கே கலந்திருக்கலாம்.
பற்றுக்கோல் என்பது குச்சியாக முதல் வரியில் வருகிறது. அந்தக் குச்சியில் கல்வி என்பதைக் கவ்வி கனியாக சொருகிக் கொள்கிறார். அதைக் கொண்டு அகப்படவியலா கண்டுபிடிப்பான, மீனைப் பிடிக்கிறார். அந்த விருந்தை உண்பதற்காக தயாரிக்கும்போது, உரு மாறி தப்பித்து ஓடி விடுகிறது. அந்த உரு மாற்றத்தைத் தேடித் தேடி காலம் ஓடி விடுகிறது. முதிய வயதிலும் அந்த கிடைக்கவியலாப் பெண்ணைத் தேடி மோகம் தலைக்கேறி அலைக்கழிக்கிறது. காட்டில் கனிகள் உண்டு. வேறு மீன்கள் உண்டு. அதில் நாட்டம் இல்லை
மனதிற்குப் பிடித்த வேலையை மூப்படையும் வரை செய்ய நினைப்பது அசல் விருப்பம். அந்த எண்ணம் மாயமானாக கண்ணாமூச்சி ஆடுவது கூட அசலில் நிகழ்வதே. இந்த நிஜத்தை, இளவயது காதலைத் தேடி பரிதவிப்பதற்கு ஒப்பிடுவதாக நினைப்பது கனவு லோகம்.
nice of you to introduce me to nice poems. do continue to delight me. Bala