Rabbit – முயல்


சசவிசாடம்

Rabbit_Snow_House_Carrots_Bush

அகராதி: சசவிசாடம், hare’s horn. -a term illustrative of an impossibility, முயற்கொம்பு.

மூங்கிலுக்குத் தண்ணீர் ஊற்றும்போது, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். வீட்டின் வெளியே இருக்கும் புதரின் அருகில் அந்த முயல் உட்கார்ந்து இருந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனி. அந்த வெள்ளிப்பனியின் மீது உலாவிக் கொண்டிருந்தது முயல். உலாவுவது என்பதை விட சாவதானமாக உட்கார்ந்து இருந்தது. அதற்கு எந்த அவசரமும் இல்லை. பணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பச்சை இலைகள் இல்லாத பழுப்புப் புதரை தூரத்தில் இருந்தே பார்க்கலாம். அதே புதரின் அடியில், அதே பழுப்பு நிறத்தில் முயல், பேசாமல் அமர்ந்து இருப்பதை அருகில் வந்தால் பார்க்க முடியும்.

ஒரே இடத்தில் காலை முழுக்க உட்கார்ந்து இருந்தது. இதனால்தான் ஆமையுடன் நடந்த ஓட்டப் பந்தயத்தில், அந்த முயல் தோற்றிருக்க வேண்டும்.

சூரியக் குளியலை முயல் ரசித்துக் கொண்டிருந்தது. பனியில் அதன் கால்கள் உறைந்து போய் ஐக்கியமாகி இருக்கும். ஆனால், சடாரென்று பின்னங்காலைத் தூக்கி மனிதன் போல் இரண்டு காலில் நின்று கைக் கூப்பியது.

‘வணக்கம்’ என்று நானும் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

பணியில் சிக்கல் எழுந்தபோதெல்லாம் சமையலறைக்குச் சென்றேன். சமையலறை ஜன்னல் வழியாக, இன்னும் அந்த முயல் வீற்றிருக்கிறதா என நோக்கினேன். நோக்கிய போதெல்லாம், சும்மா இருந்த முயலைப் பார்த்துக் கொண்டிருந்ததில்

‘அல்லும் பகலும் இல்லா,
சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே
, தெரியாது ஒரு பூதர்க்குமே’

என்று கந்தரலங்காரம் எழுதிய அருணகிரிநாதர் தெரிந்தார். தவம் செய்யும்போது நிறைய இடைஞ்சல்கள் இருக்கும். சாலைக்கு அருகில் உள்ள பொந்து என்பதால் கார்கள் நிறைய சென்று வரும். சொந்த வீட்டிற்கு அருகிலேயே தவம் செய்ய வேண்டும் என்பதால் கார்கள் புழங்கும் சாலையின் அருகில்தான் காற்று வாங்கக் கிடக்க வேண்டும். கார் வரும்போது முயலுக்கு பயமாக இருந்தது. அதனுடைய புகலிடம் தேடித் தாவித் தாவி மறைந்து விட்டது.

மறைந்து போனவுடன் காணாமல் போக்கிக் கொண்ட எழுத்தாளர் ஆன பெருமாள் முருகன் நினைவிற்கு வந்தது. முதலில் ‘மாதொருபாகன்’ சர்ச்சை குறித்து பேச்சுக் கொடுத்தேன்.

”காளிக்கும் பொன்னாயிக்கும் இருக்கிற மாதிரி சிக்கல் எதுவுமே எனக்குக் கிடையாது. இங்கே எல்லாமே நான் தான். குட்டி போடுவதும் நான் தான். கருத்தருப்பரிதும் தான் தான். அந்தக் குட்டியாக இருப்பதும் நான் தான். இன்னொரு ஜீவனின் கதைக்கே இடமில்லை. விக்கிப்பீடியாவில் போய்ப் பார்.”

‘எதுவும் இல்லையே முயலாரே!’

“தமிழ் விக்கியில் எந்த மயிரும் இருக்காது. இருந்தாலும் உனக்குப் புரியாது. ஆங்கில விக்கியில் நான் செய்யச் செய்ய, அவர்களாகவே எழுதியிருக்கிறார்கள். Superfetationனு பேரு. மிகைச் சூலுறவு என்று சொல்லலாம். ஒரு மாத விலக்கின் போது உருவாகும் இளம் சினைக்கரு இன்னொரு மாதவிடாயின் போது கருப்பையில் குட்டியாகி விடும். தானாகவே குழந்தைப் பெத்துப்பேன்! இன்னொரு ஆண் துணையே வேண்டாம்.”

‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ…’ பாடலை ஹ்ம்மிங் செய்தேன்.

“சீனாவில் நான் நிலா. பௌர்ணமிதோறும் முழுநிலாவில் தோன்றுவேன். ஈஸ்டர் என்றாலே முயல் நினைவுக்கு வரவேண்டுமே? இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாகக் கொண்டாடப்படும் திருவிழாவின் முகமாக என்னை வைத்திருக்கிறார்கள்”

முயல் இப்போது தன் பீயை தானே உண்ண ஆரம்பித்தது.

‘என்ன இது கடவுளைக் குறித்துச் சொன்னவுடன் உன் மலத்தை நீயே உட்கொள்கிறாய்?’

“இதற்கு மருத்துவம் தெரியணும். அல்லது உயிரியலாவது உனக்குத் தெரிஞ்சிருக்கணும். உன்னைப் பார்த்தால் ரஜினியும் ரெஹ்மானும் தவிர வேற எதுவும் பரிபாலிப்பவனா தெரியல! இதுக்குப் பேரு ’பெருங்குடல் உயிர்நொதிப்பு’. மாடு அசை போடுவதை பார்த்திருக்கியா? அவசரமா சாப்பிட்ட உணவை மறுபடியும் ஒழுங்கா செரிக்க அசை போடும் எருமை மாட்டை பார்த்திருப்பே!”

‘ஞாயிறுதோறும் திருச்சபையில் புதிய ஏற்பாட்டை அசை போடறாங்களே… அது மாதிரி!? அவர் இரண்டாயிரம் ஆண்டுகளாக ”வரேன்… வரேன்னு” சொல்லி பூச்சாண்டியல்லவா காட்டிண்டுருக்கார்!’

“என்னுடைய எச்சிலைத் திரும்ப வாய்க்கு கொணர்ந்து மீண்டும் உட்கொள்ளுவது உவ்வே! நான் வேற மாதிரி… ஐஸிஸ், சவூதி அரேபியா வகையறா! கடகடவென்று மேஞ்சுருவேன்… அங்கே இருக்கும் விஷயத்தையெல்லாம் சாப்பிட்டுடுவேன். அதன் பிறகு என்னுடைய கோட்டைக்கு வந்து எல்லாத்தையும் வெளிக்கு பேண்டு விடுவேன். அதை எப்போ பசி எடுக்குதோ, அப்போ சாப்பிட்டுக்கலாம்.”

முயல் தூங்குகிறதா, அல்லது என்னுடைன் பேசுவதெல்லாம் முழுக்க முழுக்க கற்பனையா என்று இப்போது தெரியவில்லை.

முயலும் என்னைப் போல் கண்ணைத் திறந்துகொண்டே தூங்கும் ஜாதி. அலுவலில் மந்தமான சூழலில் — வேலை வேண்டும் என்று கேட்டு தொணப்பவும் முடியாது. கண்மூடி நிம்மதியாக உறங்கவும் முடியாது. விழி திறந்திருந்தாலும், கண்டும் காணாத மாதிரி அமர்ந்திருக்கும் சந்திப்புகள் இருக்கும். அங்கே கேள்வி கேட்கும்வரை கண்பேசா மௌனம் அவசியம். கீழே வேலை பார்ப்பவர்கள் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் அரட்டை அடிக்கும்போது கண்பாராமல் கண்டு கொள்ளாமல் உறங்குவது அவசியம்.

இதில் என்னைப் போல் ஜன்னலைத் திறந்து கேரட் கொடுப்போரின் அன்புத் தொல்லையும் உண்டு. அவர்கள் காரட் போடுகிறார்களா, முயலை மாட்டுவதற்கு வலை வீசுகிறார்களா என்பதும் தெரியவில்லை.

இதெல்லாம் சொல்லும்போது அந்த முயலுடைய அரைக்கண் மட்டுமே திறந்து இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக பனி மேல் ஆடாமல், அசையாமல், தவம் செய்யும் விசுவாமித்திரர் போல் மோன நிஷ்டையில் இருந்தது. மேனகை போல் என் அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

‘உன்னை சினிமாவில் நடிக்க எவரும் அழைக்கவில்லையா?’

“திருமூலர் கதையை படமாக எடுக்க ஏ பி நாகராஜன் ஐடியா வச்சிருந்தார். அப்பொழுது

ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே.

பாடலைப் பார்த்துவிட்டு என்னை அழைத்தார். நான் முயல் + அகன்றவன் அல்ல என்று சொல்லி மறுத்து விட்டேன்”

‘இப்பொ ஹீரோவை விட வில்லனுக்குத்தான் கிராக்கி. வௌவால் மனிதனே அ-நாயகனாக உலா வருகிறார். ஒரே இடத்தில் பொணம் போல் கிடக்கும் முயல் நீ… உனக்கு என்ன கேடு?’

”முயலகன் வடிவம் அறியாமையைக் குறிக்கும். ஆனால், நானோ முயல் + அகன். அகன் என்றால் அகலம். அறிவுப் பிழம்பாகிய தட்சிணாமூர்த்தி என் தலை மேல் நின்று நடனம் ஆடுவதாக பக்திப்பட இயக்குநர் ஏபியென் சொன்னதைக் கேட்டு முதல் பயம். நம்மகிட்டத்தான் சொல்லொண்ணா முயற்சியும் இருக்கே என்னும் அகந்தை இரண்டாம் நம்பிக்கை. மூன்றாவதாக என் மேல் டான்ஸ் ஆடியது தஷிணாமூர்த்தியா, நடராஜனா என்று சென்ஸாரில் சண்டைக்கு வந்தாங்க என்பது நாரத கலகம்.”

‘அதற்குப் பிறகு வேறு வாய்ப்பு வரவில்லையா?’

“நாஞ்சில் நாடன் சார் என்னைப் பற்றி எழுத நிறைய விவரம் சேகரித்தார். அவருக்கு அந்தக் கால பரணி, தரணி எல்லாம் ரொம்பப் பிரியம். சிவகுமார் சார் கூட முப்பத்தி மூன்று வகை முயல் இருக்கு தெரியுமா என்று ஸ்டார் விஜய் டிவியில் ஒப்பித்தார். அப்புறம், இந்த சுகா அப்பா நெல்லைக் கண்ணன் அய்யா கூட நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில் ’அயம், ஈனம், உக்குளான், திருவாலி, குருளை, செவியன், பறழ், வனாகி’ என்று பட்டியலிட்டு ஃபெட்னாவிற்கு முயல்கிறார்.”

‘சும்மா கெடக்கிற அவங்கள் ஏன் தேவையில்லாம வம்புக்கு இழுக்கிற!’ என்று சொல்லி 😦 சிரிப்பான் இட்டேன்.

சும்மா கிடக்கும் மிருகங்களை எனக்குப் பிடிக்கும். முயலைப் போல் பூனையும் ரொம்ப நேரம் அமைதியாக ஒரே இடத்தில் இருக்கும். அதைச் சீண்டினால் கூட, தள்ளிப் போய் படுத்து விடும். உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு, மணிக்கணக்கில் நன்றாக உறங்கும். முயலின் உருவம் போலவே போஷாக்கான குண்டுப் பூனைகள் ஓரிரண்டு வளர்த்திருக்கிறேன்.

அனைத்து நேரமும் சோம்பேறியாக இருக்கும் மிருகத்தை விட, துடிப்பாக இருக்கும் ஜந்துவை சோம்பேறியாக்குவதே சாலச் சிறந்தது எனத் தோன்றியது. அந்த எண்ணத்தை நிறைவேற்ற பச்சைக்கிளி அகப்பட்டது. அதை வளர்க்க ஆரம்பித்தேன்.

‘பறந்து திரிய வேண்டிய கிளியை, இப்படி கூண்டில் அடைத்து வைத்திருக்கிறாயே!’ என என் வீட்டிற்கு வருவோர் வருத்தப்படுவார்கள். அவர்கள் என் பெண்டாட்டியைக் குறிப்பிடவில்லை. வேளாவேளைக்கு சோறு, தாகம் எடுத்தால் தண்ணீர், போர் அடிக்காமல் இருக்க கண்ணாடி என அந்தக் கிளியை வளர்க்கிறேன். முகக்கண்ணாடியில் இன்னொரு கிளி இருப்பதாக நம்பி, என்னுடைய கிளி அதனுடன் சண்டை போடும். அதன் பிறகு கொஞ்சிக் குலாவி சமாதானம் செய்யும். கண்ணாடியை விட்டு தூர விலகி, தனிமையைக் கொண்டாடும். அதன் பின், மீண்டும் கண்ணாடிக்கே சென்று தலைக் கோதி விளையாடும். விசில் அடித்து அழைக்கும். எதுவாக இருந்தாலும் நான்கு சாளரத்திற்குள் செய்து கொள்ளும்.

இப்போது முயல் வளர்க்கத் துவங்கி இருக்கிறேன். மேஜையின் மீது நாம் மோதிக் கொண்டால், ‘மேஜை இடித்து விட்டது’ என்கிறோம். அது போல் வெட்டவெளியில் சுதந்திரமாகத் திரியும் முயலை வளர்க்கத் துவங்கி இருக்கிறேன். தினமும் நாலு கேரட். குடிப்பதற்கு சுத்தமான சுகாதாரமான நீர். பனியில் சறுக்கி விளையாட சதுப்பு நிலம். புதரோடு புதராக மறைந்திருக்கலாம். கார் நிறுத்துவதற்கு நான் வந்தவுடன் ஓடி ஒளியலாம்.

கூடு விட்டு கூடு பாயும் சக்தியைப் பெற்றிருந்தவர்கள், மானாக, கழுகாக, நரியாக உருமாறி விலங்காக வலம் வந்திருக்கிறார்கள். ஆவணப் படம் எடுப்பவர்கள் யானையையும் நாயையும் காகத்தையும் மனித குணங்கள் கொண்ட நாகரிக அறிவாளிகளாக சித்தரித்திருக்கிறார்கள். பஞ்சதந்திரம் போன்ற புனைவுகள் எழுதியவர்கள், ஆந்தையும் பருந்தும் புலியும் பேசிப் பழகி புத்திசாலித்தனமான நீதிகளைச் சொல்வதாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தேவர், இராம நாராயணன் போன்றோர் ஆட்டையும் பாம்பையும் நூறு விதமாக கதாநாயகர் ஆக்கி இருக்கிறார்கள்.

இவற்றை அந்த முயல் கவனித்திருக்க வேண்டும். என்னுடைய சோம்பேறி மனப்பான்மையை உத்தேசித்து என்னை முயலாக மாற்றி அதன் வளைக்குள் அனுப்பிவிட்டது.

பியானோ வகுப்பு முடிந்து என் மகள் வீட்டிற்குள் நுழைகிறாள். முயல் பாட்டுக்கு தன் அறைக்குள் சென்று கணினியில் ’சசவிசாடம்’ என்றுத் தலைப்பிட்டு கதை எழுதிக் கொண்டிருக்கிறது.
—–

One response to “Rabbit – முயல்

  1. பிங்குபாக்: Geese – வாத்துகள் | Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.