வார்த்தைகளால் சொல்லி விட முடியுமென்றால், வரைவதற்கான அவசியமே இருக்காதே!
– எட்வர்டு ஹாப்பர் [1882-1967]
இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண் கலைஞர்கள் என்று தனித்து அறிமுகம் செய்ய வேண்டுமா? தற்கால விஷயங்களை மகளிர் எவ்வாறு கையாளுகிறார்கள்? மில்லியன்கள் புரளும் ஓவியச் சந்தையில் ஆண் ஓவியர்களோடு ஒப்பிட்டால், பெண் ஓவியர்களின் மதிப்பீடும் விற்பனையும் எப்படி இருக்கிறது?
இந்தக் கேள்விகளுக்கு After the Revolution: Women Who Transformed Contemporary Art (2007) புத்தகமும், அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமாக வெளிவந்த The Reckoning: Women Artists of the New Millennium (2013, Prestel) புத்தகமும் விடை கொடுக்கின்றன.
முதல் புத்தகத்தில் ஒரு டஜன். இரண்டாவது நூலில், 1960களுக்குப் பிறகு பிறந்த இருபத்தைந்து பேர்களுடைய வாழ்க்கை சித்திரத்தையும் நிஜ கோட்டோவியங்களையும் கலைப் படைப்புகளையும் அறிமுகம் செய்கிறார்கள். இரண்டு புத்தகங்களையும் எலெனார் ஹார்ட்னி (Eleanor Heartney), ஹெலேன் பாஸ்னர் (Helaine Posner), நான்சி (Nancy Princenthal) மற்றும் சூ ஸ்காட் (Sue Scott) உருவாக்கியிக்கின்றனர். நூல் முழுக்க ஓவியர்களின் உருவாக்கங்கள் முழு வண்ணத்தில் வழ வழ தாளில், பெரிய வடிவில் காணக் கிடைக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அதை உருவாக்கியவரின் பின்னணியைச் சொல்கிறார்கள். இளம்வயதில் எப்படிப்பட்ட படைப்புகளைப் படைத்தார் என்பதில் ஆரம்பித்து சமீபத்திய ஆக்கம் வரை ஒளிப்படங்களுடன் விளக்குகிறார்கள். ஆங்காங்கே, கலைஞர்களின் பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள்.
அறுபதுகளில் பெண்ணிய இயக்கங்களின் தாக்கத்தினால் உடலைக் குறித்துப் பேசுவதும் கலையாக்கத்தில் உடல்மொழியை வெளிப்படையாகப் படைப்பதிலும் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்ததைக் காணமுடிகிறது. உலகமயமாக்கப்பட்ட சமூகப் பிரச்சினைகளும் எல்லை கடந்த அரசியல் சிக்கல்களும் பெண்களின் கண்ணோட்டத்தில் காணமுடிகிறது. உள்நோக்கில் ஆய்வுகளும், கனவுகளின் அபிலாஷைகளும், கற்பனைகளின் அத்துமீறல்களும் அறியமுடிகிறது. பால்சார்ந்த நிலைப்பாடுகளையும் வீட்டில் அவர்களின் நிலையையும் மேற்கத்திய உலகின் கண்ணாடியாக பிரதிபலிக்கிறது.
புத்தகத்தை நான்கு பாகமாகப் பிரித்திருக்கிறார்கள்:
1. பொல்லாக் குழந்தைகள் (Bad Girls)
2. மோகனச்சுண்ணம் (Spellbound)
3. இல்லத்து கலகங்கள் (Domestic Disturbances)
4. வரலாற்றுப் பாடங்கள் (History Lessons)
காடா ஏமர் (Ghada Amer) எகிப்தில் பிறந்தவர். ஃபிரான்ஸ் நாட்டின் நைஸ் (Nice) நகரத்தில் ஓவியம் கற்க கல்லூரியில் படிக்கிறார். ஆனால், சில பாடங்களை ஆண்களுக்கு மட்டுமே கற்றுத் தர முடியும் என்று சொல்லி அவரை வகுப்பில் இருந்து தள்ளிவைத்து விடுகிறார்கள். அப்பொழுதுதான் அடுக்கு அடுக்காக வரையும் தன்னுடைய ஓவிய முறையை ஏமர் கண்டறிகிறார். பாலுறவையும் பால் இச்சையையும் வெளிப்படையாகப் பேச இயலாத மேற்கத்திய நாகரிகத்தை தன்னுடையப் படைப்புகளின் மூலம் குறிப்பாக சாடுகிறார். இஸ்லாமியராகப் பிறந்ததினால் அறிந்திருக்கும் தன்னுடைய மதத்தில் பெண்களின் நிலையும் இவருடைய ஓவியங்களில் ஊடாடும்; பிரான்சிலும் வெளிப்படும் பெண்பால் அடக்குமுறையும் இழையோடும்; காதலின் புரியாமையும் போர்களின் முட்டாள்தனமும் டிஸ்னி படங்களின் கதாநாயகி இலட்சணங்களும் அழகுக்கான தேடலும் மிளிருமாறு சித்திர வேலைப்பாடுகளுடன் பூத்தையல் தொடுக்கிறார்.
இவரைப் போல் ஒவ்வொருவரையும் தனித்துவமாகப் பொறுக்கி எடுத்து கோர்த்திருக்கிறார்கள். பாலுறவு படங்களின் துண்டுகளை ஒட்டு வடிவமாக்கி அதன் அர்த்தமின்மையை வெளிப்படுத்துவது ஆகட்டும்; வணிக விளம்பரத்தில் சாஸ்வதமாகிப் போன இலட்சண ஸ்திரீகள் ஆகட்டும்; கற்பு, கன்னி, பத்தினி என்று கவிதை பாடுபவர்களுக்கு போட்டுடைக்கும் கிட்டத்தட்ட ஆபாசப் படங்கள் ஆகட்டும் – இதுதான் பெண்ணியம் என்று எதையும் அடைக்க முடியாது என்பதை இந்தப் புத்தகமும் கலைஞர்களும் அவர்களின் படைப்புகளும் சொல்கின்றன.
இரண்டு புத்தகமும் சேர்த்து 37 பெயர்கள்தான் தெரிய வருகிறது. எந்தத் தமிழரும், யாதொரு இந்தியரும் இடம்பிடிக்கவில்லை. அனுபந்தத்தில் கொடுத்திருக்கும் பட்டியலைப் பார்த்தாலே, ஆண் ஓவியர்களின் எண்ணிக்கையும் அவர்கள் நடத்தும் தனி கண்காட்சிகளின் அளவிற்கும் எதிர்பாலாரின் சிற்றிரை சித்திரக்காட்சிகளுக்கும் சம்பந்தமில்லா நிலையை அறிய முடிகிறது. பெண்களின் ஓவியம் என்பதற்கும் பெண்ணிய ஓவியம் என்பதற்குமான வித்தியாசத்தை எல்லாம் இந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் ஆய்வதில்லை.
ஆனால், இந்தப் புத்தகம் ஒரு நல்ல ஆவணம். முக்கியமான துவக்கம். கல்லூரிகளில் பாடமாக வைக்க உதவும். ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும். இதே போல் ஆய்வு நூல்களை மற்ற நாடுகளும் மொழிகளும் வெளியிட உந்துதலாக இருக்கும்.
புத்தகத்தின் அட்டைப்படத்தில் 1997ல் எடுக்கப்பட்ட படத்தில் இருந்து ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது. அவள் நம்முடைய சினேகிதி போல் தோற்றம் அளிக்கிறாள். துள்ளலாகப் பாய்கிறாள். எடுப்பான நீல நிற ஆடையும் அதற்கு மாற்றாக பளீரெனும் சிவப்பு சப்பாத்துகளையும் அணிந்திருக்கிறாள். கையில் பூத்தண்டு வைத்திருக்கிறாள். ஒவ்வொரு காரின் கண்ணாடியையும் உடைக்கிறாள். அவளைப் போல் கண் விரியச் செய்யும் அதிசய ஆக்கங்களும் கலைநயம் பூக்கும் நளினங்களும் அறியத் தரும் புத்தகம்.
காணொளிகள்: