ஆண்களுக்கு பேன் வருவதில்லை


நீங்கள் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் தாத்தாவையும் பாட்டியும்தான் சாகடித்திருப்பீர்கள். நான் பத்து மாதக் குழந்தையைக் கொன்றவன்.

நானும் உங்களைப் போல் சில்லறை விஷயங்களுக்காகத்தான் இதில் இறங்கினேன். முந்தாநாள் இரவு பத்து மணி இருக்கும். கிம் கர்டாஷியனும் மோனிகா பெலூச்சியும் போட்டி போட்டுக் கொண்டு கணித்திரையை ஆக்கிரமித்திருந்தார்கள். அப்போதுதான் ராம் அழைத்தான். “வாடா… பௌலிங் போகலாம்!”

இருபத்து நான்கு மணி நேரமும் திறந்திருக்கும் பௌலிங் மையம். மூன்று மாதத்தில் வெள்ளைப் பனி காலம் போய் வெஞ்சிவப்பு கோடை வந்து மூன்று மாதம் கழித்து வண்ணமயமான இலையுதிர் காலம் வருவது போல் மூன்று வினாடிக்கொரு முறை சடசடவென்று விளக்குகள் மாறி மாறி பாய்ந்து கொண்டிருந்தது. விளக்குகள் அங்கேயேதான் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஆனால், அணைந்து அணைந்து எரிந்ததில் ஒளிவிளக்குகள் பாய்ந்து பாய்ந்து ஓடியது போல் கண்ணிற்கு தெரிந்தது. புத்திக்கு எல்லோரும் கொண்டாடுவதாகத் தெரிந்தது.

அரை டிரவுசர் கல்லூரி மாணவிகள் அதிகம் புழக்கத்தில் இருந்த தலமாக பாஸ்டன் அறியப்பட்டது. பௌலிங் மையத்திலோ கல்லூரி மாணவிகளை விட கல்லூரி மாணவர்கள் அதிகமாகக் காணக் கிடைத்தார்கள். பெண்களுக்கு விளையாட்டுகளில் இஷ்டமில்லை. வினைகளில் மட்டுமே இஷ்டமா என்பதைக் காணக் கிடைத்தவர்களிடம் கேட்டறியவில்லை. யூ டியூபில் படம் பார்க்கும்போது அதன் மேலே வந்து விழும் விளம்பரங்கள் போல் யுவன்களை தவிர்த்த பின் யுவதிகள் கிடைத்தார்கள். பந்தயம் கட்டி விளையாட்டு ஆடலாம். ஆடினோம். எனக்கு, இந்த மாதிரி இடங்களில் எதிர்பாலாரை சந்திப்பதிலும் பெண்களோடு பேசுவதிலும் பிரச்சினை இருப்பதில்லை. நாம் சிறுபேச்சு எதுவும் உளற வேண்டாம். பந்தைத் தட்டி விட்டால் போதும். அது போகும் பாதையைப் பொறுத்து கெக்கலிப்போ கைத்தட்டலோ கிடைக்கும். அப்படியே தொடரலாம்.

நான் பெண்களை சந்திப்பதற்காக பௌலிங் செல்லவில்லை. தத்துவம் பேச பௌலிங் மையம் சிறந்த இடம். ஒருவர் குறி வைத்துக் கொண்டிருப்பார். மெதுவாக ஓட ஆரம்பிப்பார். சடாரென்று நிற்பார். மீண்டும் மையத்தை ஒன்றேகால் கண்ணால் கைக்கு கொணர்ந்து பந்தை மெதுவாக விடுவிப்பார். எதிர்பார்ப்போடு பெருமூச்சால் பந்தின் பாதையை மாற்ற எத்தனித்துக் கொண்டிருப்பார். அந்த சமயத்தில், “தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது பந்தத்தை விட பந்தைத்தான் குறிக்க வேண்டும்!” என சொல்லிவிடலாம். பழமொழி ஆராய்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்ப அதிகாலை ஆகி விட்டது.

அப்பொழுதுதான் முதல் போணி. பெங்களூரில் இருந்தவரை தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். அவர்களுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் ஆக்கிக் கொண்டிருந்தேன். அவர்களைக் காரணம் காட்டி விடுப்பு எடுக்க முடிந்தது. எனக்கு நல்ல காரணங்கள் வேண்டும். புற்றுநோய் அபாரமான காரணம். இன்று கீமோதெரபி. இன்னொரு நாள் ஆபரேஷன். நாளைக்கு மாற்று சிகிச்சை. அப்புறம் மாந்திரீகம். இப்படியே கான்சரைப் பற்றி நிறையக் கற்றுக் கொண்டேன். சவரம் செய்யாத முகத்தோடு அலுவலுக்கு சென்று வரவும் புற்றுநோயாளிகளின் உறவினர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பாஸ்டன் வந்தபோது கூகுள் வந்து விட்டிருந்தது. கூகிளுக்கு முன்பே வெப்.எம்.டி. வேறு ஆக்கிரமித்திருந்தார். இந்தியர்களுக்கு நோய் என்றால் ஆலோசனை வழங்க மட்டுமே தெரியும்.

“இதற்கு சான் ஃபிரான்சிஸ்கோவில் அற்புதமான மருந்து இருக்கிறதாம். தருவித்து கொடுத்துப் பார். நிச்சயம் குணமாயிடும்!”
“இப்பொழுது புற்று நோயை காந்த சக்தி மூலம் குணப்படுத்தி விடுகிறார்கள். இந்தத் தொலைபேசியில் தொடர்பு கொள்:…”
“யாராவது செய்வினை வைத்திருப்பார்கள். சோட்டாணிக்கரை போனால் எடுத்துரலாம்.”

பாஸ்டன்வாசிகள் விபரம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். “எந்த மருத்துவமனை? மாஸ் ஜெனரல் நன்றாக இருக்கும்.” என்பதோடு நில்லாமல் படு நுட்பமாக கேள்விகள் போட்டார்கள். புதியவர்களின் சிறுகதை வேண்டும் என்று ஜெயமோகன் கேட்டவுடன் ”எத்தனை வார்த்தைகளில் எழுதணும்? புதியவர் என்றால் வயது வரம்பு உண்டா? எவ்வளவு வார்த்தை இதுவரை எழுதியிருந்தால் அனுமதி? சன்மானம் கிடைக்குமா?” என்று உள்மாந்தரங்கள் கேட்பது போல் துளைத்தார்கள். கேன்சர் குணமாகிவிட்டது.

ஆனால், அதிகாலையும் ஆகி இருந்தது. ஏன் அலுவலுக்கு வரவில்லை என்பதற்கு நல்ல காரணம் வேண்டும். அப்போதுதான் காதலிக்கு கர்ப்பம் ஆகி இருப்பதாக தெரிவித்தேன். அவர்களும் உனக்கு எப்போது திருமணம் என்று கேட்கவில்லை. அமெரிக்கர்கள் நாசூக்கானவர்கள். நீச்சலுடையின் மீது நீர் போல் பட்டும் படாமலும் இருப்பார்கள். மருத்துவரை பார்ப்பதற்காக அடுத்த நாள் விடுமுறை எடுத்துக் கொள்வதாக சொன்னேன்.

எழுத்தாளர் சாடூ வந்தபோது அந்தப் குழந்தை பிறந்துவிட்டது.

சாடூ எழுதிய காலத்தில் புனைப்பெயர்களுக்கு பஞ்சம் தலைவிரித்தாடியது. 1950களில் கண்ணன் என்பவர் தன் அடையாளத்தை மறைக்க ”சாது” என்று பெயரிட்டுக் கொண்டார். பெயருக்கேற்ற மாதிரியே சாதுவாக செயல்பட்டார். கைலி கட்டிக் கொண்டவரெல்லாம் ஆம்பிளை என நம்புவது போல் புனைப்பெயரினால் நிஜ அடையாளங்களை தொலைக்க முடியும் என எழுத்தாளர் “சாது” திடமாக நம்பினார். அவரைக் கிண்டல் செய்வதாக நினைத்து புகழின் உச்சியில் இருந்த ஆறுமுகம், “சாடு” என்று நாமகரணமிட்டுக் கொண்டார். அந்தப் பெயரில் மற்றவர்களை சாடி நிறைய எழுதியதால், “சாடு” பரவலாகப் பேசப்பட்டார். டவிசர் தெரிய கைலி கட்டுவது போல் தூக்கி கட்டினால் மட்டும் ரவுடியாக முடியாது என்பதை “சாடு” நிரூபிப்பதாக நம்பிய கார்த்திகேயன் “சாடூ” ஆகிக் கொண்டார்.

இவர்களைப் பற்றி நகுலன் கூட கவிதை எழுதியிருக்கிறார்:
சாத்தமுதில் பசி
தெரிந்தது
சாதுர்மாஸ்யத்தில் பாண்டித்யம்
கிடைத்தது
சாதுவில் தூ

ஆனால், என்ன சாது/டு/டூ என்று கேட்டதற்கு சாதுர்யமாக பதில் சொல்ல மறுத்து விட்டார். குவார்ட்டர் வாங்கித் தந்த பிறகு என்னிடம் மட்டும் சொன்னார். “அது பதிப்பாளர் பிழை. நான் அசலாக எழுதியது என்னன்னா…
சாண்டால் பவுடர்
தெரிந்தது
சாம்பிராணியில் பாக்கியம்
நினைத்தது
சாதியில் தா

இதை சாது/டு/டூ மாற்றி அச்சிட்டு விட்டு, என்னைப் பற்றி நகுலன் பாட்ட்டெழுதியிருக்கார்னு ஊர் முழுக்க தம்பட்டம் அடிச்சுட்டு திரியறான்.”

சாடூ அமெரிக்கா வந்தபோது இது குறித்து கேட்டேன். “எட்டாம் வகுப்பு படிக்கிறப்ப ஆல்ஜீப்ரா தெரியலேன்னா அது பிரச்சினையில்ல… எட்டாவது வகுப்பு நடத்துறவருக்கே அல்ஜீப்ரா தெரியலேன்னாலும் அது பிரச்சினையில்லே! ஏன்னா… அவரு சரித்திரமோ பூகோளமோ சொல்லிக் கொடுத்துரலாம். அது மாதிரிதான் நாம நகுலனோட கவிதைய அணுகணும். நீங்க எல்லாரும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் மாதிரி. உங்களுக்கு அவரோட கவிதை தெரியாது. அச்சகத்தார் எல்லாரும் ஆசிரியர் மாதிரி. எழுத்தாளர் சொல்லுறத பிரதி மறு உருவாக்கம் செய்வாங்க! உண்மையான மாணவன் மனப்பாடத்தைத்தான் நம்பினான். அது மாதிரி ஆதர்சமான வாசகன் என்னோட படைப்பை தலைகீழா ஒப்பிப்பான். உங்கள்ள யாரு அந்த மாதிரி தீவிர இலக்கியவாதி?”

எனக்கு எதுவுமே எழவில்லை. ஃபேஸ்புக் முழுக்க பெரியார் கொள்கை பரப்பியவரை பிரதோஷத்தில் பார்த்தால் கண்டும் காணாமல் போவது போல் அடுத்த சப்பாத்தியை எடுப்பதில் வாயை மும்முரமாக்கினேன். ஆனால், அந்த ஷணம் எனக்கு முகம் பிரகாசமானது. நிறைய கார் நெரிசலாக நின்று உருமிக் கொண்டிருக்கும் வேளையில் உங்களின் காருக்கு மட்டும் குறுக்கு சந்து கிடைத்து பூந்து புறப்பட வழி கிடைத்தால் மனம் குதூகலிக்குமே… அந்த மாதிரி.

இவர் செய்வதைத்தான் நான் அனுதினமும் அலுவலில் செய்கிறேன்.

“பிரோகிராம் ஏன் வேலை செய்யலை?”
“நீங்க என்ன செஞ்சீங்க?”

“திடீர்னு தளம் திறக்கவே மாட்டேங்குது?”
“பிரவுசர மாத்திப் பாருங்க”

“நான் கேட்டது இதில்லையே…”
“ஆனா, நீங்க சொன்னது இதானே!”

எனக்கு சால்ஜாப்பு சொல்லத் தெரியும். சாது/டு/டூ-வை விட விலாவாரியாக கதை விடத் தெரியும். இரண்டு நிமிடமே பொறுமை உள்ள மேனஜருக்கு ஏற்ற குட்டிக் கதையும் சொல்கிறேன். இரண்டாண்டுகளாக காசு கொடுத்து விட்டு ’ஆச்சா’ என்று பவ்யமாக வினவும் வாடிக்கையாளருக்கும் முடிச்சுகள் நிறைந்த உச்சகட்டம் பல போட்டு தொடரும் கொண்ட நாவல் கொடுக்கிறேன். கோடை விருந்துகளிலும் நத்தார் உபசரிப்புகளிலும் சுவாரசியமாக சம்பவங்களைக் கோர்த்து ஒரு மணி நேர குறுநாவலாக்குகிறேன். ஆனால், எது என்னை எழுத்தாளனாக விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது?

எழுதிய கதை இதுதான்: தலைப்பு – ஈஷுதல்

ரேடியோவில் காலையில் இருந்து அதே செய்தியைத்தான் அலசிக் கொண்டிருந்தார்கள். விண்வெளியில் ஸ்புட்னிக் பறந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவை ருஷியா முந்திக் கொண்டு விட்டது. பூமியைத் தொடாமல் பார்க்கும் வான்கோள் ஏவியிருக்கிறார்கள். வான்வெளியில் முதல் விண்கலமாக ஏவப்படிருந்த ஸ்புட்னிக் பற்றிக் கேட்டு கேட்டு ஜெனிஃபருக்கு அலுத்து விட்டது.

பக்கத்தில் இருந்தும் தொடக்கூடாத நீக்ரோக்கள் நிறைந்த நாடு அமெரிக்கா. அது பறக்கும் போட்டியில் தோற்கடிக்கப் பட்டுவிட்டதாக அப்பா பொருமினார். தொழில்நுட்பத்தில் பின் தங்கி விட்டதாக வருந்தினார். இனி கூடிய சீக்கிரமே நியு யார்க்கில் செங்கொடி பறக்கும் என்றார். நன்றாக உழைப்பவருக்கும் வெறுமனே சோம்பித் திரிபவருக்கும் வித்தியாசம் இல்லாத நாடாகி விடுமோ என்று கவலையில் மூழ்கி இருந்தார்.

ஜெனிஃபர் தலையில் பேன் ஊறிக் கொண்டிருந்தது. அக்காவிடமிருந்து வந்திருக்கலாம். அக்கா பயன்படுத்தும் சீப்பில் இருந்து தாவி இருக்கலாம். ஒருவருக்கொருவர் பின்னிக் கொள்வதில் தொற்றிக் கொண்டிருக்கலாம். பேன்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் என்பது ஜெனிஃபர் அப்பாவின் வாதம். ஒட்டுண்ணிகளாக பிறரை அண்டிப் பிழைக்கிறார்கள் என்பார்.

ஆனால், நல்ல வேளையாக நாள் முழுக்க இந்த ஸ்புட்னிக் மகாத்மியத்தையும் பேன் பிரலாபத்தையும் ஜெனிஃபர் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டாம். இன்றுதான் ஜெனிஃபருக்கு முதல் நாள். பதினாறு வயதானபின் வேலைக்குப் போகலாம் என்று அப்பா வாக்குறுதி கொடுத்திருந்தார். இன்று அது நிறைவேறுகிறது. வேலைக்கு செல்லும் முதல் நாள். சுதந்திரமாக உணரும் முதல் நாள். தன்னுடைய உழைப்பை மதிக்கும் இடத்திற்கு செல்லும் நாள். பணிக்கு பாராட்டு மட்டும் இல்லாமல் பணமும் கிடைக்கத் துவங்கும் நாள்.

ஜெனிஃபரால் சைக்கிளிலேயே அங்கு சென்றுவிட முடியும். இருபது நிமிடம் ஆகும். காய்கறிகளை அடுக்குவது, தரம் பிரிப்பது, விலை ஒட்டுவது என்று சின்னச் சின்ன வேலையில் ஜெனிஃபர் துவங்கினாள். எடை போடுவது, கல்லாவை பார்த்துக் கொள்வது என்று ஒவ்வொரு மாதமும் பொறுப்பும் ஊதியமும் ஊக்கப்பட்டுக் கொண்டே வந்தது பெருமிதமடையச் செய்தது.

அப்போதுதான் முதலாளியின் காரை தன் வீட்டின் வாசலில் பார்த்தாள். தன்னோடு கடையைப் பூட்டிக் கொண்டு கிளம்பியவர், தனக்கு முன்னே வந்து சேர்ந்திருந்தார்.

“உங்க மகள் இனிமே என்னுடைய மளிகைக் கடையில் வேலை பார்க்க முடியாது. இது உள்ளூர்க்காரங்க வந்து போற இடம். இங்கே தன்மானம்தான் எல்லாம். உங்க மகள் அங்கே இருப்பதை பார்த்தால் நான் சேரக் கூடாதவங்களோட ஈஷிக்கறதா எல்லோரும் நினைப்பாங்க. உங்க பெரிய மக கருப்பனோட கல்யாணம் கட்டிக்கிட்டிருக்காள். அவளோட செய்கைக்கு நான் ஆதரவு கொடுக்கிறதா இவங்க எல்லோரும் நினைச்சா என்னோட வியாபாரம் கெட்டுடும். இவ வேலை செய்யறதால நம்ம இனத்த பகைச்சுப்பேன். தப்பா நெனச்சுக்காதீங்க…”

எழுத்தாளர் சாடூவிற்கு கதை ரசிக்கவில்லை. “இதில் சம்பவம் மட்டுமே சொல்லப் பட்டிருக்கு. அது கூட தவளை நடையில் தாவியோடுது. இதில் அனுபவம் இல்லை. உங்களுடைய முதல் வேலையை கொஞ்சம் போல் கொணர்ந்திருக்கிறீங்க. ஆனால், நீங்க பலசரக்கு கடையிலோ, அமெரிக்க கசாப்புக் கடையிலோ ஊழியம் செஞ்சதில்ல. அதனால, அந்த விவரிப்புகள் எல்லாம் நேர்மையில்லாம அமைஞ்சிருக்கு. மேலும், இது நடந்ததை நடந்தது போலவே சொல்லிச் செல்கிறது. கொஞ்சம் போல் அந்த அக்கா கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கணும். சமூக மாற்றமும் அறிவியல் வளர்ச்சியும் எவ்வாறு இணைந்திருக்கிறது என்பதை விவரிக்கணும். அந்தக் கால ஐம்பதுகளின் காலகட்டத்தை கண்முன்னே நிறுத்தணும்…”

வருடாவருடம் கேட்டுப் புளித்துப் போன வார்த்தைகள். ஒவ்வொரு சம்பள உயர்வுக்கான உள்ளாய்வின் போது மேலாளர் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் போல் சுட்டுவிரல் ஏவுகணை போதனைகள். அங்கே ஒண்ணாம் தேதி தோறும் சம்பளம். என்னுடைய “ஈஷுதல்” கதையை விமர்சிக்கும் எழுத்தாளர் சாடூ என்ன தந்து கிழிக்கப் போகிறார்?

பொங்கி விட்டேன். “ஸ்புட்னிக் என்பதற்கு பதிலாக சந்திராயன் வைத்துக் கொள்ளுங்கள். ஜெனிஃபரின் அக்கா பெயரை சோனியா எனலாம். ராஜீவை மணந்த போது சோனியாவின் சகோதரிகளின் நிலை என்னவாக இருந்திருக்கும். இது அரசியல் சமூக அறிவியல் மாந்திரீகப் புனைவு! இலக்கிய விமர்சகனாக பச்சாதாபம் இல்லாதவர்கள் தேவைப்படுகிறார்கள். இலக்கியவாதியாக பச்சை தாகம் தேவை. படிப்பவனோட கற்பனையைப் பொறுத்துதான் வறட்சி வெளிப்படும். நீங்கள் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் தாத்தாவையும் பாட்டியும்தான் சாகடித்திருப்பீர்கள். நான் பத்து மாதக் குழந்தையைக் கொன்றவன். அதனால்தான் எழுத வந்திருக்கேன். எழுத்தைப் போலவே இயக்கத்திலும் துடிப்பானவன். சொல்லப் போனால் ‘பல்லாயிரம் பொய் சொல்ல பத்திரமான வழிகள்’ என்னும் வலையகம் வேறு நடத்துகிறேன்.”

உங்களுக்காக அதில் இருந்து ஒரு தகவல்: தலையில் பேன் வந்திருப்பதால் எல்லாத் துணிமணிகளையும் எரித்துவிட்டேன். அதனால், ஆடையின்றி இருப்பதால் இன்று நான் அலுவலுக்கு வர இயலாது.

குட நைட்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.