’கற்றது தமிழ் எம்.ஏ.’ இயக்குநர் ராமின் ’தங்க மீன்கள்’ இன்று வரவில்லை. எனவே, அதற்கு மாற்றாக That Girl In Yellow Boots படத்தைப் பார்த்தேன். இதுவும் தந்தைக்கும் மகளுக்குமான கதை.
ஸ்மிதா பட்டீலையும் ஷபனா ஆஸ்மியையும் எண்பதுகளில் கொண்டாடினால், கொன்கொனா சென்னையும் நந்திதா தாஸையும் இப்பொழுது இவர்கள் நடித்த படங்களை, ”இன்னார் இருக்கிறார்கள்… ஏமாற்ற மாட்டார்கள்” என்னும் நம்பிக்கையுடன் பார்க்க முடிகிறது. இருவரையும் அலேக்காக சாப்பிடுகிற மாதிரி வந்திருக்கிறார் கல்கி கோச்லின். அவரே கதை, வசனம் என்று சகல துறைகளிலும் நுழைந்திருக்கிறார்.
இயக்கத்தை மட்டும் Black Friday & தேவ் டி புகழ் புருஷன் அனுராக் கஷ்யபிற்கு விட்டுக் கொடுத்துவிட்டார். சப்பை மேட்டரை எடுத்துக் கொண்டு எப்படி படம் பண்ணுவது என்பதை அறிய வைக்கிறார். கல்கியின் ரூத் தசை பிடித்து விடுபவர். உடலுக்கு மட்டும் ஒத்தடம் கொடுக்காமல் சகலமும் கை வேலையாக செய்கிறார். ”உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி” பாடல் சொல்கிறது. ரூத் முகபாவத்திலேயே அருவறுப்பும் அசிரத்தையும் பதற்றமும் ஏக்கமும் திரைக்கதையை நகர்த்துகிறது.
முடிவை முன்பே யூகிக்க முடிகிறது. ஆனால், அதனூடாக சுவாரசியமான கதாபாத்திரங்களின் போக்கை ஊகிக்க முடியவில்லை. போதைக்கு அடிமையான காதலன் எப்படி எதில் இருந்து மீள்கிறான்? கண்டபடி மிரட்டி பணம் கறக்கும் கன்னட மாஃபியா தாதா-விடம் இருந்து எப்படி தப்பிப்பது?
மும்பையும் முக்கிய நடிகராக ஈடு கொடுத்திருக்கிறது. பணக்காரர்களின் வெர்ஸொவா, கப்பல் உடைக்கும் சேரி துறைமுகம், ஆட்டோவும் டாக்ஸியும் ஓடும் சந்துக்கள், ஆற அமர ஊழியம் செய்யும் அரசாங்கத்தின் முகம் எல்லாம் துணை நடிகர்கள். அன்னிய நகரத்தில் முகம் தெரியாத அப்பாவை தேடும் மகளின் துப்பறிதல் நடுவே ஓஷோ வருகிறார். மகளிரின் நிலை பேசப்படுகிறது. பதின்ம வயதின் குழப்பங்கள் உணர்த்தப்படுகின்றன.
நேர்க்கோட்டில் பிரசங்கம் கலந்த பிரச்சாரம் மட்டும் காணவில்லை.