லண்டன் அசப்பில் பார்த்தால் தேர்ந்த அமெரிக்க நகரம் போல் இருக்கிறது. சொல்லப் போனால் நியு யார்க்கின் ஒன்று விட்ட தம்பி போல் தெரிந்தது. ஆங்காங்கே சூதாட்ட மையங்கள்; இரயில்வே ஸ்டேஷனிலேயே ’வை ராஜா வை’ விளையாடலாம் எல்லாம் பார்த்தால் கோட் சூட் போட்ட லாஸ் வேகாஸ் வந்துவிட்டோமோ என்னும் சந்தேகத்தைக் கொடுக்கும்.
காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வோர் கையில் பை இருக்கும். அது மாதிரி லண்டனில் வேலை முடிந்து வீடு திரும்புபவர் கையில் பியர் இருக்கும். பொதுவில் பியர்சாந்தி செய்வதை லாஸ் வேகாஸ் மட்டுமே தரிசனம் செய்திருக்கிறேன். லண்டனில் குடி கொண்டாட்டமாக இல்லாமல் உதிரமாக இணைந்திருக்கிறது.
கண்காணிப்பு கேமிராக்களின் அணிவரிசை, நிஜமாகவே ’The Truman Show’ படப்பிடிப்பில் அங்கம் வகிக்கிறோமோ என சினிமாவை வாழ்க்கையோடு இணைத்தது. நட்ட நடு பாரிஸ் நாட்டர்டாம் தேவாலயத்தின் எதிரேயே ஒன்றுக்கிருப்பவர்கள் போல் எல்லாம் இல்லாமல் லண்டனில் சந்து பொந்துகளில் எங்காவது எச்சில் துப்பினால் கூட தபாலிலே சம்மன் அனுப்புவார்கள் என இங்கிலாந்துக்காரர்களை மிரட்டி உருட்டி வைத்திருக்கிறார்கள்.
மதிய உணவிற்கான இடைவேளையை கர்ம சிரத்தையாக பின்பற்றுகிறார்கள். அமெரிக்க நகரங்களின் அலுவல் வாழ்க்கையில் பெரும்பாலானோர் ஓடிக்கொண்டேதான் சாப்பிடுவார்கள். ஒரு கவளம் சாப்பாடு; நாலு வரி நிரலி. அல்லது ஒரு கடி சாண்ட்விச்; எட்டு வரி பதிவு… இப்படி வேலையும் கையுமாக உண்ணாமல் ஆற அமர புல்தரையில் ஜோடி ஜோடியாக அமர்ந்து போஜனம் புசிப்பதையும் இங்கேக் கொட்டிக் கொள்வதையும் பார்த்தாலே டம்ஸ் கேட்டது என்னுடைய அமெரிக்க வயிறு.
குப்பை போல் ஒதுக்கித்தள்ளும் குடிசைவாசிகளின் ஒதுக்குப்புறங்களும், காடுகளுக்குள் வீடு அமைக்கும் புறநகர் கலாச்சாரங்களும், அடுக்குமாடி கட்டிடங்களும், அவற்றில் கோடானு கோடிகளை அள்ளும் வங்கிக்கூலிகளும், அறிமுகமில்லாதவர்களுக்கு உள்ளீடற்ற ஷோ கேஸ் சிரிப்பு முகமும், தவறுதலாக இடித்தால் கண்டிப்பு நிறைந்த போலி மன்னிப்புகளும், மேற்கத்திய நாகரிகமாகக் கருதும் புறப்பூச்சு நாசூக்குகளும், இன்னொரு அமெரிக்காவையே எனக்கு இங்கிலாந்தில் காட்டிக் கொண்டிருந்தது.