இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தவுடன் என்னை முதன் முதலில் ஈர்த்தது பாத்ரூம்தான். அதுவும் சாதாரண பாத்ரூம் அல்ல… ‘Disabled Bathroom’.
விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அவசரமாக வந்தது. பத்து மணி நேர விமானத்தின் இறுதியில், நீங்கள் டாய்லெட்டுக்கு சென்றால், உங்களுக்கு ‘வானூர்தியத்து செருவென்ற சலக்கசெழியன்’ என்னும் பட்டம் கொடுக்கலாம். லண்டனில் இருந்து கிளம்பியவுடன் கிடைக்கும் பழரசங்களும், பொறைகளும், ஏ.வி.எம்.எல்.களும், கோழிக் குருமாக்களும் கலந்து கிடைக்கும் சுகந்தத்தின் நடுவில் உட்கார்வதற்கு நேரடியாக புத்தரிடமே ஞானோபதேசம் பெற்றிருந்தாலும் இயலாது.
எனவே, காத்துக் கிடந்த வேகம். அதனுடன், பீறிடும் உற்சாகம். நுழைந்தவுடன் காலியாக இருந்த கழிவறைக்குள் நுழைந்தால், நான் பம்பாயில் இருந்த பெட்ரூமை விட பெரிய அறை. இந்த மாதிரி விசாலமான இடத்தில் நால்வரை வாடகைக்கு அமர்த்தலாமே என எண்ண வைக்கும் தேம்பத் தவள உருள வைக்கும் புழக்கப் பிரதேசம். கொணர்ந்த பெட்டிகளை ஈசானிய மூலையில் சார்த்துவிட்டு, போட்டிருந்த கவச கோட்டுகளை வாஸ்துப்படி மாட்டிவிட்டு, கையில் குமுதத்தை எடுத்துக் கொண்டு, நிம்மதியான வெளியீடு.
பீடம் கூட கொஞ்சம் உயர்வாக அசல் ராஜாக்களின் சிம்மாசனம் போல் சற்றே வசதியாக காணக்கிடைத்தது. பிருஷ்டத்தை அமர்த்துவதற்கு எந்தவித சமரமும் செய்யாமல், சாதாரணமாக அமர முடிந்தது. வேலை ஆனவுடன், உள்ளேயே கை அலம்பும் இடம். சொந்த ஊர் மாதிரி சோப் போட்டு சுத்தம் செய்த பிறகு ஆற அமர ஆடைகளை மாட்டிக் கொள்ளும் வசதி.
முடித்துவிட்டு, வெளியில் வந்தால், சக்கர நாற்காலிக்காரர் முறைத்துப் பார்க்கிறார். அவருக்காக பிரத்தியேகமாக இருக்கும் இடத்தில், அத்துமீறி, சகல போஷாக்குடன் இயங்கும் ஒருவன் ஆக்கிரமித்துக் கொண்டால் கோபம் வராதா? ஆனால், என்னவாக இருந்தாலும் வாய்ப்புக் கிடைத்தால், மாற்றுத்திறனாளிக்களுக்கான கழிப்பிடத்தை உபயோகிப்பதை தவறவிடாதீர்கள்.