ஒழுங்குமுறையாக அமெரிக்காவிற்கு குடிபுகுந்த இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் எப்போதும் இருக்கும் அச்சம் என்பது ‘நிரந்தரக் குடியுரிமை’ வருமா? எப்போது வரும்? வருவதற்குள் பெற்றோர் மண்டையைப் போட்டால், இந்தியாவிற்கு அவசரமாக செல்ல முடியுமா? அப்படி சென்றால், திரும்பி அமெரிக்கா நுழைவதற்கு விசா போடவேண்டுமா? விசா கிடைப்பதற்கு எத்தனை நாள் இந்தியாவிலேயே காத்திருக்க வேண்டும்? விசா படிவத்தில் என்ன எல்லாம் கேட்பார்கள்? பிறப்பு சான்றிதழ் வைத்துக் கொண்டிருக்கிறோமா? எச்1-பி எப்போது காலாவதி ஆகிறது? எப்பொழுது நீட்டிக்க வேண்டும்? அதற்கு என்ன எல்லாம் ஜெராக்ஸ் போட வேண்டும்? எப்படி தபாலில் அனுப்ப வேண்டும்?
இப்படி எண்ணிலடங்கா கவலைகளும், தாள்களும், தகவலேடுகளும், கோப்புகளும், தேதிகளும், அறிக்கைகளும், ஆய்வுகளும் நிறைந்தவை.
நாளைக்கு நடக்கப் போவதை நமக்கு கடவுளோ அறிவியலோ தேதிவாரியாக சொல்வதில்லை. வருங்காலத்தை மட்டும் அட்டவணை போட்டு மாதாமாதம் ஆருடம் வெளியிட்டால், அதை விடப் பெரிய மனக்கிலேசம் எதுவும் இருக்காது.
ஆனால், அமெரிக்க குடிபுகல் துறை இந்த வேலையை கர்மசிரத்தையாக செய்கிறது. இளங்கலை மட்டும் படித்தவருக்கு எப்பொழுது ‘பச்சை அட்டை’ வேலை துவங்கும்; முதுகலை மட்டும் வாங்கியவருக்கு எந்தத் தேதியில் குடிநுழைவு விண்ணப்பம் வாங்கப்படும்; அமெரிக்காவிலேயே மேற்படிப்பு படித்தவருக்கு எத்தனை நாள் இன்னும் அமெரிக்காவிலேயே இருக்க பாத்யதை; வேலைக்காக வந்தவர் எந்த நாளில் தகுதிக்கான தடவுகளை தர வேண்டும் என்று பட்டியல் போட்டு இணையத்தளத்தில் சொல்லுகிறது.
பங்குச்சந்தை மேலே ஏறும்… இறங்கும். அது போல் இந்தத் தேதிகளும் தடாலென்று முன்னேறும்… அவ்வாறே பின்னோக்கியும் பயணிக்கும். பங்குச்சந்தைகளில் சில நிறுவனங்களின் மதிப்பு உயரும்… அவ்வாறே சில நாட்டு மக்களின் குடிமைப் பத்திரம் வேகமாக நடக்கும். அங்கே பணத்தோடு விளையாட்டு; இங்கே வருங்கால வாழ்க்கைக்கான கணக்கு.
என்னதான் குடியுரிமை கிடைத்து பரமபதத்தை அடைந்துவிட்டாலும், ட்ரெவான் மார்ட்டின் மாதிரி சில வழக்குகள் நமக்கு உண்மை நிலையை இடித்துரைத்துக் கொண்டே இருப்பது வேறு விஷயம்.