நல்ல சுவாரசியமான அறிபுனை கதைக்கு ஒரு உதாரணம்


2013ல் புலிட்சர் பரிசு பெற்ற ஆடம் ஜான்சன் இந்த மாத Esquireல் கதை எழுதியிருக்கிறார். தற்கால காலச்சுவடு, சொல்வனம்.காம் போன்ற இதழ்களில் வரும் எந்தப் புனைவும் இதற்கு நிகரானவையே.

கதை ஏன் என்னை கவர்ந்திழுத்தது? சிறுகதையின் தலைப்பு ‘நிர்வானா’. அது எனக்கு ரொமபவேப் பிடித்த இசைக்குழு.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ரக ஆரம்பம். திடீரென்று வாயில் நுழையாத வியாதி வந்த மனைவி. கை, கால் இழுத்துக் கொண்டுவிடுகிறது. அவளை மிகவும் அனுசரித்துப் பார்த்துக் கொள்ளும் கண்கண்ட கணவன் என்று பீம்சீங் காலத்து உருகல். ஆனால், அதை கவுதம் வாசுதேவ் மேனன் நடையில் சொல்லியிருக்கிறார். செயலிழந்த உறுப்பு கொண்ட அவர்களுக்கிடையேயான உடலுறவு சொல்லும்போது கூட நன்றாகவே உரு ஏற்றுகிறார்.

இலக்கியத்தில் அடிக்கடி கேட்கப்படும் வாசகம் ‘தட்டை’. இந்தக் கதையில் அதைக் காணோம். களன் சிலிக்கான் பள்ளத்தாக்கு. நாயகனும் கண்டுபிடிக்கிறான். அதுவும் எந்த சமயத்தில்? மனைவியை கண்ணும் கருத்துமாக விழித்திருந்து கவனித்துக் கொண்ட பதினைந்தே நாள்களில் ’ஹாலோகிராம்’ மனிதர்களை உருவாக்குகிறான். சாதாரண hologram அல்ல. சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் உருவத்திற்கு உயிர் தருகிறான். இணையம் மூலமாக அவரின் விழியப்படங்களையும் ஒளிப்படங்களையும் நடை உடை பாவனைகளையும் இணைத்து உலவ விடுகிறான்.

இந்த மாதிரி ஹோலொகிராம் உருவாக்குவதால் என்ன பிரச்சினைகள் எப்படி எல்லாம் எழும் என்பதையும் அறிபுனைவாக அலசுகிறது சமூகப் புனைவு. எல்லோரும் பொய் உருவங்களைக் கோரி அவனிடம் வருகிறார்கள். அவனே அந்த மாதிரி ஒரு தோற்றத்தை சரி செய்யும் reputation management பணியாளன். இப்பொழுது இறந்து போன நிர்வாணா குழுவின் கர்ட் கோபேனுக்கு நிகர் உருவாக்குவது சரி… வாழ்ந்து கொண்டிருந்தாலும் அசைவற்ற மனைவிக்கு நிகர் உருவாக்குவது கூட சரி… ஆனால், ஃபேஸ்புக்கில் எக்குத்தப்பான படம் போட்டுவிட்டு அதை அகற்ற போலி நிகர் உருவாக்குவது எப்படி சரி?

இது எதிர்கால உருவகம். கூடவே, சமகால கூகிள் கண்ணாடியும் ஆளில்லாமல் பறக்கும் விமானங்களும் வருகிறது. அவனே இயந்திரகதியில் இயங்குவதை இந்த இரண்டு வன்பொறிகளும் உணர்த்துகின்றன. எவரோ இயக்க, எங்கோ பறந்து, எவற்றையோ பார்க்க வைக்கும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் drone, மனைவிக்கு புது உலகத்தைக் காட்டுகிறது. கட்டிலிலும் நரம்புகள் எங்கும் ஊசித் துளைப்பாக முடங்கியவரை, தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இருபது பக்க சிறுகதை எழுதுவது பெரிய விஷயமல்ல… நாலு அறிவியல் கண்டுபிடிப்புகளை புனைவில் தூவுவது பெரிய விஷயமேயல்ல… நேற்று தோன்றிய வியாதிகளை விவரிப்பது புதிய சரக்கேயல்ல… கவித்துவமாக உருவகங்களை உலவ விடுவது சங்கத்தமிழ் சங்கதி… ஆனால், எல்லாவற்றையும் சுவாரசியமாக, பக்கங்களை ஆர்வமுடன் புரட்டுமாறு ஒரே கதையில் புழங்க விடுவது மிகப் பெரிய விஷயம்.

தமிழில் நான் எழுதினால் மட்டுமே சாத்தியம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.