அமெரிக்காவில் இப்போது இரு வார்த்தைகள் பலமானப் புழக்கத்தில் இருக்கின்றன. பாஸ்டன் மாஃபியா கும்பல் தலைவர் வைட்டி பல்ஜர் (Whitey Bulger)க்கு ‘Rat’. இன்னொரு பக்கம் எட்வர்டு ஸ்னோடென் (Edward Snowden)க்கு ’Whistleblower’.
சொந்த சகோதரர்களின் செய்கையைக் காட்டிக் கொடுத்தால் Rat. குறிப்பாக கொள்ளையர்களுக்கு நம்பகத்தன்மை மிகவும் அவசியம். அவ்வாறு சகாக்களை நம்பி ஒப்படைக்கும் விஷயங்களை காவல்துறையிடம் போட்டுடைப்பது மித்திர துரோகம் மட்டுமல்ல… அதையும் தாண்டி பாதகம் விளைவிப்பது என்பதால் Rat.
சகுனி வேலை செய்தால் Whistleblower. இது ராஜத்துரோகம். பெரிய அளவில் சதி செய்து, உள்ளாளாக நுழைந்து, அரசாங்கத்தில் உளவு பார்த்தால் Whistleblower. சந்தர்ப்பவசத்தால் கவிழ்ப்பது Rat. சூழ்ச்சி செய்து கவிழ்ப்பது Whistleblower.
ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பணத்தைப் பதுக்கியவர்கள் யார் என்று ஒருவர் வெளியிட முடியாது. கொன்று விடுவார்கள். பிராட்லி மானிங் மாதிரி ஒற்று அறிக்கைகளை விக்கிலீக்ஸ் ஆக்கினால், குற்றஞ்சாட்டப்பட்டு கம்பி எண்ணுவார்கள். 9/11 திவிரவாதிகளின் ஆதிவேரை கிளற முயற்சித்தால் கோலீன் ரௌளி (Coleen Rowley) மாதிரி காணாமலும் போய்விடுவார்கள். மோனிகா லூயின்ஸ்கியும் பில் கிளிண்டனும் ஜலபுலாஜல்ஸ் செய்ததை சொன்னால் லிண்டா ட்ரிப் மாதிரி புகழும் பெரும்பணமும் பெற்றுக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
ஆரன் ஷ்வார்ட்ஸ் போல் தற்கொலை செய்யாமல் பதுங்கி வாழும் ஜூலியன் அஸாஞ்சேக்கள் வாழ்க!