இந்தியாவில் இருந்து வருபவர்கள் சொல்லும் கதைகள் சினிமாப் படங்கள் போல் நம்ப முடியாத காட்சிகள் கொண்டிருக்கின்றன.
இவர் டெல்லி பட்னியில் வேலை பார்த்தவர். வழக்கம்போல் நேர்காணல் எடுக்க சென்றிருக்கிறார். எட்டு விரல்களில் மோதிரம். கழுத்தில் காசு மாலை போல் தங்கச் சங்கிலி. கேட்ட கேள்விகளுக்கு போட்டிருக்கும் இரத்தினாபரங்கள் மாதிரி இல்லாமல் ஒற்றை வார்த்தை பதில்.
“மூன்று எண்களைக் கொடுத்து, அதற்குள் பெரிய எண்ணை கண்டுபிடிக்கச் சொல்லும் நிரலி எழுது.”
“எதற்குங்க எழுதணும்? பார்த்தாலே எது பெருசுனு தெரிஞ்சுடாதா…”
“உங்களுக்கு பிடித்தமான கணினி மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சி++, ஜாவாஸ்க்ரிப்ட்… நீங்கள் எப்படி எழுதுவீர்கள்?”
“அதான் சொன்னேன் இல்ல… சின்னக் கணக்கு கூட தெரியாமலா, கோடிங் செய்வாங்க?”
வார்த்தைகள் ஆக்ரோஷமாக வந்து, இண்டர்வ்யூவிற்கு வந்த ஆபரணதாரி கையை ஓங்கி விட்டார். அலறிக் கொண்டு ’ஆதிமூலமே என்னைக் காப்பாற்று’ என்று மனிதவளத்திடம் சரணாகதி அடைகிறார் கதைசொல்லி. அவர்களும் தங்களின் வாயிற்காப்போனை அழைத்து, வில்லனை விரட்டி விடுகிறார்கள்.
சில மணி நேரம் கழிகிறது. ஜிப்ஸியில் பதினான்கு பேரை அடைக்க முடியுமா? அடியாட்களுடன் வந்த ஆபரணதாரி, இப்பொழுது சோடா பாட்டில் வீசுகிறார். பட்னி சிப்பந்திகள் எல்லோரும் கொல்லைப்புறம் வழியாக பத்திரமாக அனுப்பிவைக்கப் படுகிறார்கள். அதிகாரபூர்வமாக மூன்று நாள் ஓய்வு விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு பட்னி பணிக்கிறது.
வாரயிறுதி முடிந்து வந்து பார்த்தால், புதிதாக ஐந்து பேர் வேலையில் இணைந்திருக்கிறார்கள். கஃபேடேரியா பக்கத்தில் உள்ள முக்கு கலந்தாய்வு அறையை அவர்களின் அலுவலகமாக மாற்றி இருக்கிறார்கள். ஆபரணதாரியும் அவனுடன் சோடா பாட்டில் வீசிய பதினால்வரில் நால்வர் மட்டும் அவன் உடன் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.
விக்கித்துப் போனவனைத் தட்டிக் கொடுத்து மனிதவளம் சொல்கிறது: “இனிமேல் நீ எசகு பிசகாக கேள்வி கேட்டாலும் பிரச்சினையில்லை. நம்ம கிட்டயும் ஆள் இருக்காங்க. கவலைப்படாம இண்டர்வ்யூ செய்!”