எழுத்துத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான சிறுவர் இலக்கியத்திற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பால சாகித்ய விருது, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் என்ற படைப்பை எழுதிய இரா. நடராஜனுக்கும், 35 வயதுக்குள்பட்ட இளம் படைப்பாளிகளுக்கான ’யுவ புரஸ்கார்’ விருதுக்கு கால்கள் என்ற படைப்புக்காக, எழுத்தாளர் ஆர். அபிலாஷ் சந்திரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் வாழ்த்துகள்.
யுவ புரஸ்கார் விருதிற்கும் கணிதத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் மெடலுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை உண்டு. கணித ஆராய்ச்சி பரிசு பெறுவதற்கு நாற்பது வயதிற்குள் இருக்க வேண்டும். சாகித்ய அகாதெமியின் இளவயது விருது பெற முப்பத்தைந்திற்குள் இருக்க வேண்டும். ஃபீல்ட்ஸ் மெடல் பெற்றால் ஒரு மில்லியன் அமெரிக்க டாலராவது கைவசம் கிட்டும். யுவ புரஸ்கார் கிடைத்தால் இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள் கிடைக்கிறது.
இரண்டு விருதுகளுமே தத்தம் துறைகளில் செயல்படுபவர்களை மேலும் ஆர்வத்துடன் இயக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. கணிதத்தில் என்ன உட்பிரிவில் விருப்பமோ, அந்தப் பகுதியில் பணத்தட்டுப்பாடின்றி ஆராயவும் நேரஞ்செலவழிக்கவும் ஃபீல்ட்ஸ் பதக்கம் தருகிறார்கள். பல்கலைக்கழகத்திடம் கையேந்த வேண்டாம். பெருநிறுவனத்தின் ஆமையும் முயலும் பந்தயங்களில் கலந்துகொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று நிதி கேட்டு புரவலர்களை எதிர்நோக்க வேண்டாம். கணித மேதைகள் தேர்ந்தெடுத்து சாதித்த துறையில் மேலும் தீவிரமாக ஆராயவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் இந்த மில்லியன் டாலர் பரிசு உதவும்.
ஆனால், நடப்பது என்ன?
ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வெல்லாதவர்கள், இன்னும் ஆழமாக, புதியதாக, வித்தியாசமாக ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் வெளியிடுகிறார்கள். ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்றவர்கள் வெளியிடும் ஆராய்ச்சிகளை விட கிடைக்காதவர்களின் ஆய்வேடுகள் எண்ணிக்கை அளவில் அதிகம் என்கிறார்கள். இது வரை பதக்கம் வென்றவர்கள் வெளியிட்டதையும் பதக்கம் வெல்லாதவர்கள் நாற்பது வயதிற்கு பிறகு வெளியிட்டதையும் Kirk Doran at Notre Dame and George Borjas at Harvard அலசினார்கள்.
பரிசு வென்றவர்கள் தங்களின் மூல ஆராய்ச்சியை விட்டு ஒதுங்கிவிட்டார்கள். தங்களின் திறமையை வேறு துறைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால், இந்தப் புதிய துறையில் புத்தம்புதியதாகக் கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் நிறைய நாளாகி இருக்கிறது. அதனால், அவர்களால், அதிக அளவு ஆழமான ஆராய்ச்சிகளை செய்யமுடிவதில்லை. பரிசு வெல்லாதவர்களோ, பண ஆதாரம் இல்லாத நிலையில், தங்களின் முதல் துறையிலேயே கவனமாக ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து இருக்கிறார்கள். அதனால், மென்மேலும் பல்வித புதிய எழுத்துகளை ஊக்கத்துடனும் புதிய தரிசனங்களுடனும் உண்டாக்க முடிந்திருக்கிறது.
இந்தியப் புனைவுலகில் ஒரு கதை எழுதியவுடனேயே ஒருவர் இலக்கிய விமர்சகராகவும் சமூக சிந்தனையாளராகவும் பீடம் போட்டுக் கொள்வதால், ‘யுவ புரஸ்கா’ருக்கு இந்த அபாயம் இருப்பதாகத் தெரியவில்லை.