சாதுவான மனித இயல்பு எப்பொழுது விஸ்வரூபம் எடுக்கும் என்று சொல்ல இயலாது. அதுபோல் அமெரிக்காவில் தொழிலாளர்கள் எப்பொழுது பொங்குவார்கள் என்பதும் சொல்ல முடியாது. தங்கள் தலைவரை நிர்வாகத்தில் இருந்து நீக்கி விட்டார்கள் என்று மார்க்கெட் பாஸ்கெட் ஊழியர்கள் அதிகார பூர்வமற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாஸசூஸட்ஸ் மாநிலத்தில் ஒவ்வொருவரின் வீட்டிற்கு அருகேயும் சல்லிசான விலையில் மளிகைப் பொருள்களும் காய்கறிகளும் அன்றாடத் தேவைகளும் கிடைக்கும் பல் பொருள் அங்காடி – மார்கெட் பாஸ்க்கெட்.
சிகாகோவில் பள்ளி ஆசிரியர் வேலை நிறுத்தம், உள்ளூரில் மின்சார விநியோகம் செய்யும் நிறுவன ஸ்டிரைக் என்று விதவிதமாக பார்த்திருக்கிறேன். (முந்தைய பதிவு: நியு யார்க் நிறுத்தம்) அந்த விதத்தில் இது கொஞ்சம் வித்தியாசமான ஸ்ட்ரைக். நுகர்வோர்கள் இதை வரவேற்கிறார்கள். பணி புரிபவர்களுக்கும், நிச்சயம் இதே போன்ற வேறு வேலையோ, அல்ல து இதே வேலையோ நிச்சயம் கிடைக்கும். எப்படியாக இருந்தாலும், குறைந்தபட்ச ஊதியத்திற்கு பணிபுரிபவர்கள். மார்க்கெட் பாஸ்கெட் இல்லாவிட்டால், ஆல்பர்ட்சனஸ்… ஆல்பர்ட்சன்ஸ் மூடிவிட்டால் ஷாப் ரைட்.
தங்களுடைய மேலாளருக்காக, கோடி கோடியாக சம்பாதிக்கும் முதலாளிக்காக, முதலிய தேசத்தில் போராட்டம் வெடிக்கிறது என்பது மிகப்பெரிய நம்பவியலாத நகைமுரண். தினம் ஒரு கார், ஊருக்கு ஒரு வீடு, பரம்பரை சொத்து என்று செல்வத்தில் திளைக்கும் தலைவருக்காக, நூற்றுக்கணக்கான கிளைகளில் ஆயிரக்கணக்கான தினக்கூலிகள் தெருவில் இறங்கி கோஷம் போடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது திராவிடத் தலைவர்களைப் பார்த்து ‘பெரியார் வாழ்க! அண்ணா நாமம் ஓங்குக’ என்று முழங்கும் தமிழகத் தொண்டர்கள் நினைவுக்கு வந்து சிரமப்படுத்துகிறார்கள்.
இவர்களின் வேலைக்கு வராத கைங்கர்யத்தால், வேறொரு அங்காடிக்கு சென்றேன். கொஞ்சம் தட்டுத் தடுமாறி, என்னுடைய வழக்கமான வாழ்க்கைப் பொருட்கள் எங்கே இருக்கின்றன என்பதை கண்டுகொண்டேன். மனைவி வேறு ஊரில் இல்லாததால், நிதானமாக, ஒவ்வொரு சந்திலும் நுழைந்து, அதில் இருக்கும் அனைத்து வரிசைகளையும் ஆராய்ந்து, புதிய அறிமுகங்களையும் அறிமுகமான நண்பர்களையும் பார்க்க முடிந்தது.
சொட்டு நீலம் போன்ற டப்பா வடிவில் ஊக்கம் தரும் நீர்ச்சொட்டுகள் வந்திருக்கின்றன; கிரேக்கமும் மெக்சிகோவும் பல வீதியிலும் தங்கள் பங்கை ஆக்கிரமித்திருக்கின்றன; கலப்படம் இல்லா ஆர்கானிக் தயாரிப்புகள் நிறைந்திருக்கின்றன. கை நோகாமல், நேரமும் செலவழியாமல் வீட்டில் இருந்தபடியே உண்ணும் சோம்பேறி உணவுகளை வாங்கினேன்.
மேலே பார்த்திருப்பீர்களே!?