அசப்பில் பார்ப்பதற்கு அக்ஷர்தாம் போல் பிரும்மாண்டமாக இருக்கிறது. கோபுர கலசத்தில் மட்டும் மூன்று இலட்சம் தங்க புத்தர்களை இழைத்திருக்கிறார்கள். மேற்கூரையிலும் கோவில் விமானத்திலும் ஏழு லட்சம் தங்கத்தகடுகள் மின்னுகின்றன. குஜராத்தில் அஷர்தாம் கொடிகட்டிப் பறக்கிறது என்றால், தாய்லாந்தில் வளரும் பையனாக தம்மகாயா பௌத்தம் தழைக்கிறது.
ஹீனயானா, மகாயானா என்றெல்லாம் புத்தரை சம்சாரத்தில் இருந்து நிர்வாணமின்றி முன்னர் பிரித்திருந்தார்கள். இப்பொழுது தம்மகாயர்கள் லோகாயத கர்மாவிற்கு அழைக்கிறார்கள். கொடை கொடுத்தால் நற்பயன் கிட்டும். அவர்கள் கோவிலுக்கு தானம் வழங்கினால், ஏழேழு ஜென்மங்களுக்கும் பணம் குவியும் என வாக்குறுதி தருகிறார்கள். உலகெங்கும் முப்பது நாடுகளில் கிளை விட்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல், பௌத்தர்களுக்கு தம்மகாயம் என்கிறார்கள்.
ஆசையை மறப்பது இந்தக் கால இளைய தலைமுறையினருக்கு உகந்த வேதம் அல்ல. அத்தனைக்கும் ஆசைப்படு; அதை அடைய எங்களுக்கு நிறைய காசு கொடு என்பது தம்மகாயத்தின் தாரக மந்திரம். கூடவே, கொசுறாக தியானத்திற்கும் அழைக்கிறார்கள். கண்ணை மூடினால், பளிங்குப்படிகம் தெரியும். அதை அப்படியே, நிஷ்டை வழியாக மூக்கின் வழியாக தலைக்குள் நுழைக்க வேண்டும். மேலும் யோக மார்க்கம் சித்தித்தால், உந்திக்குக் கொணர்ந்துவிடுவோம். பூரண ஞான சமாதி நிலையாக, அந்த ஸ்படிகத்தை, அப்படியே உந்திக்கு இரண்டு கணுவிரல் மேலே நிறுத்திக்கொண்டால் பாவனை கைகூடுகிறது.
ஒரே சமயத்தில் இங்கே ஒரு மில்லியன் பேர் தியானிக்கலாம். இந்த மாதிரி கூட்டுப் பிரார்த்தனையால் இஸ்ரேல் தங்கள் மீது குண்டு மழை பொழியாது என நம்புகிறார்கள். சிலர் வாழும் நரகமான, பாலஸ்தீனத்திற்கே ஸ்தூல உடலை விட்டு விட்டு சென்று திரும்பியிருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு நாளைய லாட்டரி எண்கள் கண்களில் விளங்கியிருக்கிறது.
மசாஜுக்கு புகழ் பெற்றிருந்த தாய்லாந்து, இப்பொழுது மதத்திற்கான தரகிலும் வருவாய் ஈட்டுகிறது.