Kochadaiyaan – கோச்சடையான் விமர்சனம்


தமிழராக இருப்பதற்காக இரண்டு பேரை மரியாதையுடன் பாராட்டத் தோன்றும். ஒருவர் சாங் முதற்கொண்டு எல்லாவற்றிலும் பரிபூரணமாய் இயக்கும் சாங்கர் எனப்படும் இயக்குநர் ஷங்கர். இவரோடு ரஜினிகாந்த் இரண்டு படம் செய்திருக்கிறார். இரண்டாவது விமர்சனத்தில் கறார்தன்மையும் அந்த மாதிரி விமர்சனம் தன்னிடம் வராமல் இருக்க செதுக்கும் ஸ்வச்ச எழுத்துக்காரர் ஜெயமோகன். இவருடன் மணிரத்னம் படம் செய்திருக்கிறார்.

அதன் பிறகு “கோச்சடையான்” போன்ற ஆக்கங்களும் தமிழ்ச்சூழலில் இயங்குகின்றன.

கதை மட்டும் வெகு சிரத்தையாக முழுமையாக உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கதைக்கு எந்த மாதிரி காட்சிகள் வைத்தால் அசைப்படம் (அனிமேஷன்) சிறப்பாக இருக்கும் என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால், அந்த நுட்பம் ஓரளவாவது பார்க்க சகிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறதா என்பதில் அசிரத்தையா? அலட்சியப் போக்கா? அறியாமையா? என விவாதிக்க வைக்கிறார்கள்.

“வேட்டையாடு விளையாடு” படம் பார்த்தவுடன் அமெரிக்கத் தொலைக்காட்சியில் வாராவாரம் ஒளிபரப்பாகும் சி.எஸ்.ஐ. போன்ற எந்த போலீஸ் சீரியலும் நம்பகத்தன்மையிலும் கதாம்சத்திலும் பரபரப்பிலும் “வே… வி.”ட்டை விட பன்மடங்கு சிறப்பாக இருக்குமே என தமிழ்ப்படங்களின் நிலையை எண்ணி வருத்தப்பட வைத்தது. அதே போல் சாதாரண டிவி அனிமேஷன் கூட உயிர்ப்போடும் உள்வாங்க வைக்கும் விவரங்களோடும் சூழலின் தீர்க்கமான துல்லியமான விவரணைகளுடனும் அமைந்திருக்கும். அந்த அளவு தர உந்துதல் கூட இல்லாத அசிரத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் கோச்சடையானில் மின்னுகிறது.

வெறும் ரஜினிகாந்த் பெயரை வைத்து கல்லா கட்டலாம் என மகள் நினைக்கிறார். அதற்கேற்ப அரங்குகளும் அகிலமெங்கும் நிறைகிறது. எவருக்கும் மோசமானப் படைப்பை பார்க்கிறோம் என தர்மசங்கடம் எழவில்லை. படம் உருவாக்கியவருக்கும் அல்ப பவிஷுடன் பழுதான பொருளை சந்தையில் தள்ளுகிறோம் என்னும் மனக்கிலேசமும் எழவில்லை. இப்படியான அரசியல், கலை, விளையாட்டு, சூழலில் இயங்க இந்தியாப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒன்றரைக்கண். அவர்களின் பின்புலத்தில் படு கேவலமான கிராபிக்ஸ். நடுவில் சலனப் பதிவு சல்லியடிப்பு. தீபிகா படுகோனேயை ஒரு கோணத்தில் பார்த்தால் ஐஷ்வர்யா ராயைப் போல் இருக்கிறார். சண்டைக் காட்சியிலும் சிரிக்கும் முகபாவனை. காதலனை சிறையில் போட்டாலும் அதே சிரிக்கும் முகபாவம். அசப்பில் ரானா (ரஜினி கதாபாத்திர)த்தின் தங்கையைப் போலவே இருக்கிறார். இருவருக்கும் ஆடை மட்டுமே வித்தியாசம்.

“அரவான்” ஆதியைப் பார்த்தால் ராம்ராஜ் வேட்டிகள் விளம்பரத்தில் வரும் நட்சத்திரங்கள் போல் முகமற்று சொரணையற்று பாவமற்று பூசி மெழுகின களிமண் சிற்பம் போல் இருக்கிறது. டிஸ்னி படங்களில் வரும் வர்ணஜாலம் வேண்டாம். டோரா போல் கொஞ்சமாவது மினுக்கியிருக்கலாம்.

இவ்வளவு சிரமப்பட்டு சலனப் பதிவு அசைவூட்டப் படம் எடுப்பதற்கு பதிலாக அசல் ரஜினியை வைத்து எடுத்திருந்தாலே படம் பாந்தமாயிருந்திருக்கும்.

3 responses to “Kochadaiyaan – கோச்சடையான் விமர்சனம்

  1. பிங்குபாக்: ஆஸ்கார் 2015 | பதாகை

  2. பிங்குபாக்: Oscars 2015 | Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.