கடல் மீன் எப்படி எங்கெங்கோ சென்று அலைந்து விட்டு தன் பவளப்பாறைக்குத் திரும்புகிறதோ… குளிர்காலத்திற்காக பறவை எப்படி பலகாத தூரம் பறந்து வேடந்தாங்கலுக்குச் வந்துவிட்டு, தாய் ஏரிக்குத் திரும்ப குடிபெயர்கிறதோ… தெரியாது. எனக்கு கூகுள் வழிகாட்டியும் வேஸ் (waze) கைகாட்டியும் இயக்காவிட்டால், அடுத்த தெருவில் இருந்து கூட சொந்த வீட்டிற்கு வந்து சேரும் திசை தெரியாது.
இப்படிப்பட்டவனுக்கு மொழிப் பிரச்சினையும் சேர்ந்து கொண்டால்?
எல்லாக் காக்கைகளும் கா…கா… என்றுதான் கூவினாலும், அண்டங்காக்கையும் ஆனைச்சாத்தனும் கரையும் வித்தியாத்தை பறவையியல் வல்லுநர் சொல்லுவார். அதே போல் லண்டன்காரர்கள் ஆங்கிலத்திற்கும் என்னுடைய ஆங்கிலத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க வல்லுனர் வேண்டாமென்றாலும், “கா…கா…” என்று இரைந்தால், காக்கா வந்து சாதத்தைக் கொத்தித் தின்பது போல், நம் ஆங்கிலமும் எல்லாக் காக்கைகளுக்கும் புரியும் என்னும் மதர்ப்போடு இங்கிலாந்தில் இறங்கினேன்.
நான் செல்ல வேண்டிய இடத்தின் பெயர் “விக்டோரியா கோச் ஸ்டேஷன்”. ரயில்வே நிலையத்தில் இறங்கியவுடன் அகப்பட்ட முதலாமவரிடம் “விக்டோரியா ஸ்டேஷன் எப்படிங்க போகணும்?” என்றேன்.
அவரோ “அங்கேதான் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எங்கே போகணும்? முகவரி என்ன?” என ஆதுரமாக விசாரித்தார். இந்த மாதிரி மொழிப் பிரச்சினை வருமென்றுதான், பேப்பரும் கையுமாக அச்செடுத்து வந்திருந்தேன். அதைக் காண்பித்தேன். தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம், அண்ணா தெரு, அண்ணா நகர், அண்ணா பஸ் ஸ்டாண்டு, அண்ணா விமான நிலையம் இருப்பது போல், இங்கிலாந்திலும் பெயர் பிரச்சினை. ஒரே ஒருவர்தான். அறிஞர் அண்ணா கட்சிக் கொடிகளில் கை காண்பித்திருக்கிறார். இங்கே அன்னை விக்டோரியா அந்த மாதிரி வழி காண்பிப்பதற்கு பதில், நாஞ்சில் மனோகரன் மாதிரி கையில் மந்திரக்கோலோடு காட்சியளித்தார்.
டெல்லியில் ”பஸ்ஸடா” என்று செல்லமாக அழைப்பது போல், மரூஊ இருந்திருக்கலாம். அல்லது எலிசபெத்தாவது தனி வழி சென்றிருக்கலாம். ஒரு வழியாக அந்தக் கால குதிரை வண்டி நிலையமான இந்தக் கால பேருந்து நிலையத்தை வருவதற்குள் ஆங்கிலத்தை விட ஹிந்தி மட்டும் பேசினால் மகாராணியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என அறிந்தேன்.