Before I built a wall I’d ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offence.
Something there is that doesn’t love a wall,
That wants it down.
– “Mending Wall” – Robert Frost
பக்கத்துவீட்டுக்காரரையும் பாசமுடன் பார்க்க அழைக்கும் கவிதைகளை எழுதியவரின் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கும்? “ஹார்ப்பர்” பத்திரிகையில் ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் கதை எழுதியிருக்கிறார். கொஞ்சம் காட்டமாக; நிறைய உள்மாந்திரமாக; ஆங்காங்கே வம்பு தூவி.
முழுக்க முழுக்க புனைவு என்றால் விட்டுவிடலாம். புகழ்பெற்ற எழுத்தாளனைப் பற்றிய கற்பனை என்று சொல்லிவிடலாம். கற்பனை என்பதால் நிஜ சமாச்சாரங்கள் ஒன்றும் உள்ளே கிடையாது என்றும் விட்டுவிடலாம். ஆனால், ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் எழுதிய சிறுகதைக்கு Fall of Frost (by) Brian Hall புத்தகம் அடிப்படையாக இருந்தது என அடிக்குறிப்பிடிருக்கிறார். அப்படி என்னதான் குற்றம் செய்துவிட்டார் ராபர்ட் ஃப்ராஸ்ட்?
1. சக எழுத்தாளர்களை மரியாதைக் குறைவாக விமர்சிப்பது: மற்ற கவிஞர்களை எல்லாம் மட்டம்தட்டி தன் புகழைப் பரப்பி இருக்கிறார். தன்னை ஆராதிக்காத எவராக இருந்தாலும், அவர்களுடைய முக்கியமான ஆக்கங்களை தன்னுடைய இலக்கிய தாதாயிஸம் மூலமாக அமுக்கி இருக்கிறார்.
2. குடும்பத்தை சிதைத்தது; ஆறு வயது மகளை துப்பாக்கி முனையில், “அப்பாவா? அம்மாவா? இப்பவே ஒண்ணு தேர்ந்தெடு!” என்று நள்ளிரவு எழுப்பி மிரட்டுகிறார். ‘மானே…தேனே’ என்று கவிதைப் பழகத் துவங்கிய மகனை முளையிலேயே அறுக்கிறார். பதினாறு வயது சிறுமி எவரை பார்த்தாலும், அவர்கள் பின்னே தன் கவிதையைப் பாடி துரத்தியிருக்கிறார்.
3. ஓரிரு படைப்புகளை முன்னிறுத்துயே காலந்தள்ளியது: ரஜினியின் எல்லாப் படத்திலும் பன்ச் வசனம் வருவது போல், தன்னுடைய சிறந்த கவிதையை மட்டும் எல்லா சபைகளிலும் சொல்கிறார்.
இவை எல்லாவற்றையும் விட தன்னுடைய ஆதர்சம், தன்னுடைய கண் முன்னே சரிவதை இந்தக் கதை புனைவாக்குகிறது. இலக்கியவாதியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யலாமா என்னும் கேள்வியை வீசுகிறது. சரித்திரக்கதையை எப்படி புனைகதை ஆக்குவது என காட்டுகிறது. அறிஞர் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி போன்ற புனித போப் பிம்பங்களின் ஒன் ஹிட் வொண்டர் ஆக்கங்களை எப்படி கலைப்பது என காட்டுகிறது.
இங்கே இணையத்தில் முழுக்கதையும் கிடைக்கிறது