இந்தியத் தேர்தல் முறை காலத்திற்கேற்ப மாறலாம். தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக இருப்பது தவறு; பிரதம மந்திரி வேட்பாளரை அறிவிப்பது இழுக்கு என்று சாடுவது எல்லாம் தனி காமெடி. அதை விட்டுவிடலாம்.
வாக்களிப்பு முடிய 48 மணி நேரம் இருக்கிறபோது பிரச்சாரத்தை முடிப்பது விநோதமான அந்தக் கால வழக்கம். தொலைக்காட்சி, இணையம், தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் இல்லாத தரைவழி அஞ்சல் மட்டுமே உள்ள காலத்திற்கு ஏற்ற வழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பிரச்சாரம், குறுஞ்செய்தியில் தகவல், கட்சி டிவியில் விளம்பரம் என்றான பிறகு கடைசி நிமிட பொதுக்கூட்டத்திற்கு மட்டும் தடை போடுவதை விட்டு விடலாம்.
தேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பது அடுத்த ஹைதர் அலி கால பழக்கம். எந்த ஊரில் இருக்கிறோமோ, அந்த ஊரில் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். பெங்களூரில் படிக்கிறோமா… அங்கேயே வாக்களியுங்கள். பம்பாயில் பணிபுரிகிறீர்களா… அங்கேயே வோட்டுப் போடுங்கள். சொந்த ஊருக்கு பஸ் பிடித்து, அந்தத் தொகுதியில் யார் நிற்கிறார் என்று சாதி பார்த்து, கட்சி பார்த்து வாக்களிப்பதை விட, வசிக்கும் இடத்திற்குப் பொருத்தமான வாக்காளரைத் தேர்ந்தெடுப்பது காலத்திற்கேற்ற நடைமுறை.
வாக்களிப்பது என்பது சலுகை அல்ல. கடமை. வாக்குப் போடுவதை உரிமையாக நினைப்பவர்கள் வேலை நாளன்றும் வாக்களிப்பார்கள். வாக்களிப்பதை சிறப்பு தள்ளுபடியாக நினைப்பவர்களுக்குத்தான் லீவு கொடுக்க வேண்டும். மாலையில் எட்டு மணி வரை வாக்குப் போடும் நேரத்தை நீட்டிக்கலாம். மதிய உணவிற்கு செல்வது போல், ஊழிய நாளின் நடுவே வாக்குச்சாவடிக்கு சென்று வரலாம். தேர்தல் நாளுக்காக அரசு விடுமுறை விடுவது சோம்பேறித்தனத்தின் உச்ச எடுத்துக்காட்டு.
கடைசியாக வாக்குப் போடும் போது பிறர் பார்க்க, தன் வாக்கை செலுத்துவது. இதுவும் ஒன்றும் கொலைக் குற்றமல்ல. குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று, எவ்வாறு வாக்களிப்பது, எந்த பொத்தானை அழுத்துவது என செயல்முறை விளக்கம் செய்ய உதவலாம். என்னைப் போன்ற சந்தேகப் பிராணிகளுக்கு இறுதி கட்ட சோதனையாக, இந்த இன்னொருவரின் துணை உதவலாம். ரகசிய காப்பு விதிமுறை மீறல் எல்லாம் பத்தாம்பசலித்தனத்தின் வெளிப்பாடு.
இவ்வளவும் மாறினால் கூட என்ன… ஒரு மண்டலம் கூட பொறுப்பு வகிக்க திறனில்லாதவர்கள் கூட பிரதம மனிதிரியாகப் போட்டியிடும் சுதந்திர நாடாக இருப்பது மகிழ்ச்சியான கொண்டாட்டம்
ரைட்டூ:-) அதிலும் தேர்தல் முடிவு சொல்ல ஒரு மாசம் ஒத்திப்போடுவது இன்னும் வேடிக்கை. வன்முறை வெடிச்சுருமாமே……….. அப்படியா:(