பாஸ்டன் நகரம் பக்கமாக இருக்கும் கிராமப்புறத்தில் வசிக்க வந்தேன். அது மெதுவாக நகர்ப்புறமாக மாறுவதைப் பார்க்கிறேன். அந்த மாற்றத்தை “Coming Soon” என்று ஸ்டீவன் மில்லவுஸர் (Steven Millhauser) சிறுகதையாக படம் பிடித்திருக்கிறார். நியு யார்க்கரில் வெளியான புனைவு. இங்கே, அந்தக் கதைக்கான புகைப்படம் உருவான கதை.
தீஸியஸின் கப்பலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல் கதாநாயகனின் உலகமும் மீளுருவாக்கமாகவே நீள்கிறது. நேற்று வீடு இருந்த இடத்தில், இன்று அடுக்கு மாடி கட்டிடம். சில நாள் முன்பு காபி கடை. சில நாள் கழித்து தொடர் அங்காடி வளாகம். இன்னும் சில நாள் கழித்து நவநாகரிக விற்பனை மையம். மாறிக் கொண்டே இருக்கிறது. கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில் இதை சகஜமாகப் பார்க்கிறேன். தொண்ணூறுகளில் இருந்த கடைகள் இப்பொழுது இல்லை. அவற்றுக்கு பதிலாக அதே இடங்களில் வேறு விஷயங்கள் முளைத்திருக்கும்.
இது அமெரிக்காவிற்கு மட்டும் உரித்தானதும் அல்ல. சீனப் பாம்பும் இப்படி புதுப்புது தோல் உடுத்திக் கொண்டே இருக்கிறது. பெரிய தோட்டம் கொண்ட வீடு; வீட்டில் இருந்து இரண்டு தப்படி நடந்தால் முக்கு கடையில் செய்தித்தாள். அங்கிருந்து பொடிநடையாக சென்றால் நதிக்கரை. நகரத்திற்கு எதிர்ப்பதமாக அமைதியான வாழ்க்கை. நெரிசல் இல்லாத சாலை. மீன் வாசனை இருக்கும்; ஆனால், மூத்திர வாசனை கொண்ட பேருந்து பயணம் இருக்காது. இருபது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே இருப்பதை ரசிப்பதை விட படகில் சென்று பக்கவாட்டில் தூரமாகும் வாழ்க்கையின் அழகை நீரோடையாக பார்க்கச் சொல்லும் நிதானம் கொண்டது.
வெறுமனே விவரிப்புகள் மட்டும் கதை ஆகாது என்பதில் வெகு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே போல் பழைய கதைகளை மறுபடி தூசி தட்டுவதிலும் ஆர்வம் கிடையாது. இந்த இரண்டையும் இந்தக் கதை கட்டுடைக்கிறது. “விரைவில் வரப்போகிறது” பெரும்பாலும் தன்னுடைய கவனிப்புகளை மட்டுமே முன்வைக்கிறது. அதே சமயம் நல்ல சிறுகதை விட்டுப் போகும் தாக்கங்களையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும் ஆர்வம் உள்ளடக்கிய நடையும் வைத்திருக்கிறது. பள்ளிக்காலத்தில் படித்த ரிப் வான் விங்கிள் நினைவுக்கு வந்தாலும், இவர் நவீன உலகின் கொசு அசுரன்.