‘கல்லுக்குள் ஈரம்’ பார்த்த போது ஏழு வயசு. இந்தப் பக்கத்தில் அம்மாவும் அந்தப் பக்கத்தில் அண்ணாவும் அமர்ந்திருப்பார்கள். தேவி காம்ப்ளெக்ஸா, வெலிங்டனா, சித்ராவா என நினைவில் இல்லை. இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு 21ல் உட்கார்ந்திருக்கும் தூக்கக் கலக்கத்தில் இப்படி சேர்த்து வைக்காமல் சாகடிச்சுட்டாங்களே என்பது மட்டுமே தோன்றியது.
சினிமாகாரர்களை கொஞ்சம் சொல்வதால் மனம் இன்றும் ‘க.ஈ.’ படத்தை நினைவில் வைத்திருக்கவைக்கிறதோ? மற்ற பாரதிராஜா எடுத்த, தற்போதைய அமீர் / சசிகுமார் வகையறா எடுக்கும், மதுரைப் பக்கத்தில் உள்ள டவுன் பஸ் மட்டுமே நிற்கும் சந்து பொந்துகளை முதலில் காட்டியதால் நிழலாடுகிறதோ? மனோபாலா, ரங்கராஜன், மணிவண்ணன் போன்ற பிற்கால பிரபலங்களின் கன்னி தொடக்கம் இங்கே இருந்திருக்குமே?
தெரியவில்லை. எனவே, மீண்டும் பார்த்தேன்.
‘முதல் மரியாதை’யின் இளவட்டக் கல் இருக்கிறது. அந்தப் படத்தில் ஜெயிலில் இருந்து திரும்பும் சத்யராஜ் போலவே பாசமிகு மாமன் (சேனாதிபதி?) இருக்கிறார். கவுண்டமணிக்கு மிக விரிவான கதாபாத்திர உருவாக்கம். ’க.ஈ.’ வந்ததற்கு அடுத்த ஆண்டு வந்த பாலைவனச் சோலை கும்பலில் இருந்து இதில் உடல் ஊனமுற்றவராக சந்திரசேகரும், பள்ளி ஆசிரியராக ஜனகராஜும் இருக்கிறார்கள்.
மனதிற்கு நெருக்கமான கதை. திரைப்பட கதாநாயகனை கணவனாக அடைய விரும்பும் சினிமா மோக மனம் கொண்ட விஜயசாந்தியும் டீக்கா டிரெஸ் போட்டிருக்கும் ஆங்கிலம் பேசும் அடாவடி ஆதர்ச இயக்குநரை விரும்பும் அருணாவும் வசிக்கும் கிராமம். நாள் முழுக்க உழைத்து, அரை வயிற்றுக்கு சாப்பிட்டு, கோலமிக்க ஆறும், ஓய்வெடுக்க மலைமுகடுகளும், அடர்த்தியான காடுகளும் கொண்ட கனவு கிராமம். முனிக்கு படையல் போட்டதில் தெய்வ குற்றமும், அடுத்தவர் வாழ்க்கையை மெல்வதில் சுகமும் காணும் நெருக்கமான உறவு வேண்டாமலேயே உங்களைத் துரத்தும் கிராமம்.
படத்தில் உள்ள அத்துணை கதாபாத்திரங்களை ஆழமாக உலவவிடவில்லை. மாடன் வழிபாட்டை விரிவாகக் காட்டவில்லை. உள்ளூர் பெண்ணொடு ”டைரக்டர்” இப்படியெல்லாம் நடந்து கொள்வது சாத்தியமேயில்லை. இதற்கு முந்தைய ஆண்டு வந்த “புதிய வார்ப்புகள்” போல் அசல் தெருக்கூத்தைக் காணமுடியவில்லை, என்றெல்லாம் விமர்சிக்கலாம்.
ஆனால், இரண்டு மணி நேரத்தில் கட் அவுட் மாந்தர்களையும் தோட்டி குடும்பத்தையும் இன்று கூட யாரும் இவ்வளவு இயல்பாக கோர்க்கவில்லை என்பதால் சபாஷ் போட வைக்கிறது. அப்படி கோர்த்தால் என்ன ஆகும் என்பதை நிதர்சனமாக முடிப்பதால் முக்கியமாகவே நிற்கிறது. எல்லாவற்றையும் விட ஊரில் இருப்போர் வாழ்க்கையையும் வருகை தருவோர் இயல்பையும் உணர்த்துவதால் இன்றும் விருப்பத்துடன் ரசிக்க வைக்கிறது.