நியு யார்க்கரில் சினேலோ (Chinelo Okparanta) எழுதிய ”பென்ஜி” கதை வாசித்தேன். நாற்பதுகளைத் தாண்டிய பின்னும் மனைவியைத் தேடிக் கொண்டிருக்கும் குள்ளமாய், பணக்காரனாய், அம்மா கோந்தாக இருக்கும் ஆப்பிரிக்கனை பற்றிய கதை. மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அம்மா, குள்ளப் பையன், அம்மாவின் புதுத் தோழி. நடுநடுவே வீட்டில் வேலைப் பார்க்கும் தோட்டக்காரரும், சிப்பந்திகளும் வந்து போகிறார்கள்.
பத்து… பன்னிரெண்டு வருடக் கதையை சிறுகதையில் கொடுக்கிறார். அம்மாவிற்கும் தோழிக்கும் நடுவே நடக்கும் உரையாடல், தோழிக்கும் பையனுக்கும் உரையாடல், கூடவே நிறைய சம்பவங்கள் என அமைதியாக நகர்கிறது. நைஜீரியா அறிமுகமாகிறது. முடிவெல்லாம் ஊகிக்க முடிந்தாலும் மனிதர்களின் குணாதிசயமும் சாமர்த்தியமும் சமரசமும் சுவாரசியமாக்குகிறது.
வெண்முரசு வாசித்து வரும் சமயத்தில் இந்தக் கதையும் வாசித்ததால், அந்தத் தோழி கதாபாத்திரத்தை சத்தியவதிக்கு ஒப்பிட்டுப் பார்த்தேன். பணக்கார நாற்பதுவயசுக்காரனை பீஷ்மராக வைத்துக் கொள்கிறேன். மகாபாரதத்திற்கு இப்படி ஒரு முலாம் பூசிப் பார்த்தால் மகாபாரதத்தின் சூட்சுமங்களை இன்னும் வெளிப்படையாக எழுத்தாளரும் விவரிக்கலாம். அந்த கதாபாத்திரங்களின் நிர்ப்பந்தங்களையும் நிராசைகளையும் வாசகரும் எளிதில் அணுகலாம்.
கதையில் இருந்து..
”பணம் போதலை போதவில்லையென் சிலர் எப்பொழுதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அப்படி அலட்டுபவர்களிடம்தான் பணம் கொட்டிக் கிடக்கும். அல்லது பணம் குறைவாக இருப்போர்தான் செல்வச்செழிப்பில் இருப்பது போல் பாவ்லா காட்டுகிறார்கள் எனலாம். இந்த இரண்டு வர்க்கத்தில் அவள் எந்த ரகம்?”