தினம் ஒரு கதை எழுதுகிறார் ஜெயமோகன். அசகாய சூரன். யார் வேண்டுமானாலும் தினசரி ஒரு பகுதியாக மகாபாரதம் எழுதிவிடலாம். ஆனால், ஜெ.மோ. எழுதும்போது அது முக்கியத்துவம் பெறுகிறது.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்தை இயக்குவது போல்…
ஸ்டீவ் ஜாப்ஸ் காலத்து ஆப்பிள், புதிய நுட்பத்தை அறிமுகம் செய்வது போல்…
எனக்கு புதிய இடத்தில் வேலை கிடைப்பது போல்…
எல்லாமே எதிர்பார்ப்பு கலந்த ஆர்வம் எழவைக்கும் நிகழ்வுகள். வித்தியாசமாக இனி என்ன நிகழ்ந்துவிட முடியும் என நினைக்கும்போது அசத்தும் விஷயங்களைக் கொணர்பவை.
அவ்வப்போது தோன்றுபவற்றை எழுதி வைக்கலாம். முதல் பகுதி குறித்து…
- அம்மா ஆர். பொன்னம்மாள் எழுதிய கதையொன்றில் ஆஸ்திகரை கேள்விப்பட்டிருக்கிறேன். நாஸ்திகருக்கு எதிர்ப்பதம் ஆஸ்திகர் என்பது தவிர வேறு எதுவும் இவரைக் குறித்து என்னுடைய நினைவில் ஆழமாகப் பதியவில்லை. “தீபம்” பக்கங்களைப் புரட்டினால் அல்லாது தொலைபேசும்போது கேட்டால் ஏதாவது மேட்டர் கிடைக்கும். விசாரிக்க வேண்டும்.
- முதல் பகுதியில் நிறைய பெயர்கள். கத்ரு-விற்கும், வினதை-க்கும் நடுவே கிடந்த ஓரகத்தி சண்டைகளை ஏற்கனவே கேட்டிருப்பதாலும், அருணனும், கருடனும் அறிந்திருப்பதாலும், அந்தப் பகுதிகளைப் படிக்க சிரமமில்லை. ஆனால், சுவாரசியமுமில்லை.
- இந்தப் பத்தியில் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவையாக அந்த வரம் தரும் பகுதி அமைந்திருக்கிறது. மேட்ரிக்ஸ் படத்திற்கு பிறகு “What is your purpose in life?” வேரூன்றிய மாதிரி, கல்வியா / செல்வமா / வீரமா-விற்கு பதில், “உள்ளிருந்து எழும் கனல், அதை அடைய அடைய அடுத்ததை நோக்கும் தாகம்” என்னும் வேண்டுகோள் – புதிய கீதை ஒன்று.
- ஜரத்காரு – மின்மினி – பிண்டம் – பித்ரு…விற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் நீட்டி முழக்கி இருக்கலாமோ? சுண்டுவிரல் அளவில் நடமாடும் மூதாதையர்களைக் கண்டு நாம் பயப்படுகிறோம். அவர்களுக்கு திவசம் போடுகிறோம். வாழைக்காய் கொடுக்கிறோம். அவர்களும் அந்தக் கன்றுக்குட்டியையும் எண்ணெயையும் வைத்துக் கொண்டு கடைத்தேறுகிறார்கள்.
- வரமோ… சாபமோ… கொடுத்ததற்குப் பின்னேயே கவலை கொள்கிறோம். ஆத்திரம் வந்தால் திட்டிவிடுவது ஆகட்டும்; அன்பு பெருகினால் வைரமாலை வாங்கி விடுவது ஆகட்டும். சிந்திய வார்த்தைகளையும் வாங்கிய கடனையும் அடைப்பது பெரும்பாடு என்பதை மகாபாரதத்தைப் பார்த்தும் அமெரிக்கா புரிந்துகொள்ளவில்லை.
- ’தழுவித்தழுவி இறுகியபின் மேலும் தழுவும்பொருட்டு அவர்களின் தழுவல் சற்றே தளர்ந்தபோது இருவருக்கும் நடுவே காலம் புகுந்து கொண்டது.’ : )
- கடிதம் இல்லாமல் ஜெ.இன்-னா? – http://www.jeyamohan.in/?p=44023 :: http://mahabharatham.arasan.info/2014/01/1.html
- இவ்வளவு பெரிய கதையில் அயர்ச்சியூட்டும் பிரயோகங்கள்… ஒரே மாதிரிக் கதைகளை வேறுவேறு விதமாக சொல்வது… பத்தாண்டுகளாக தொடர்ச்சியான மொழிநடை! பிரமிக்க வைக்கிறார்.
- ’உன்னுடைய சின்னஞ்சிறு உடலுக்குள் விதைக்குள் பெருமரம்போல இப்பிரபஞ்சத்தின் பெருநிகழ்வொன்று குடியிருக்கிறது.’ – இது ஜெயமோகனை நோக்கி சொல்லப்பட்டாலும் சரியே!
பிங்குபாக்: ஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 2 | Snap Judgment
// கத்ரு-விற்கும், வினதை-க்கும் நடுவே கிடந்த ஓரகத்தி சண்டைகளை ஏற்கனவே கேட்டிருப்பதாலும், //
இருவரும் ஓரகத்திகள் அல்ல; சக்களத்திகள். இது தான் சரியான சொல்!:)))))