தி இந்துவின் தமிழ்ப் பதிப்பு வெளியாக ஆரம்பித்திருக்கிறது. ”சிந்தனைக் களம்” பகுதியில் ’சிறப்புக் கட்டுரைகள்’ வெளியிடுகிறார்கள். தினமணி போன்ற பெத்த பெயரை வைத்துக் கொண்டு (தினகரனின்) தமிழ் முரசு போன்ற உள்ளடக்கம் கொண்டிருக்கிறது.
சிரியாவைக் குறித்து பாரா எழுதிய மேலோட்டமான கட்டுரை கிடைக்கிறது. ஜெயமோகன் பத்தி எழுத்தாளர் ஆனால் நடக்கப் போகும் அபாயமும் தெரிகிறது.
என்னைப் போன்ற சாதாரண விமர்சகர் கூட நாவலின் ஓரிரு பக்கங்களை மட்டும் ஆங்காங்கே படித்துவிட்டு தேர்ந்த அறிமுகத்தைக் கொடுத்துவிட முடியும். அந்த மாதிரி அவ்வப்போது சந்தித்த மனிதர்கள், ஆங்காங்கே பார்த்த தொலைக்காட்சி, இணையத்தில் மூழ்கடிக்கும் நிலைத்தகவல்கள் மட்டுமே கொண்டு மேக்ரோ பார்வை கொடுப்பதன் ஆபத்தை மீண்டும் மீண்டும் ஜெயமோகன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். ஊடகத்தை கவனிப்பதற்கென்றே பிரத்தியேகமாக இயங்கும் medianama.com , fourth-estate-critique, thehoot.org போன்ற பல்வேறு தளங்களின் உதவியைக் கோரி கொஞ்சமாவது ஆராய்ந்து எழுதியிருக்கலாம்.
அந்தக் காலத்தில் நேருவும் கென்னடியும் மட்டுமே செய்தியாளர்களுக்கு முக்கியமானவர்கள். இந்தக் காலத்தில் பக்கத்து மாநகராட்சி கவுன்சிலரும், பையன் ஆடும் கிரிக்கெட் அணியும், முக்குத்தெருவில் உதயமான பவானி அம்மனும் செய்தியை ஆக்கிரமிக்கிறார்கள். எங்கோ 2ஜி கொள்ளை அடிப்பதை நினைத்து அங்கலாய்ப்பதை விட உள்ளூர் ஊழல்களைத் தடுப்பதிலும், பக்கத்து வீடு காதல்களை அங்கீகரிப்பதிலும் செயலூக்கத்தோடு இயங்கவும் ஊடகங்கள் உதவுகின்றன.
செய்தித்தாள் என்பது மேற்கை பொறுத்தவரை இறந்த காலம். வாஷிங்டன் போஸ்ட் கிட்டத்தட்ட திவால் ஆகி அமேசான்.காம் எடுத்துக்கொண்டுவிட்டது. சிகாகோ ட்ரிப்யூன், நியு யார்க் டைம்ஸ் என்று இணையத்துக்கு முந்தைய முன்னுமொரு நூற்றாண்டில் கோலோச்சிய பதிப்புகள் எல்லாம் கணக்கு வைப்பு புத்தகங்களில் சிவப்பு மையை கக்கி கடைசி இரத்தங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இந்தியாவில் மட்டும், எப்படி புதுப் புது பத்திரிகைகள், தினசரிகள், நாவல்கள், வார இதழ்கள் முளைக்கின்றன?
காலை எழுந்தவுடன் ஐ-பேட் கொண்டு கக்கூஸ் போகுபவர்கள் குறைந்த அளவில் இருப்பதால்… வலை மேய்வதற்கான கட்டணம் இரவு நேரங்களில் மட்டும் சல்லிசாக இருப்பதால்… எல்லோருடைய செல்பேசியிலும் தமிழ் எளிதாகத் தெரியாததால்… கட்சிக்கொரு பேப்பர் நடத்துவதால்…
”நாவலாசிரியயர்கள் சொற்றொடர்களாக சிந்திப்பதில்லை; அத்தியாயங்களாக யோசிப்பவர்கள்” என்பார் வர்ஜீனியா வுல்ஃப். நல்ல புனைவாளர்களை முன்னூறு வார்த்தைகளுக்குள் வாரா வாரம் கிறுக்க வைக்கும் சுரேஷ் கண்ணன்கள் ஆக்கி விடாதீர்கள் என்று எண்ண வைத்திருக்கிறது தமிழில் வரும் ’தி இந்து’.