இரு கோடுகள் – அமெரிக்க ஒற்றர் பராக் ஒபாமா


ஒபாமாவிற்கு சனியும் சரியில்லை. குருவும் சரியில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிரமதசை நடப்பது போல் தோன்றுகிறது.

அசோசியேடட் பிரெஸ் என்ன செய்கிறது, யாரை அழைக்கிறார்கள், எவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் என்று வேவு பார்த்திருக்கிறார். ஒன்றிரண்டு நாள்கள் அல்ல… அறுபது நாள்களுக்கு மேல் ஏ.பி. நடவடிக்கைகளை கண்காணித்திருக்கிறார்கள்.

இப்படி நீண்ட காலம் ஒருவரை ஒற்றறிய வேண்டுமானால் வாரண்ட் வாங்கி இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு இந்த மாதிரி விஷயங்களை செய்திருக்க வேண்டும். அதெல்லாம் கடைபிடிக்கவில்லை. இத்தனைக்கும் AP நிறுவனம் முஸ்லீம் இல்லை. தீவிரவாதி இல்லை. அமெரிக்காவில் பன்னெடுங்காலமாக இயங்கி வரும் செய்தி ஸ்தாபனம். புகழ்பெற்ற ரிப்போர்ட்டர்களை உள்ளடக்கிய நான்காவது தூண்.

அவர்களைப் போய்… ஏன்?

ஒசாமா பின் லாடன் செத்த முதலாம் நினைவு நாளை அல்-க்வெய்தா பெரிதாகக் கொண்டாட விரும்பியது. ஏதாவது மிகப் பெரிய தீவிரவாதச் செயலை செய்து முடிக்க விரும்பியது. ஏமனில் இருந்து விமானத்தைக் கடத்தி இஸ்ரேல் போன்ற அணுசக்தி நிறைந்த தேசத்தில் நாசம் விளைவிக்க திட்டம் தீட்டியது. இந்த விமானத்தை ஓட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமெரிக்க உளவாளி. அவர் இந்த சதித் திட்டத்தை முறியடித்துவிட்டார். விமானத்தை ஹை ஜாக் செய்து சமர்த்தாக அமெரிக்க நண்பர் நாட்டிடம் ஒப்படைத்துவிட்டார்.

இவ்வளவு பெரிய திட்டம்! அமெரிக்க உளவாளி அல் குவெய்தாவிற்குள் இருக்கிறார். அவரும் இன்னொரு நிஜ தாலிபான் போராளியும் சேர்ந்து ஒஸாமா அஞ்சலி அழிப்புத் திட்டத்திற்கு செல்கிறார்கள். கூட வந்த தீவிரவாதிகளை வீழ்த்தி, இன்னொரு 9/11 தகர்ப்பு நடக்காமல் காப்பாற்ற வேண்டும்.

இத்தனையும் வெளியில் கசியாமல் இருக்க வேண்டும். கசிந்தால், இன்னொரு உலகப் போர் துவங்கும் அபாயம். இதற்காக சொல்லாமல் கொள்ளாமல் நிருபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கலாமா?

Argo படம் பார்ப்பது போல் இருக்கிறது. உயிர்களைக் காப்பதற்காக அன்னிய நாட்டிற்குள் அத்துமீறி நுழைகிறோம். விஷயத்தை அறிந்த முந்திரிக்கொட்டை இந்தத் திட்டத்தை நிருபரின் காதில் கிசுகிசுக்கிறது.

அப்பொழுது செய்தியாக வெளியிட்டு, அப்பாவி உயிர்களை சாகடிக்க வேண்டுமா? அல்லது ஆறிய கஞ்சியான பிறகு நாளிதழில் மெதுவாக எழுத வேண்டுமா?

அனைத்து உண்மைகளையும் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதால் என்ன பயன்? எல்லா விஷயங்களையும் பதுக்கி, ரகசியமாக டீல் போடுவதால் வரிப்பணம் கட்டும் குடிமகன்களின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறதா?

பிறரின் தொலைபேசிகளை காலவரையின்றி ஒட்டுக் கேட்கும் சட்டம் கடந்த ஜனாதிபதி புஷ் காலத்தில் இயற்றப்பட்டது. இராக்குடனும் ஆஃப்கானிஸ்தானுடனும் போர் நடத்திய காலத்தில் ஒற்றர்களைப் பாதுகாக்க இந்த சட்டத்தை பயன்படுத்தினார்கள். சண்டை முடிந்தபிறகு சட்டம் காலாவதி ஆகி இருக்க வேண்டும். ஆனால், நீட்டித்துக் கொண்டே வந்தார்கள், அதன் பின் அவ்வப்போது எதிர்க்குரலாக டெமோகிராட் குரல் ஒலித்தாலும் அரசியல் காரணங்களுக்காக ஒபாமாவும் இதை ஆதரித்து கிட்டத்தட்ட நிரந்தர சட்டமாகவே ஆக்கிவிட்டார்.

இப்பொழுது அசோசியேடட் பிரெஸ் மேட்டருக்கு பிறகு இரு கட்சிகளிடம் இருந்தும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பத்திரிகைகளை வேவு பார்க்க வேண்டுமானால், நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதில் முனைப்பாக ஒருங்கிணைந்த குரல் கேட்கத் துவங்கியுள்ளது. யாரையும் எப்பொழுது வேண்டுமானாலும் கண்காணிக்கலாம் என்பதில் கொஞ்சம் லிமிடெட் மீல்ஸ் ஆக்கலாம் என்பதை ரிபப்ளிகன் கட்சியே ஒத்துக்கொண்டுள்ளது.

இவ்வளவும் ஒசாமா பின் லாடன் நினைவாஞ்சலி மேட்டரில் சி.ஐ.ஏ ரகசியமாக செயல்பட்டதை அசோசியேடட் பிரஸ் அம்பலப்படுத்தியதால் கிடைத்த ஆய பயன்.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் உணரப்படும் என்பது போல் ரிபப்ளிகன் புஷ் காலத்தில் பயன்பட்ட சட்டம், டெமோகிராட் ஒபாமா காலத்தில் பிரச்சினையாக மாறியிருக்கிறது.

இதன் உச்சகட்டமாக எல்லாவற்றையும் மறைக்கவும் மறக்கவும் ஸ்னோடென் வந்து துப்பு துலக்கி ஃபேஸ்புக்கும், மைக்ரோசாஃப்ட் ஸ்கைப்பும், யாஹூவும் சீனாவின் ருஷியாவின் தகவல்களை வேவு பார்க்கின்றன என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.