தெருவில் நடக்கிறப்ப, சோபி காலே-க்கு யாரோ தவறவிட்ட டயரி கிடைக்கிறது. தெரிந்தவர் டயரியை புரட்டக் கூடாது என்றுதான் எழுதப்படாத விதி இருக்கிறது. தெரியாதவரின் டயரியை படிக்கலாம். தெரியாதவரின் பெயர் பியர் டி.
டயரியைப் புரட்டிப் பார்க்கிறார். நிறைய முகவரி இருக்கிறது. கூடவே முகவரியில் வசிப்பவர்களின் தொலைபேசிகளும். இதெல்லாம் நடந்த காலம் ஜூன் 1983. எனவே, செல்பேசியில் முகப்புத்தகம் பார்க்காத காலம். கையில் குறிப்பேடு வைத்து எழுதி சேமித்த காலம்.
கிடைத்த டயரியை தொலைத்தவரிடம் சேர்க்கிறார். சேர்ப்பதற்கு முன்பாக, தனக்கும் ஒரு ஜெராக்ஸ் போட்டு வைத்துக் கொள்கிறார்.
பியர் டி பார்த்து பார்த்து சேகரித்த முகவரிகளின் உரிமையாளர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள சோபி-க்கு ஆர்வம். பியர் டி-யின் தொடர்புகளை தொலைபேசியில் அழைக்கிறார். அவர்களிடம் சென்று டயரிக்கான சொந்தக்காரரைப் பற்றி பேசுகிறார். அதை பத்திரிகையில் வெளியிடுகிறார்.
சோபி காலே சேர்கரித்த வம்புகள் இப்பொழுது பிரென்சு வழியாக ஆங்கிலத்திற்கு வந்தடைந்திருக்கிறது.
The Address Book | Harper’s Magazine
என் ஃபேஸ்புக் பக்கத்து தோழரையோ, டிவிட்டர் பின்பற்றியையோ சோபி காலே தொடர்பு கொண்டால் புத்தகம் எழுதும் அளவு சங்கதி கிடைத்திருக்காது. ஆனால், சமூக வலைப்பின்னல் 2.0ன் தாத்பரியம் புரிந்திருக்கும்.
அ) குடும்ப விவரங்கள், தேடல் விருப்பங்கள், சிந்தனை ஓட்டம் எல்லாம் மின்மடலை குடைந்தால்தான் கிடைக்கும்.
ஆ) நாலாயிரம் நண்பர்களில் நாலு பேரை நேரில் சந்தித்திருக்கிறேன்.
இ) தொழில்நுட்பத்தில் அர்ச்சுனர்; வாசிப்பில் பெஞ்சமின் பிராங்கிளின்; தலைமைப் பண்பில் ஜார்ஜ் வாஷிங்டன். மொத்தத்தில் காந்தியும் ஹிட்லரும் கலந்த மாண்புடன் பழகுபவர் என்று அறியலாம்.