மன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.
ரஜினி படம் பிடிக்குமா? கமல் படம் பிடிக்குமா? என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.
’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்ஷன் இருக்கும்.
அந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.
கமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.
ரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.
நீங்க ரஜினி விசிறியா? கமல் ஃபேனா?