மணி ரத்னம் படத்தை அவரின் பாடல் திரையாக்கத்திற்காக பார்க்கலாம். சொதப்பலான தில்ஸே முதல் அடிதடி ‘தளபதி’ வரை எல்லாவற்றிலும் பாந்தமான பெண் நாயகிகளுக்காக பார்க்கலாம். ‘ஓடிப் போயிரலாமா’ கீதாஞ்சலி ஒரு வரி ஆகட்டும்; முழம் நீளத்திற்கு முழங்கும் ’நானும் பப்ளிக்தான்’ சொல்லுகிற குரு ஆகட்டும்… வசனம் ஷார்ப் ஆக குத்துவதால் பார்க்கலாம்.
இங்கே அர்ஜுன் சொல்கிறார். ‘சாமர்த்தியக்காரர்களைக் கொன்று விட்டு நிம்மதியாக வாழ்வது ஒரு ரகம். திறமைசாலியை பக்கத்தில் வைத்து வளர்த்துக் கொண்டே ஜாக்கிரதையாக ராஜ்ஜியம் வளர்ப்பது இன்னொரு ரகம். எனக்கு இரண்டாவது வகைதான் பிடிக்கும். சோம்பேறி அல்ல… உஷார் பார்ட்டி ஆக்கும்!’
கண்ணை உருட்டுவதில் ஆகட்டும்; மனக் கொந்தளிப்புகளை நாடி நரம்புகளில் கொணர்வதாகட்டும்; ஏழ்மையும் சுய பச்சாதாபமும் இயலாமையும் வந்து போவதாகட்டும். அர்ஜுன் மிரட்டுகிறார்.
ஷங்கர் மாதிரி பிரும்மாண்டத்தை எடுப்பதிலும் மணி ரத்தினத்திற்கு நாட்டமில்லை. கேயெஸ் ரவிக்குமார் மாதிரி முழுக்க முழுக்க மசாலா வைக்கவும் மனம் ஒப்பவில்லை. ‘பரதேசி’ பாலா மாதிரி ஆல்டர்நேட் ஜாகையும் ஆண்ட்டி-ஹீரோ நாயகனையும் நிலைநிறுத்தவும் முயலவில்லை.
முழுக்க முழுக்க கிறித்துவ இறையியலை பொதுசனத்திற்கு விளக்கி இருக்கக் கூடிய களம். யேசு பிறக்கிறார்; கன்னி மேரி இருக்கிறார்; பிதா கட்டமைக்கிறார்; கொல்லப்படுகிறார்; அவரின் குமரன் மீண்டு எழுகிறார்; பரிசுத்த ஆவியில் முடிக்கிறார்கள்.
இது எல்லாம் ஜெயமோகன் புத்தகம் வெளியான பின் ரசிக்கலாம். இப்போதைக்கு அந்தமான் டூயட், கன்னியாகுமரி வட்டார வழக்கு, கார்த்திக் பையனின் அசத்தல் அறிமுகம் எல்லாம் கொறிக்கலாம்.