இன்றைக்கு ஒபாமாவை நினைத்தால் நிறைவாக இருக்கிறது. நிற ஒற்றுமையை எண்ணி மகிழ இயலுகிறது. சமத்துவத்தை இயல்பாக கொண்டாட முடிகிறது.
ஐம்பதாண்டுகள் முன்பு வரை இந்த நிலையா? அமெரிக்காவில் கறுப்பு நிறத் தோல் கொண்டவர்களும் வெள்ளையர்களும் சரிசமமாக புழங்கினார்களா?
நாம் பிறப்பதற்கு முன் நமக்காக போராடினவர்களில் லாரன்ஸ் கீயாட் முக்கியமானவர். கடந்த வாரம் இயற்கை எய்தினார். நிற வெறி மிக மோசமாக இருந்த மிஸிசிப்பி மாநிலத்தில் சமூக நீதிக்காக கொடி உயர்த்தியவர். கருப்பர்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்காக உழைத்தவர். தற்போது பராக் ஒபாமா தலைவராக இருக்கும் டெமொகிராடிக் கட்சியில் விளங்கிய இன வேறுபாடுகளை நீக்குவதற்காக முனைந்து செயல்பட்டவர்.
லாரன்சின் துணிச்சலுக்கும் கறுப்பின விடுதலைக்கான செயல்பாட்டுக்கும் பல நிகழ்வுகளையும் போராட்டங்களையும் உதாரணமாக சொல்லலாம். ஃபேனி லூ ஹேமரும் ஹேமரின் இரண்டு கூட்டாளிகளும் கைதானவுடன் நடந்த நிகழ்ச்சியை நியு யார்க் டைம்ஸ் ஆவணப்படுத்தி இருக்கிறது.
1963ஆம் ஆண்டின் ஜூன் மாதம். வெள்ளையர்களுக்கு ஒரு வாயில்; கறுப்பர்களுக்கு எந்த நுழைவாயிலும் இல்லை என்னும் நிலை. அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் மிகக் கடுமையான இனப் பாகுபாடு விளங்கிய காலகட்டம். மிசிசிப்பி பேருந்து நிலையத்தை வெள்ளைத் தோல் நிறத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அப்போது ஹேமரும் அவரது நண்பர்களும் தடையை மீறி, பிரவேசம் செய்ய முயல்கிறார்கள். கைதாகிறார்கள்.
அவர்களை ஜாமீனில் எடுக்க கீயாட் செல்கிறார். ஹேமரும் அவர் கூட வந்தவர்களும் மோசமாக கையாளப் பட்டிருந்தார்கள். கைது செய்வதே சட்டமீறல் எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நடத்திய விதம் கொடூரமாக இருந்ததைக் குறித்து தட்டிக் கேட்கிறார் கீயாட்.
‘நீ யாருடா சொல்ல வந்துட்டே’ என்னும் தொனியில் அபிமன்யு கீயாட்டை ஒன்பது காவலர்கள் சூழ்கிறார்கள். தங்கள் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்துகிறார்கள். கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு சராமாரியாகத் தாக்குகிறார்கள். துளி ஆடை கூட இல்லாமல் அம்மணமாக்கி அசிங்கப்படுத்தியதாகக் கொக்கரிகிறார்கள். அவரின் ஆண்குறியை நசுக்கி விட எத்தனிக்கிறார்கள்.
குற்றுயிரும் கொலையுயிருமாக கீயாட் இருப்பதைப் பார்த்து அஞ்சிய மருத்துவர்கள், சித்திரவதையை நிறுத்துமாறு இறைஞ்சினார்கள். சித்திரவதையைத் தொடர கீயாட்டையும் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள். காவலர்களின் உடல்வதை நீடிக்கிறது.
பெயில் எடுக்க வந்த கீயாட்டை முட்டிக்கு முட்டி தட்டுகிறார்கள். அப்படியானால் அவருக்கு யார் பிணை கொடுப்பார்கள்? எப்படி வெளியே வர முடியும்? எவ்வாறு ஹேமரும் கீயாட்டும் தங்கள் அனுபவங்களை பிறருக்கு சொல்ல முடியும்?
இந்த நிலையில் வேண்டுமென்றே ஜெயில் கதவை பூட்டாமல் திறந்து வைத்து, கூடவே கத்தியையும் போட்டு வைக்கிறார்கள். தூண்டிலில் மீன் மாட்டினால், குரல்வளையை அழுத்து துண்டம் போட்டு, உலகிற்கு தங்கள் பக்க கட்டுக்கதையை விற்று விடலாம். ஆனால், கீயாட் மாட்டவில்லை.
ஹோவெல் ரெயின்ஸ் எழுதிய My Soul Is Rested: The Story of the Civil Rights Movement in the Deep South (1977) புத்தகத்தில் இந்த கொடூரத்தை பகிர்ந்து இருக்கிறார் கீயாட்.
மிஸிஸிப்பியின் ஜாக்ஸன் நகரத்தில் கீயாட்டின் தோழரான மெட்கர் எவர்ஸ் கொலை செய்யப்படுகிறார். அதன் பின், கீயாட்டும் உடனடியாக மரணமடைந்தால், கலவரம் மூளும் என்று அஞ்சிய காவல்துறை கீயாட்டை விடுவித்தது.
அடுத்த வருடமே கீயாட் மீண்டும் சிறைக் கைதியாகிறார். காவல்துறையினர் கருப்பினருக்கு நிகழ்த்தும் அட்டூழியங்களை நடுவண் அரசான வாஷிங்டன் பார்வைக்கு கொண்டு செல்ல பதினேழு நாள் உண்ணாவிரத நோன்பு மேற்கொள்கிறார். ஐம்பது கிலோ எடை இழந்தாலும் உணர்வும் எழுச்சியும் உறுதியும் இழக்காமல், சக கறுப்பர்களையும் மீட்கிறார்.
”அடுத்தவர் உன் மீது ஆக்கிரமிப்பு செய்யலாம். ஆனால், நாம் அடங்கிப் போவது நம் கையில் இருக்கிறது” என்று அந்த சத்தியாகிரகத்தை நினைவு கூர்கிறார்.
1939ஆம் ஆண்டு ஜூலை பதினேழாம் தேதி மிஸிஸிப்பியில் பிறந்தார் கியாட். அவருடைய அப்பா கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். டூகலூ கல்லூரியில் இருந்து 1963ல் வேதியியலிலும் உயிரியலிலும் பட்டம் பெற்றார். அகிம்சாவழி மாணவர்களின் குழு சார்பாக பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே மிசிசிப்பி முழுக்க பயணம் மேற்கொண்டு சமூகநீதி பட்டறைகளை முனைப்போடு ஒருங்கிணத்தார்.
அமெரிக்க குடிமகன்கள் எல்லோரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இனப்பிரிவிற்கு எதிராக போராடிய மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் எங்கும் எதிலும் வெள்ளையர்களுக்கு சமமான உரிமைக்காக குரலெழுப்பிய தருணங்களில், கீயாட் வாக்குப்பெட்டியை மட்டும் குறிவைத்து இயங்கினார். கருப்பர்கள் வாக்கு போட்டு தங்களுக்கு உவப்பானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் அமெரிக்கா முழுக்க கருப்பின சமத்துவ உரிமையை அடையலாம் என்று நம்பினார். வெள்ளையரிடம் இருந்து இன உரிமை பெறுவதற்கு பதில், ஜனநாயகத்தின் பேரிலும் தேர்தல் வெற்றி மூலமாகவும் சட்டதிருத்தங்களையும் சமூக சீர்திருத்தங்களையும் அடையும் வழிக்காக விழிப்புணர்வை புகட்டினார்.
1971இல் சட்டப் படிப்பில் முதுகலை பட்டத்தை முடித்தார். அதன் பின் வாஷிங்டன் நகரத்தில் பணியாற்றினார்.
தற்பால்விரும்பிகளுக்கான போராட்டத்தை ஆதரிக்கும்போது அவர் சொன்ன மேற்கோள் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்: “நமக்கு முக்கியம்னு படறதுக்காக உயிரைப் பணயம் வைத்து போராடறதுக்கு ஈடா இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. லிங்கன் சொன்னது போல் சுடறவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டு அவன் முன்னாடி சாதிக்கறது தனி சுகம்!”
அஞ்சலிகள்.