கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, அமெரிக்காவின் தமிழ் சங்கங்களையும் வருடாந்திர விழாவையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த விதத்தில் என்னுடைய அனுபவங்களின் தொகுப்பாக இந்தத் தொடரைத் துவங்குகிறேன்.
தமிழ்ச் சங்கங்கள் மூன்று விதமான எண்ணங்களை தற்போது நிறைவேற்றுகிறது.
அ) இந்து கோவில், கிறித்தவத் தேவாலயம் என்று பிரிந்திருக்கும் தமிழர்களை ஒரே இடத்தில் திரட்டி, அமெரிக்காவின் லாபியிஸ்ட் சக்தியாக முயல்வது;
ஆ) ஆங்கிலம் மட்டுமே அதிகம் வாசிக்கும் தன்னுடைய குழந்தைகளின் பரத, பாடல் திறமைகளுக்கும் மாறுவேடப் போட்டிகளுக்கும் மேடை அமைத்துத் தருவது
இ) புலம் பெயர்ந்த தமிழ் நாட்டினரின் ஈழம் சார்ந்த குற்றவுணர்ச்சிகளுக்கு வடிகால் கொடுப்பது
பெட்னா நிஜத்தில் ஒரு சத்சங்கம் போல் இயங்குகிறது. சத்சங்கத்தில் சாய் பாபாவோ எவ்று யாராவது தனி மனிதரின் புகைப்படம் இருக்கும். இங்கே தமிழ் மூதறிஞர் என்று மு வரதராசர், பொ. வே. சோமசுந்தரர் போன்ற யாருடைய பெயராவது மினுக்கும். நான்கு நாள் விழாவில் அந்தத் தமிழறிஞர்களைக் குறித்து நான்கே முக்கால் நிமிடம் (285 வினாடிகள்) ஒருவர் பேசுவார்.
மேடையேறுபவர் அனைவரும் தமிழைப் போற்றிப் புகழுவார்கள். தமிழே போற்றி, தாயே போற்றி, தரணி ஆண்டாய் போற்றி என்று நூற்றியெட்டு துதிகள் நடக்கும். இருபத்தியெட்டு பேர்களாவது இப்படி அருச்சனை செய்தாலும், ஒவ்வொருவருடையதும் தனித்துவமாக இருக்கும். முதலாமவர் ’தமிழ் தேய்கிறது; எனவே தமிழ் வாழ்க’ என்பார்; இரண்டாமவர் ‘அமெரிக்க குழந்தைகள ”ம்ம்மா” என்றழைக்கின்றன; எனவே தமிழ் வாழும்’ என்பார். மூன்றாமவர் ‘வடநாட்டை சேர்ந்த குஷ்பு தமிழில் உரையாடுகிறார்; எனவே தமிழ் வெல்கிறது!’ என்பார்.
இத்தகைய நெருக்கடியிலும் இருபத்தியெட்டாவது ஆளாக மேடையேறுபவர் தன்னை துல்லியமாக வித்தியாசப்படுத்தி, “ஆமிர் கான் கூட தமிழ் பேசுகிறார்! எங்கும் தமிழ்” என்று முடிப்பார். இத்தகைய தகவல் துணுக்குகளை நான் எங்கும் ஒரு சேர கேட்டதில்லை.
பெட்னா சத்சங்கத்தில் பொங்கல் கிடைக்கும். சப்பாத்தியும் குருமாவும் உண்டு. பஜனைப் பாடல்கள் போல் அடுக்கு மொழி கவியரங்கமும் அரங்கேறுகிறது. பந்திக்கு சீக்கிரம் போனால் சுவையான சாப்பாடு கிடைக்கலாம். ஐம்பதாயிரம் நூபாய் போட்டு 65 தனித்தனி வண்ணங்களுடன் வாங்கிய ஆரெம்கேவி ’ஜடாவு பட்டு’ பார்க்கலாம். நடிகை சினேகாவுடனும் நடிகர் விக்ரமுடனும் தோள் மேல் கை போட்டு ஒளிப்படம் எடுக்கலாம். என்னவாக இருந்தாலும், அங்காடித் தெரு அஞ்சலியை அழைந்த்து வந்திருக்கலாம், என்பது என்னுடைய தாழ்மையான தனிப்பட்ட இரண்டணா அபிப்பிராயம்.
பத்தாவது படிப்புக்கான விடுமுறையில் நான் பத்தரையில் இருந்து பன்னிரெண்டு வரை வெள்ளிக்கிழமைகளில் கபாலி கோவில் செல்வேன். கலகலவென்று இருக்கும். அப்பொழுது இராகு காலம்.
துர்கை சன்னிதியில் கூட்டம் களை கட்டும். பெரும்திரளான பெண்கள் பயபக்தியுடன் அம்மனை சுற்றி வருவார்கள். அந்தக் காலங்களில் கபாலீஸ்வரர் கோவில் மாதிரி பெரிய ஆலயங்களில் மட்டுமே துர்கை சன்னிதி இருந்து வந்தது. அந்தக் குறையைப் போக்கும்விதமாக தெருமுக்கு பிள்ளையாருக்கு பக்கவாட்டிலும் துர்கை எழுந்தருள ஆரம்பித்தார். அந்த நிர்வாகத்தினரும் கல்லா கட்ட ஆரம்பித்தனர்.
இராகு கால சிறப்பு பூஜை போல் பெட்னாவும் அரங்கேறுகிறது. நான் துர்கையை பயபக்தியுடன் மூன்று சுற்று சுற்றியது போல் அமெரிக்கத் தமிழரும் பெட்னாவை மூன்று நாள் கொண்டாடுகின்றனர்.
வீட்டை விட்டால் வேலை; வேலை விட்டால் சமையல்; சமையல் விட்டால் முயங்கல் என்று வழக்கப்படுத்திக் கொண்ட வாழ்க்கையில் இருந்து இந்த மூன்று நாள் விடுதலை தருகிறது. தமிழருக்குப் பெரும்பாலும் நட்பு வட்டம் ஒழுங்காய் அமைவதில்லை; மேலே சொன்னதை அடித்து விடவும். அமைத்துக் கொள்வதில்லை என்பதே சரி.
என்னுடைய அலுவலக பாஸ் வாரந்தோறும் மூன்று சீட்டு மங்காத்தா ஆடுவார். தன்னுடைய உற்ற நண்பர்களின் வீட்டில், தங்களுக்குப் பிடித்தமான இசையுடன், உணவுகளுடன், பின்னிரவு வரை சில்லறைக் காசு பந்தயம் கட்டி ஆடுவார். பணம் ஜெயிப்பது குறிக்கோள் அல்ல. எனினும், அந்த வாராந்திர நிகழ்வு ஒரு சடங்கு. எவரின் வீட்டில் எந்த சாப்பாட்டுடன் என்ன விளையாட்டு என்று திட்டமிடுவதே சுகம்.
இன்னொரு சகா, மாதந்தோறும் புத்தக சங்கத்திற்காக நூலைப் படித்து அலசி ஆராய்ந்து பேசுவார். அதற்காக ஆறு பேர் ஒன்றுகூடுகிறார்கள்.
இந்த மாதிரி எந்தவித ஒன்றுகூடலும் இல்லாத சமூகமாகவே பெரும்பாலான அமெரிக்கத் தமிழர் இருக்கின்றனர். புத்தக வாசிப்பில் ஆர்வம் கிடையாது. நுண்கலைகளை ரசிப்பதை நேர விரயம் என்பர்.
வருடாந்திர விடுமுறையைக் கூட இந்தியாவிற்கு மட்டுமே செலவழிக்கிறோம். இப்படியாக முடங்கிப் போனவர்களுக்கு, இந்த மூன்று நாள்களில் நல்ல பேச்சுத்துணை கிடைக்கிறது.
‘நீயா நானா’வில் காதல் திருமண விவாதம் குறித்தும், ‘வாகை சூட வா’ வைரமுத்து வரிகளைக் குறித்தும் சிலாகித்து தங்கள் ரசனையைப் பகிர ஆள் அகப்படுகிறார்கள்.
ஆனால், இந்த மாதிரி தனி நபர் பேச்சில் தப்பு இருந்தாலாவது, மற்ற நண்பர்கள் சுதந்திரமாகவும் இயல்பாகவும் தட்டிக் கேட்க முடிகிறது.
அதுவே, மேடையில் பேசும் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் சொல்லும் தகவல் பிழைகளை சுட்டிக் காட்ட முடியாத அடக்குமுறை இருப்பது வருந்தத்தக்கது. இத்தனைக்கும் தமிழச்சி பிறந்த இந்தியாவும் பேச்சுரிமை கொண்ட நாடு. பெட்னா நடக்கும் அமெரிக்காவிலோ கருத்து சுதந்திரம் இன்னும் சிறப்பாகவே இயங்குகிறது. தமிழச்சி போன்றோரின் காந்திய மறுப்பு கருத்துகளோடு மாறுபடுவதை விட்டுவிடலாம்.
குறைந்த பட்சம், காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் சான்றாதாரங்களை எடுத்து வைக்கக் கூட இடம் தராமல் பெட்னா அமைப்பு இயங்குகிறது.
இவ்வளவு இருந்தும், நான் மதிக்கும் நல்லகண்ணு அய்யா போன்றோர் வருவதற்காகவே பெட்னா செல்லலாம் என்று எண்ணியிருந்தேன். அவரைப் போன்றோர் வருவதற்காக நிச்சயம் உழைக்கலாம். பெட்னா சொல்வது முற்போக்கு; செய்வது அக்கிரகாரம். மிக ஆபத்தான முகப்பூச்சு கொண்டு இயங்குகிறார்கள். மேடையில் பெரியார் கோஷம் போடுகிறார்கள். விழா மலரில் சாதி மறுப்பு திருமணங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள். எனினும், செயலூக்கம் துளி கூட இல்லை. சொற்பொழிவு மட்டும் போதும் என்று நினைப்பவர்களை அறியாமல் வியர்வை சிந்துபவர்களை எண்ணினால் பரிதாபம் கலந்த சோகம் எழுகிறது.
நான் பல ஆண்டுகளாக இங்குள்ள சிறுவர்களுக்கு தமிழ்க் கற்றுத் தருகிறேன். என்னைப் போல் ஒவ்வொரு ஊரிலும் தமிழ் ஆசிரியர்கள் ‘தமிழ் எங்கள் மூச்சு’ என்று பந்தா காட்டாமல் இயங்குகிறார்கள். பரத நாட்டியத்தில் தற்கால வரலாறுகளை தமிழ்ப்பண் கொண்டு அரங்கேற்றுதல், பாரதி பாடல்களைக் கொண்டு இசை நாடகமாக்குதல், பரபரப்பு செய்யத் தெரியாத படைப்பாளிகளை வாசகர் வட்டத்தில் உரையாடச் செய்தல் என்று பல நல்ல விஷயங்கள் பெட்னா போர்வை இல்லாமலேயே சிறப்பாக நடந்து வருகின்றன.
பெட்னா அழைக்கும் பலரால் தானாகவே அமெரிக்கா வந்து செல்லும் பண பலமும் புகழும் உண்டு. ”பாவண்ணன், பெருமாள் முருகன், அழகிய பெரியவன் போன்ற இலக்கியவாதிகள் வருவதில்லையே, நாங்களே காசு கொடுத்து பெட்னா மூலமாக வ்ரவழைக்கலாமா?” என்னும் கேள்விகளுக்கு இது வரை பெட்னா தரப்பில் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது.
நாஞ்சில் நாடன் வந்தபோதும் கூட, “இவ்வளவு தூரம் வந்துட்டீங்க… அப்படியே ஃபெட்னாவிற்கும் எட்டிப் பார்த்திருங்க! உங்களை இரண்டாயிரம் தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எங்களுக்கும் இன்னொரு பேச்சாளர் கிடைச்சா மாதிரி ஆச்சு!” என்பது போன்ற வரவேற்புகள் சகஜம்.
புகழ்பெற்ற கலெக்டரை அழைப்பதை விட அமரிக்கையான குடத்துள் விளக்குகளை கூப்பிடலாம். முதியவர்களை அழைப்பதில் தவறேதுமில்லைதான்; எனினும் மனுஷ்யபுத்திரன் போன்ற இளமையான ஆளுமைகளை பேசச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வருடந்தோறும் விழாவின் மூலமாக ஒன்றேகாலில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய்தான் புரளும் நிர்வாகத்தில் தமிழகத்தின் முக்கியமான இளமையான சிந்தனாவாதி ஆளுமைகளையும் அழைத்து வருவார்கள் என்று நினைப்பது அநியாயம்!
கடைசி வரைக்கும் நீங்க ஃபெட்னா பத்திதானே எழுதியிருக்கீங்க. அஜென்டாவுல இன்னும் 2 இருக்கே.
இன்னும் இரண்டு?
அடுத்ததாக எஸ் ராமகிருஷ்ணனின் தமிழ் படைப்பாளிகள் குறித்த கருத்துக்கான பதிலாக ஒன்றும் தமிழ் பயிலும் சிறுவர்களின் மனநிலை குறித்தும் மனைவியர்களின் எண்ணவோட்டம் குறித்தும் தொடர்வதாக திட்டம்.