தென்றல் மாத இதழ்: மே 2012: ஆர். பொன்னம்மாள் – அரவிந்த்


நன்றி: எழுத்தாளர் பகுதி: அமெரிக்காவில் வெளியாகும் தென்றல் பத்திரிகை

தமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் வரலாறு, சமூகம், நகைச்சுவை போன்றவற்றைப் போலவே ஆன்மீகத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. ஆறுமுக நாவலர் தொடங்கி வேதநாயக சாஸ்திரியார், ரா. கணபதி, பரணீதரன், மணியன், லக்ஷ்மி சுப்ரமணியம் எனப் பலர் இதன் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளனர். இவர்கள் வரிசையில் மூன்று தலைமுறைகளாக எழுதி வருபவர் ஆர். பொன்னம்மாள். இவர், மே 21, 1937 அன்று சென்னை, திருவல்லிக்கேணியில் ராமசுப்ரமண்யம்-லக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகத் தோன்றினார். பள்ளிப்படிப்பு சென்னையில். ஏழு வயதில் தந்தையை இழந்தார். அதன் பின் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இவரால் கற்க முடிந்தது. குடும்பம் கல்லிடைக் குறிச்சிக்குக் குடி பெயர்ந்தது. சிறுவயதில் படித்த அம்புலிமாமா, ஜில்ஜில், டமாரம், பாப்பா மலர், பாலர் மலர், கல்கண்டு போன்ற பத்திரிகைகள் இவரது வாசிப்பார்வத்தைத் தூண்டின. வளர வளர கல்கி, தேவன், பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி., எல்லார்வி, லக்ஷ்மி போன்றோர் எழுதிய நூல்கள் படிக்கக் கிடைத்தன. அவை இவரது அறிவை விசாலமாக்கியதுடன் எழுதும் ஆர்வத்தையும் தூண்டின.

தனது வீட்டைச் சுற்றி வசித்த குழந்தைகளுக்கு தினமும் கதைகள் சொல்வது வழக்கமானது. ‘தமிழ்நாடு’ இதழ் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கு சிநேகிதி ருக்மிணியின் தூண்டுதலால் ஒரு சிறுகதையை எழுதி அனுப்பினார். ஆசிரியரின் பாராட்டுதலுடன் ‘இரட்டைப் பரிசு’ என்ற அச்சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து தமிழ்நாடு இதழிலேயே ‘அன்பு மனம்’, ‘வழிகாட்டி’, ‘இன்ப ரகசியம்’, ‘விதி சிரித்தது’, ‘கண் திறந்தது’, ‘சந்தேகப் பேய்’ போன்ற பல சிறுகதைகள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. 1958ல் எஸ்.எம்.சுப்ரமண்யத்துடன் திருமணம் நிகழ்ந்தது. குடும்பப் பொறுப்பு மிகுந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை என்றாலும் புத்தக வாசிப்பும் நேசிப்பும் தொடர்ந்தது. கணவர் ஒரு பத்திரிகை ஆர்வலராக இருந்ததால் பத்திரிகைகள், நாளிதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. கணவரின் உறுதுணையுடன் ஜோதிடம் மற்றும் சம்ஸ்கிருதத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார்.

1976ல் தினமணி நாளிதழ், குழந்தை எழுத்தாளர் சங்கப் போட்டி ஒன்றை அறிவித்தது. குடும்பச் சூழலால் அதுவரை எழுதாமலிருந்த பொன்னம்மாள் தனது குழந்தைகளின் தூண்டுதலால் ‘கடவுளின் கருணை’ என்ற சிறுகதையை எழுதி அனுப்பினார். அது பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் பரிசும் கிடைத்தது. தொடர்ந்து சில சிறுகதைகளயும் வானொலி நாடகங்களையும் எழுதிய போதும் முழுமையாக எழுத்தில் ஈடுபட இயலவில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுத ஆரம்பித்தார். 1983ல் இவர் எழுதிய ‘கருணை விழிகள்’ என்ற நாவல் தங்கப் பதக்கம் பெற்றது. அது பின்னர் கோகுலத்தில் தொடராக வெளிவந்து சிறுவர்களின் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தீவிரமாக எழுத ஆரம்பித்தார்.

இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கடவுளின் கருணை’யை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டு ஊக்குவித்தது. இவர் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள ‘பாண்டுரங்க மகிமை’யை பிரபல கிரி டிரேடிங் நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து எழுதுமாறு அதன் உரிமையாளர் கிரி ஊக்குவிக்கவே பல நூல்களையும், ‘காமகோடி’ இதழுக்காகப் பல்வேறு, கதை, கட்டுரை, வரலாற்றுச் சம்பவங்களையும் எழுத ஆரம்பித்தார். குறிப்பாக இவர் குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் ‘கருணை விழிகள்’, ‘பறவைகள் பலவிதம்’, ‘பொன்மனம்’, ‘திருக்குறள் கதைகள்’, ‘பாட்டி சொன்ன கதைகள்’ (மூன்று பாகங்கள்) போன்ற 50க்கும் மேற்பட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன. ‘ஸ்ரீமத் பாண்டுரங்க விஜயம்’, ‘சிவலீலை’, ‘நாராயணீயம்’, ‘தேவி திருவிளையாடல்’, ‘கருட புராணம்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்த விளக்கம்’, ‘பரமாச்சர்யாள் பாதையிலே’, ‘குரு ரத்னங்கள்’, ‘சத்ய சாயி வரலாறு’, ‘மகாபாரதக் கதைகள்’ போன்ற ஆன்மீக நூல்கள் பல பதிப்புகள் கண்டவையாகும். குறிப்பிடத்தக்க வகையில் சில நாடகங்களையும் பொன்னம்மாள் எழுதியிருக்கிறார். அவற்றில் சிலவற்றுக்குப் பரிசும் கிடைத்துள்ளது. குழந்தை இலக்கியம், ஆன்மீகம், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு என 90 நூல்கள் வரை எழுதியிருக்கும் பொன்னம்மாளின் படைப்புகளை வானதி பதிப்பகம், நியூ ஹொரைஸன் மீடியாவின் தவம் பதிப்பகம் போன்றவை தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன. இவரது நூல்களுக்கு தமிழக அரசுப் பரிசு, மத்திய அரசின் சிறந்த நூல் விருது, குழந்தை எழுத்தாளர்கள் சங்கப் பரிசு, ஏவிஎம்மின் தங்கப் பரிசு, ஸ்டேட் பாங்க் பரிசு, பபாசி விருது, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது போன்றவை கிடைத்துள்ளன.

“இன்றைக்கு டிவி மற்றும் பெரியவர்களின் ஒத்துழைப்பின்மை குழந்தை இலக்கியத்தை நசிய வைத்திருக்கிறது. குழந்தைகளும் சீரியல் பார்ப்பதற்கு ஃபோர்ஸ் செய்யப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவு குழந்தைகள் தங்களின் உலகத்தை இழக்கிறார்கள். முன்பு பெரியவர்கள் குழந்தைகளை ஒதுக்கும்போதோ, ஒதுங்கும்போதோ – புத்தகம் தோழன் ஆனது. புத்திசாலித்தனம் வளர்ந்தது. ஆனால், இன்று டிவி வீட்டுக்குள் வந்துவிட்டபின் நிலைமை மாறிப்போய் விட்டது” என்று கூறும் பொன்னம்மாள், “சிறுவர் இலக்கியத்தில் அழ. வள்ளியப்பாவுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் சமாசாரங்களை ஈ.எஸ். ஹரிஹரன் எளிய முறையில் கதைகள் மூலமாக சொல்கிறார். தாவரங்கள், மிருகங்கள் குறித்த வாண்டுமாமாவின் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கனவாய் இருக்கின்றன. மா.கோதண்டராமன் எழுதிய அறிவியல் கட்டுரைகள் ஆழமாகவும் சுவையாகவும் சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும். பூவண்ணன் நடைமுறைக்கு ஏற்ப புனைகதைகள் படைக்கிறார். சௌந்தர் எழுதும் குழந்தைகளுக்கான படைப்புகளும் அவசியம் சிறுவர்களின் புத்தக அலமாரியில் இருக்கவேண்டும். ஆனால் இன்று குழந்தை இலக்கிய வளர்ச்சி மிகவும் பின்தங்கியே இருக்கிறது” என்று வருந்துகிறார்.

இன்றைய சிறார் இதழ்கள் குறித்து, “குழந்தைகளே எழுதும் புதிர்கள், ஓவியங்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. தமிழார்வத்தையும் வளர்க்கிறது. குழந்தைகளுக்கு மட்டும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டி, அறிவியல் போட்டி போன்றவையும் வரவேற்கத்தக்கன. சாதனை புரிந்தவர்கள், ரோல் மாடல்கள், பல்துறை விற்பனர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என பலரின் வாழ்க்கை குறிப்புகளும், சரிதைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. தூண்டுகோலாக அமைகிறது.” என்கிறார். “குழந்தைகள் ஈரமண். அனைத்து ஊடகங்களும் பத்து சதவீதமாவது முழுக்க முழுக்க வயதுவாரியாகக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். பொறுமை, முன்னேற்றம், தன்னம்பிக்கை, அன்பு, பணிவு, சேமித்தல், ஆடம்பரம் தவிர்த்தல், நேரம் விரயமின்மை, காலங்கள் மாற்றம், கனவு, நம்பிக்கை போன்றவற்றை விதைத்து வருங்காலத்திற்குத் தயார் செய்ய வேண்டும்” எனச் சொல்லும் பொன்னம்மாளின் வேண்டுகோள் அவசியம் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

இன்றும் இளைய தலைமுறையினருக்கு இணையாக எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகிறார் ஆர். பொன்னம்மாள். எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர் பாஸ்டன் பாலாஜி இவரது மகன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.