நித்தியானந்தா – ஆராதித்து கொண்டாடப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1


உதவி: ஜெயமோகன் – ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1

இரண்டு சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. இரண்டுமே சோ ராமசாமி நடித்த படங்கள். இரண்டுமே இளையராஜா குடும்பத்தினர் இசையமைத்தவை. 1981ல் வெளிவந்த கழுகு. 1998ல் வெளிவந்த காதலா… காதலா.

இந்த இரு படங்களுக்கும் நடுவே உள்ள தூரம் என்பது இரு தலைமுறைகளுக்கு, இரு காலகட்டங்களுக்கு நடுவே உள்ள தொலைவு. கழுகு எண்பதுகளில் வெளியானாலும் அது உண்மையில் இக்கால மனநிலைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திய படம். 2020க்குப் பின்னால் வலுப்பெற்ற மனநிலைகளையும் எண்ணங்களையும் காட்டும் படம் காதலா… காதலா.

கழுகு இந்தியாவில் தொண்ணூறுகளில் நிலவிய ஆன்மிகத் தேடல்களையும் பா.ஜ.க.வின் வளர்ச்சியையும் பற்றிப் பேசுகிறது. ‘போலி சாமியார்’ என்ற சொல்லாட்சி அன்று மிகப்பிரபலம். இணையான இன்னொரு சொல்லாட்சி ‘மதவாத அரசியல்’. ஒரே பிரச்சினையின் இருமுகங்கள். இவ்விரு சரடுகளையும் பின்னியே கமல் கதைகளும் சத்யராஜ் படங்களும் வெளிவந்தன.

கழுகு நகரத்தில் செல்வம் சம்பாதித்த பிறகு தோன்றும் வெறுமையைக் காட்டுகிறது. அவர்களின் மனக்கசப்பும், விரக்தியும், வெற்றி அடைந்ததனால் உண்டான ஏமாற்றமும், ஒட்டுமொத்தமான தேடலின்மையும் அதன் காட்சிகளில் வெளிப்படுகின்றன. ’நேர்மை மட்டும் இருந்தாப் போதுமா சாமீ? கூட அதிர்ஷ்டமும் வேணும்!’ என்னும் வியாபாரியின் வசனங்களைத் தொடர்ந்து ‘போன வருஷம் நல்லா இருந்தா மனைவி செத்துப் போயிட்டா!’என்று அவன் சொல்வது உதாரணம்.

முழுமையான தீவிரவாதத்தில் முடியும் ‘கழுகு’க்கு நேர் மாறான படம் ‘காதலா… காதலா’. தலைப்பே அதைச் சொல்லிவிடுகிறது.

எண்பதுகளில்தான் கோவில் பூசாரிகளும் அர்ச்சக்ர்களும் காவியுடை தரித்து வெளிவர ஆரம்பித்து வைய விரிவு வலையில் இணைத்த கம்ப்யூட்டரில் புகுந்த வைரசு போல பரவினர்.

அவர்களில் முதன்மையானவரான பங்காரு அடிகளை அடிபப்டையாகக் கொண்டு உருவான படம் அது. மெயின் சாமியார் பெயரே ஸ்ரீலஸ்ரீ ஆனந்த விகடனாந்தா.

எழுபது எண்பதுகள் ஆன்மிகக் கதைகளைப் பேசின. பக்தர்கள் கோவில் செல்பவர்களாக, எந்தக் கஷ்டத்திலும் கடவுளை மலைபோல் நம்புபவராக இருக்கவேண்டும் என இலக்கியமும் ஏபி நாகராஜனும் அறைகூவின. ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவர ஆரம்பித்த ஜெகதீசன் மற்றும் இராம நாராயணன் திரைப்படங்கள் ஒரு தனிமனிதனின் மேஜிக் கொண்டு தெய்வம் மனுஷ ரூபேனாம் என்று சொல்ல ஆரம்பித்தன.

அகத்தியரும் கேபி சுந்தராம்பாளும் எழுபதுகளின் இலட்சிய புருஷர்கள். எண்பதுகளில் கேயார் விஜயாவும் தீபிகா சிகாலியாவும் அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தார்கள். சினிமாவிலோ தொலைக்காட்சியிலோ சீதாவகவோ அம்மனாகவோ வந்துவிட்டு கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் பணமும் அதிகாரமும் கைவரும், அதுவே வாழ்க்கையின் வெற்றி என அந்தப்படங்கள் சொல்லின.

அன்றைய சூழலை வைத்தே அந்தக் கூற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எண்பதுகளில் இந்தியா கடைப்பிடித்துவந்த அரைகுறை சோஷலிசம் மீதான நம்பிக்கை தகர்ந்தது. வேலூர் ஜலகண்டேசுவரர் செயலிழந்து மூடியிருந்தார். திராவிட கட்சிகளின் ஹிந்து அறநிலையத்துறையின் பெரும் கபளீகரத்தினால் கோவில் மானியங்கள் உறைந்து நின்றது. விளைவாக உச்சகட்ட நம்பிக்கையின்மை. நாம் முன்னுதாரணமாகக் கொண்ட மூலஸ்தானமே தத்தளித்துக் கொண்டிருந்தது.

அந்நிலையில்தான் டிஜிஎஸ் தினகரன் பாணி ’கடவுளைக் கண்டேன்’ குரல்கள் எழ ஆரம்பித்தன. பிரார்த்தனை கிளப் கோரிக்கைகள் எழுந்தன. அந்தப் பொதுவான எண்ண ஓட்டம்தான் மெல்ல மெல்ல முதிர்ச்சி கொண்டு புட்டபர்த்தி சாய் பாபா ஆக செயல்வடிவம் பெற்று திருமூலரைத் தூக்கிப்போடச்செய்தது. இயேசுவின் முகமான சகோதரர் வந்து சேர்ந்தார். ஆன்மிகத்தை விற்கும் சுவிசேஷ நற்செய்தி கூட்டம் ஆரம்பித்தது.

ஆன்மிக எளிமையமாக்கல் கீழ்மட்ட வறுமையை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நடுத்தரவர்க்கத்துக்கு வாய்ப்புகளை அதிகரித்தது. தெய்வத்தின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. வேலை நெருக்கடியினால் உருவான மன அழுத்தங்களுக்கு நம்பிக்கையை ஊட்டுபவையாக அந்த ஆன்மிக நிறுவனங்கள் அமைந்தன.

கடவுளை வேண்டி வரங்களைப் பெறுவது என்பதே நம்முடைய பழைய மனநிலையாக இருந்தது. பண்பாடுகளை ஒரு நியதியாக, கடமையாக நாம் கற்பிதம்செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை கார்ப்பரேட் சாமியாரிசம் உருவாக்கியது. பணத்தைக் கொடுத்து நிம்மதியைப் பெறுவதை வாழ்க்கைவிதியாகக் கொண்ட ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டியிருந்தது. அதைச்செய்தவை கார்பரேட் ஆன்மிக நூல்கள்.

பொதுநலன், சமூகநலன் எதைப்பற்றியும் கவலைகொள்ளவேண்டாம் என அவை கற்பித்தன. ஆசாமியிடம் நெருங்குவதே வாழ்க்கையின் பயன் என்று சித்தரித்தன. நம்முடைய மீடியா பிரக்ஞையில் இந்தக் கார்ப்பரேட் சாமிகள் உருவாக்கிய பெரும் மாற்றத்தை நாம் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை.

எண்பதுகளில் இருந்து நம் ஆலயச்சூழல் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்று பார்த்தாலே இது புரியும். எண்பதுகளில் ஆலயங்கள் ஜாதிகளின் நாற்றங்கால்கள். சமூகம் சார்ந்த கொண்டாட்டங்களும் சாதி சார்ந்த வர்த்தகங்களும் கொண்டவை. இன்றைய கோவில்களில் இன அரசியலே இல்லை. பக்தர்கள் முழுக்கமுழுக்க தொழில்முறை நோக்கு கொண்டவர்கள். அன்று இலக்கியபிரக்ஞை கொண்ட, சொற்பொழிவுகளைக் கேட்கும் பழக்கம் கொண்ட, கலைத்திறன் கொண்ட பக்தர்கள் கதாநாயகர்களாகக் கருதப்பட்டனர். இன்று, பணக்கார பக்தர்கள், ஊடகத்தில் செல்வாக்கு மிக்க பக்தர்களே ஆலயங்களின் நாயகர்கள்.

இந்தமாற்றம் நிகழ ஆரம்பிக்கும் காலகட்டத்தைக் காட்டுகிறது காதலா… காதலா. ஆனால் அன்று இந்தச் சுயநலச் சிந்தனைகள் இன்னும் முதிரவில்லை. முந்தைய இலட்சியவாதத்தின் சாயலும் கொஞ்சம் இருந்தது. அந்தப்படத்தில் கமல்ஹாசன் (இராமலிங்கம்) கொஞ்சம் இலட்சியவாத நோக்கு கொண்டிருக்கிறான். சேவைகள் செய்கிறான். ஆனால் கழுகு முந்தைய காலகட்டத்தின் முற்றிய விரக்தியைக் காட்டுகிறது.

இன்றைய இளைஞர்களால் கழுகு காட்டும் சூழலை, அந்த மனநிலையை சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போகலாம். இரண்டாமுலகப்போருக்குப் பின்னால் மேலைநாடுகளில் உருவான ஓஷோவும் கிருஷ்ணமூர்த்திகளும்

நம்பிக்கை இழப்பும் கலையில், இலக்கியத்தில், தத்துவத்தில், ஆன்மிகத்தில் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தன. இளைய தலைமுறை எதிர்ப்பும், விரக்தியும் கொண்டதாக தெருவில் இறங்கியது.

மருத்துவ சிகிச்சைகளில் ப்ரானிக் ஹீலிங் [Pranic Healing] உருவாகி வந்தது. பொதுப்பேச்சில் கட்டிப்புடி வைத்தியம் என இதைச் சொல்வார்கள். அரசியலில் திராவிட பாணி வன்முறைக்கிளர்ச்சி எழுந்தது. கம்யூனிஸ்ட் அளவில் அது பரவியது.

தமிழகத்தில் காஞ்சிப் பெரியவர் காலகட்டம் முடிந்தபின் பிறந்த தலைமுறை குருபீடங்களில் நம்பிக்கை இழந்தது. பெரியாருக்குப்பின் பக்தி பரவலாகியது, ஆனால் சங்கர மடத்தின் சனாதனத் திட்டங்கள் காரணமாகத் ஆன்மிகம் வளரவில்லை. ஆகவே வெறுமையான சம்பிரதாயம் உருவாகியது. ஒரு தலைமுறையே செயலற்று சோகம் கொண்டு வீட்டில் முடங்கியது.

அவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனையின் மனநிலைகளும் பங்காரு அடிகள் பாணி தனிநபர் தொழுகை குணப்படுத்தல்களும் பெரும் ஈர்ப்பை அளித்தன. காவியுடை அணிவது, இரண்டு வார்த்தைகளில் புரியாமல் பேசுவது, ஆங்கில வார்த்தகளைப் பயன்படுத்துவது என ஒரு உலகம். இன்னொரு உலகம் மிடையம் சார்ந்தது. இந்தியாவில் சுப்பிரமணிய சாமியும் சந்திரசுவாமியும் அரசால் கொடூரமாக நசுக்கப்பட்டபோது மனச்சோர்வு கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது.

இந்தக்காலகட்டத்தில்தான் நான் என் முதிரா இளமையை ஆரம்பித்தேன் என்பதனால் எனக்கு நேரடி மனப்பதிவே உண்டு. அக்கால எழுத்துக்களில் திரைப்படங்களில் எல்லாம் இந்த திக்கற்ற பார்வதியையும் நல்லதங்காளையும் காணலாம். அந்த சோகத்தை உடல்மொழி மூலம் துலாபாரம் என்ற படத்தில் கச்சிதமாக வெளிப்படுத்திய சாரதா பெரும் விருது பெற்றார்.

தமிழில் அந்த சோகத்தைப் பதிவுசெய்த பிற திரைப்படங்கள் என மழலைப் பட்டாளம் [1980] உருவங்கள் மாறலாம் போன்றவற்றைச் சொல்லலாம்.

இலக்கியத்தில் மிக அழுத்தமான பதிவுகள் ஜெயகாந்தனிடத்திலும், ஜே.ஜே குறிப்புகளிலும் ஜீனோவுள்ளும் கந்தசாமிப் பிள்ளையிடத்திலும் கிடைக்கப் பெற்றவை.

நித்தியானந்தாவைப்பற்றிப் பேசுவதற்காகவே இந்த விரிவான சித்தரிப்பை அளித்தேன். இந்த காலகட்டப்பிரிவினை இல்லாமல் நித்தியானந்தாவை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இப்படிச் சொல்லலாம்.

நித்தியானந்தா முந்தைய காலகட்டத்தை நோக்கிப் பேசியவர். இன்று அவரை இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைக்கும் பார்வைக்கும் ஏற்ப புரிந்துகொள்கிறார்கள்.

One response to “நித்தியானந்தா – ஆராதித்து கொண்டாடப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1

  1. வாவ். அருமையான பகடி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.