அளிப்பான் அந்தரங்கம்: எப்பொருள் – மெய்ப்பொருள் – உட்பொருள்


கட்டுரை அசலாக வெளிவந்த சொல்வனம்.காம் தளத்திற்கு நன்றிகளுடன்

ஐஐடியிலும் ஐஐஎம்மிலும் நான்கு வருடம் படித்து தேறி வருபவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்வது ஒரு ரகம். பிளஸ் டூ முடித்தவர்களை அப்படியே அள்ளிக் கொண்டு போய், தனக்கு வேண்டியதை மட்டும் சொல்லிக் கொடுத்து, வியாபர நுணுக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை வடிவமைத்து, அனுபவமும் இரண்டு சொட்டு சேர்த்து, தன் நிறுவனத்தின் நெளிவு சுளிவுக்கேற்ப வளைய வைத்து வார்ப்பெடுப்பது இன்னொரு கலை.

ஐபிஎம் (IBM), எச்.பி. (HP), டெல் எல்லாம் முதல் ரகம். அமேசானும் ஃபேஸ்புக்கும் முன்னேறும் இரண்டாவது ரகம்.

முதல் ரகத்தில் நம்பகத்தன்மை இருக்கும். கடுமையான பரீட்சைகளுக்குப் பிறகு தேர்வாகி வெளியில் வந்தவற்றையே நாம் வாங்குகிறோம். ஃபேஸ்புக்கிலோ ஒரு தடவை ஸ்டேட்டஸ் அப்டேட் போட்டுப் பார்ப்போம். இரண்டு நிமிடம் கழித்தும் அது தோன்றாவிட்டால், அதையே மீண்டும் போடுவோம். இரண்டு தடவை வந்தால் கூட பரவாயில்லை.

ஆனால், எச்.பி.க்களை பெருவிலை கொடுத்து வாங்கிப் போடும் வங்கிகளில் இந்த மாதிரி இரண்டு தடவை வரவு கழித்தலோ பற்று கூட்டலோ கூடவே கூடாது. தரம் இங்கே அதிமுக்கியம்.

முதலாம் ரக ஐபிஎம்-களில் முஸ்தீபுகள் அதிகம். முதலீட்டு செலவு நிறைய ஆகும். பரிசோதனை எல்லாம் செய்யாமல், முன் வைத்த காலை பின் வைக்காமல் நுழைய வேண்டும். நேற்று ஆர்குட்; இன்றைக்கு கூகிள் பிளஸ்; நாளைக்கு கிரோம் என்று மாறும் தட்பவெப்பத்திற்கேற்ப ஆய்வகமாக, இரண்டாவது ரகம் இயங்குகிறது.

அயலாக்கம் x கிளைத் துவக்கம்

1990களின் இறுதியில் அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கைக் கண்டு பயப்படாமல் களத்தில் குதித்த காலம். அதுவரை “இந்தா பிடிச்சுக்கோ! இருநூறு டாலரோ… முன்னூறு டாலரோ!” என்று கணக்கு பார்க்காமல் இன்ஃபோசிஸ்களுக்கும் விப்ரோகளுக்கும் டி.சி.எஸ்.களுக்கும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலம் சென்றபின் “இதே வேலையை உங்க நாட்டில் போய் செய்தால், இரண்டு சதவீதம் தள்ளுபடி கிடைக்குமா?” என்று பேரம் பேசினார்கள்.

புது நூற்றாண்டு பிறப்பதற்கு முன் பழைய உத்தி, தூசி தட்டப்பட்டு மறு வாழ்வு கண்டது. அன்று பருத்தி ஆலை ஏற்றுமதி; காலணித் தொழிற்சாலைகளை சீனாவிலும் தெற்காசியாவிலும் துவங்குதல்.

இப்பொழுது கணினி நிபுணர்களுக்காக இந்தியாவிலேயே கிளை தொடங்குதல். பெரு நிறுவனங்கள், தொழில் நுட்ப முதலாளிகள் என்று எந்த வட்டத்திற்குள்ளும் அடங்காமல், அனைத்து மேற்கத்திய பிரகிருதிகளும், இந்தியாவில் கணினி நிபுணர்களைக் கொண்டிருக்கிறார்கள்.

இடைத்தரகர் வேண்டாம்; காண்ட்ராக்டர்களை, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்த வேண்டாம்; பொட்டி தட்டுபவர்களும் விட்டேத்தியாக இல்லாமல், பொறுப்பாக இருப்பார்கள்.

நிரலி எழுதுபவர்களிடமே இந்தப் பரிவு என்றால்…

இப்பொழுது அந்த நிரலிகளை இயக்கும் சர்வர் என்றழைக்கப்படும் அளிப்பான்கள்களுக்கும் – முழு வடிவமைப்பும் உள்கட்டுமானமும் கொண்டு இயங்க நினைக்கிறார்கள்.

முதலீடு முடக்கம் x சில்லறை வணிகம்

ஆயிரம் ஹெக்டேருக்கு அரிசியும் பணப்பயிரும் விதைப்பார்கள். இப்பொழுது ஆப்பிள் போடுகிறார்கள். ஐபோன், ஐபேட் பயனர்களுக்கு ஐக்ளௌட் (மேலும் வாசிக்க: http://solvanam.com/?p=14812) தருகிறது ஆப்பிள். நமது புகைப்படங்கள், விழியங்கள், டாரெண்ட்டில் தரவிறக்கிய திரைப்படங்கள் எல்லாவற்றையும் இணையத்தில் சேமித்து வைக்கலாம்.

ஆப்பிள் மட்டுமல்ல… மைக்ரோசாப்ட், அமேசான், கூகிள் போன்றோர், என்னைப் போன்ற நுகர்வோருக்கு இந்த வசதியை செய்து தருகிறது. என்னை வேலைக்கு வைத்திருக்கும் பெரு நிறுவனங்களுக்கு இதே வசதியை அதே நிறுவனங்களும் ராக்ஸ்பேஸ், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்றோரும் சினிமாஸ்கோப் முப்பரிமாண பிரும்மாண்டமாக இயக்குகிறார்கள்.

இதில் என்ன வசதி?

அ) ‘வை திஸ் கொலவெறி டீ’ வெளியாகும் சமயத்தில் திடீரென்று அளிப்பான்களின் தேவை அதிகமாகிறது. உடனடியாக, விநாடிகளில் அளிப்பான்களைக் கூட்டலாம்; குறைக்கலாம்.

ஆ) புதிதாக வெளியிடும் நிரலிகளை, சோதித்துப் பார்க்கலாம்.

இ) பத்தாயிரக் கணக்கில் செலவு செய்யும் முதலீடு கிடையாது. பத்து டாலர் தள்ளினால் போதுமானது. அதிவிரைவு அளிப்பான்கள், ஆயிரம் கொடுப்பார்கள். சிறுவணிகர்களுக்கு கந்து வட்டியில் கணினிகள் வாங்கும் நிலையை விட்டு விடுதலை.

மேகம் – கிளவுட்

2000-ம் ஆண்டு வருகிறது… y2k என்று ஓடினார்கள்; அவுட்சோர்சிங் செய்தால் மட்டுமே சேமிக்க முடியும் என்று ஓடினார்கள்; எல்லோரும் செல்பேசி கொண்டே இயங்குகிறார்கள் என்று ஐபோன் அப்ளிகேஷனுக்கு ஓடினார்கள்.

இன்றைய தாரக மந்திரம் – கிளவுட்.

விண்டோஸ் கொண்ட கணினி வேண்டுமா? எத்தனை வேண்டும்? எவ்வளவு நாளுக்கு வேண்டும் – மேகத்திற்கு செல்லுக.

என்னது… விண்டோஸ் எல்லாம் வேண்டாம். நூறு இண்டெல் சில்லு கொண்ட சக்தி மட்டுமே வேண்டுமா? – மேகத்திற்கு வருக.

எனக்கு தேவதர்ஷினி நாயகியாகக் கொண்ட சீரியல் பிடிக்கும். கே பாலச்சந்தர் இயக்கினால் நல்லது. ஜெயமோகனின் காடு நாவலை கதையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால், அவரின் வசனம் இயல்பாக இருக்காது; பா ராகவனை வசனம் எழுத வையுங்கள். என்னால் இந்த வாரம் மட்டும்தான் பார்க்க முடியும். என்னிடம் கேபிள் கிடையாது. எனவே, ஐந்து நாளைக்கு மட்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்புங்கள் என்று கேட்பது போல் எதை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்பொழுது தேவையோ அப்பொழுது வாங்கிக் கொள்ள விழைகிறீர்களா – கிளவுடுக்கு வாங்க.

கொஞ்சம் சீரியசாகக் கணக்குப் போட்டுப் பார்க்க விரும்புபவர்களுக்கு: http://spreadsheets.google.com/ccc?key=0AgWfa8v6EGzjdElXQVFzU1plSXdEQmVHZ3M5YjlsNVE&hl=en&authkey=CM_RzL0E

நீங்கள் மாதத்திற்கொருமுறை மதுரையில் இருந்து சென்னை சென்று வருகிறீர்கள். அதற்காக பேருந்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், தினசரி திண்டுக்கல் வரை போய் வந்தால், டூ வீலராவது சொந்தமாக வைத்துக் கொள்வோம்.

அன்றாடம் ஏதாவது பயன் இருக்குமா? – வாங்கிப் போடு.
என்றாவது எதற்காவது மட்டுமே உபயோகமா? – வாடகைக்கு எடு.

எச்.பி.யிடத்திலும் ஐ.பி.எம்.மிடத்திலும் எங்களுக்கு இந்த மாதிரி தேவை. இதற்கு ஏற்ற மாதிரி வண்டி செய்து கொடு என்று கேட்டு கேட்டு, அலுத்துப் போன ஃபேஸ்புக், அமேசான்கள், தாங்களே டாட்டா நானோக்களை வடிவமைத்ததுடன், அவற்றை வாடகைக்கும் விடுகிறார்கள்.

கலிபோர்னியா பக்கம் அளிப்பான்களின் பலு அதிகரிக்கிறதா? பலு அதிகரித்தால் அளிப்பான்களின் உஷ்ணம் உச்சத்தை அடையும். உஷ்ணம் அதிகரித்தால், குளிரூட்டிகளின் வேலையும் அதிகரிக்கும். குளிரூட்டிகளினால், மின்கட்டணமும் எகிறும்.

அளிப்பான் அறையில் கிட்டத்தட்ட ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறினால், மின்கட்டணத்தில் நான்கு சதவிகிதம் ஜாஸ்தி கட்டவேண்டிய நிலை. அதற்கு பதிலாக, அளிப்பான்களின் வேலையை இன்னொரு ஊருக்கு திசை திருப்பி அனுப்பி வைக்கும் நுட்பத்தை கூகிள் கையாள்கிறது.

சாதாரணமாக பக்கத்து ஊருக்குப் போ; அங்கே இருக்கும் அளிப்பான்கள் மூலமாக தகவல் அனுப்பு. ஆனால், பக்கத்து ஊர் அளிப்பான் அறையில் வெப்பம் ஏறி விட்டதா? கொஞ்சம் தள்ளிப் போய், அடுத்த கட்ட அளிப்பானிடமிருந்து தகவல் பெற்றுக் கொள்.

இரண்டு லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை கூகிள் மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த நுட்பத்தினால் மட்டும் பில்லியன் கணக்கில் மின்கட்டணம் குறைகிறது.

தொடர்பான விழியம்:

முகப்புத்தகம் x கூகிள்

கணினி என்று எடுத்துக் கொண்டால்…

அதற்குள்ளே இண்டெல் அல்லது ஏ.எம்.டி. (AMD) சில்லுகள்; அவற்றிற்கு ஊட்டம் கொடுக்க கிராஃபிக்ஸ் கார்டுகள்; அதை இயக்க, சக்தி கொடுக்கும் மின்விசை அளிப்பு; இவற்றை எல்லாம் காற்றோட்டமான பெட்டியில் அடைக்கும் அடிச்சட்டம்; அதை அடுக்கு அடுக்காக கட்டு கட்டாக வரிசைப்படுத்தும் வடிவமைப்பு; இதற்கான மின்சார திட்டம்; குளிர்காலத்தில் வெப்பமும், கோடை காலத்தில் குளிரூட்டமும் தரும் சூழல்; மின்கட்டணம் எகிறாத கட்டிடக் கலை ஆக்கம்.

இவையனைத்தும் தொலைதூரத்தில் இருந்து நிர்வகிக்கும் வல்லமை; தொல்லை தராமல் கூட்டவும் குறைக்கவும் மாற்றவும் முடியும் திறமை.

இவ்வளவு நுட்பங்களையும் பொதுவில் வைத்திருக்கிறது ஃபேஸ்புக். (மேலும்: http://opencompute.org/)

சாதாரணமாக இந்த மாதிரி முன்னோடி பொறியியல் சமாச்சாரங்களை கூகிள் பகிரும்; மைக்ரோசாஃப்ட் கட்டிக் காக்கும். ஆனால், மைக்ரோசாஃப்ட் கூட தங்கள் மேக (அசூர்: http://www.theregister.co.uk/2009/09/25/microsoft_chillerless_data_center/) தரவு மையங்களுக்கான விவரங்களை வெளிக்காட்டுகிறது.

சர்வருக்கேற்ற மென்பொருளா? மென்பொருளுக்கேற்ற சர்வரா?

சரவண பவனுக்கு சென்றால் சகலமும் கிடைக்கும். கொஞ்சமாய் பசிக்கிறதா? மதியம் இரண்டு மணிக்குக் கூட இட்லி சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் பசியா? மினி மீல்ஸ் கிடைக்கும். அகோறப் பசியா? அன்லிமிட்டட் சாப்பாடு உண்ணலாம்.

ஆனால், பக்கத்து சந்தில் மாமி மெஸ் இருக்கிறது. திங்கள் கிழமை என்றால் தோசையும் சட்னியும் சாம்பாரும் மட்டுமே கிடைக்கும்; செவ்வாய் போனால் சப்பாத்தி + தால். வெரைட்டி இல்லாவிட்டாலும், மாமி மெஸ் ருசியே தனி.

முதல் பாணியில், சரவண பவன் போல் சகல வசதிகளுடனும் எச்.பி., டெல் போன்ற வணிகர்கள் சர்வர் கொடுக்கிறார்கள். இட்லிக்கும் அதே சாம்பார்; சாதத்திற்கும் அதே சாம்பார் என்பது மாதிரி விண்டோஸ் ஆஃபீஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆரக்கிள் டேட்டாபேஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆங்ரி பேர்ட்ஸ் விளையாடுவதற்கும் அதே சர்வர்.

வீட்டு சாப்பாடு மாதிரி தினம் தினம் மாறும் வேண்டுதலுக்கேற்ப, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஸ்பெஷலாக செய்து தரும் சர்வர் நுட்பத்தை ஃபேஸ்புக் விரும்புகிறது.

என்னுடைய நண்பர்களின் ஸ்டேட்டஸ் எனக்குத் தெரிய வேண்டும். கடைசியாகப் பார்த்த இடத்தில் இருந்து பார்க்கக் கிடைத்தால் போதுமானது. பத்து மாதங்களுக்கு முன்பு ஜூலையில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை பெரும்பாலும் தினசரி தேடிக் கொண்டிருக்க மாட்டேன். நேற்று என்ன நடந்தது என்பது க்விக்காக திரையில் தோன்ற வேண்டும். பழையதைத் தேடி வினவினால், பொறுமையாகக் காத்திருக்கும் தயார் நிலையில் இருப்பேன்.

எச்.பி., டெல் ஆகியோர் நேற்றைய விஷயத்தைத் தேடினாலும் அதே நேரம்; பத்து வருஷம் ஆகிப் போனதை விசாரித்தாலும் ஒரே நேரம் என்று கட் அண்ட் ரைட்டாக பேசுகிறார்கள். ஃபேஸ்புக்கிற்கும் கூகிளுக்கும் இது தோதுப்படவில்லை. தாங்களே சமைத்து, அதற்கான ரெசிப்பியையும் உலகுக்கு ஓதுகிறார்கள்.

பங்குச்சந்தையில் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கிற்கு இது ஐ.பி.ஓ. எனப்படும் (மேலும்: http://online.wsj.com/article/SB10001424052970203935604577066773790883672.html) பங்குச்சந்தையை நாடும் காலம். அதற்காக பல அஸ்திரங்கள். ஒரு புறம் வாடிக்கையாளர் எண்ணிக்கை பலத்தைக் காட்டுகிறது. இன்னொரு புறம் அந்த வாடிக்கையாளர், எத்தனை மணி நேரம் ஃபேஸ்புக்கிலேயே கட்டுண்டு கிடக்கிறார் என்று புள்ளிவிவரம் திரட்டுகிறது. அதே சமயம், இது தவிர எங்களிடம் நில புலம் போன்ற அளிப்பான் – கடல் போல் அசையா சொத்தாக குவிந்து கிடக்கிறது என்பதையும் முன்வைத்து, முதலீடு கோருகிறது.

அது சரி… இத்தனை அளிப்பான்கள் எதற்கு தேவை?

இன்றைக்கு எல்லோரும் பேஸ்புக்கை நாடுகிறோம். பாமாயில் கொடுக்கும் ரேஷன் கடை க்யூவாக, பேஸ்புக்கில் புதிதாக என்ன கருத்து வந்திருக்கிறது, எங்கே குழு அமைகிறது என்று பழியாய் கிடக்கிறோம். ஆனால், நாளைக்கே கூகிள் பிளஸ் என்று வேறு எங்காவது சென்று விட்டால்?

அந்தக் காலத்தில், உங்களில் பழைய தகவல், அப்பொழுது வலையேற்றிய நிழற்படங்கள், உளறிய கருத்துகள், விரும்பிய லைக் தொகுப்புகள் எல்லாவற்றையும் பத்திரமாக சேமித்து வைத்து, விளம்பரதாரர்களிடம் விற்க நினைக்கிறது ஃபேஸ்புக்.

750 மில்லியன் வாடிக்கையாளர்களின் நுணுக்கமான விவரங்கள், காலங்காலமாக ஒருங்கிணைக்கத்தான் இத்தனை அளிப்பான்கள்.

ரகசிய அளிப்பான் x திறமூல கணினி

ஃபேஸ்புக்கிற்கு தேவையான மென்பொருளை ஃபேஸ்புக் எழுதிக்கொள்கிறது. அப்படியானால், பேஸ்புக்கிற்கு தேவையான வன்பொருளை மட்டும், ஏன் ஐ.பி.எம்.மும், ஆரக்கிளும், எச்.பி.யும், டெல்லும் செய்துதர வேண்டும்?

தாங்கள் எழுதும் மென்பொருளுக்கு ஏற்ற வன்பொருள் வழங்கியை வடிவமைக்க விரும்புகிறார்கள். வன்பொருள் நிறுவனங்களான டெல், எச்.பி. போன்றோர், பொதுவான வழங்கிகளையே தயார் செய்கிறார்கள்.

ஒரே அளவில் அனைத்து உள்ளாடைகளையும் தயார் செய்து, சீனாக்காரரிடமும் கொடுக்கிறார்கள்; அமெரிக்காவின் போஷாக்கானவர்களிடமும் கொடுக்கிறார்கள். எப்படி பொருந்தும்?

2004களிலேயே இந்தப் பிரச்சினைகளை கூகிள் எதிர்கொண்டது. வண்ணமயமாக, விருப்பத்திற்கேற்ப, பயன்பாட்டுகேற்ப, வன்பொருள் வளைந்து கொடுக்க வடிவமைக்க ஆள் போட்டார்கள். தாய்வானுக்கும் தாய்லாந்துக்கும் ஆளனுப்பி சி.பி.யூ முதல் மதர்போர்டு வரை கொள்முதல் விலையில் சல்லிசாக வாங்கினார்கள்.

அமெரிக்காவில் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம் வாங்கி, வழங்கிப்பண்ணைகளுக்கு கூகிள் கால்கோள் இட்டது.

அண்ணன் எவ்வழி; பேஸ்புக் அவ்வழி என்று அளிப்பான்-பண்ணைகளை, இப்பொழுது ஃபேஸ்புக்கும் துவங்கி இருக்கிறது.

தங்களின் சிட்டிவில், ஃபார்ம்வில், ஜாம்பிலாண்ட் போன்ற விளையாட்டுகளுக்கான நுட்பத்திற்கேற்ற கணினி வடிவமைப்பு; ஐபோனில் முகப்புத்தகம் தெரிவதற்கான சிற்ப்பு வழங்கி வடிவமைப்பு; செய்தியோடை மற்றும் மாற்றுத் தளங்களில் பகிர்வதற்கான அளிப்பான் வடிவமைப்பு என்று செயல்பாட்டுகேற்ப மாற்றியமைத்து தெரிவு செய்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கூகிள் போல் கமுக்கமாக வைக்காமல், பகிரங்கமாக படம் போட்டு விளக்குகிறார்கள். எழும் பிரச்சினைகளை பிரசங்கம் செய்கிறார்கள். நாலு பேர் எட்டு விதமாக தீர்வு கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, அடுத்த தலைமுறைக்கான வழங்கிநுட்பத்தை மேம்படுத்துகிறார்கள்.

அப்படியானால், எச்.பி., டெல் போன்ற கணினி வன்பொருள் நிறுவனங்களின் கதி? அவர்களும் இதே போன்ற வழங்கி நுட்பத்திற்கு மாறலாம்; மேகதூதராக கிளவுட் கம்ப்யூட்டிங்கில் இறங்கலாம்.

ஃபேஸ்புக் அடிபற்றி, ஈ-பே, நெட்ஃப்ளிக்ஸ், சீனாவின் பைடூ, மொசில்லா எல்லாரும் இந்தப் பாதையில் காலடி வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இன்னும் கூட உங்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லையா?

அமெரிக்க வீட்டுச்சந்தை வீழும் என்றும் மனை விற்பகத்திற்கான கடன் ஏமாற்றப்படும் என்றும் ஆருடம் சொல்லி, அந்த ஆருடத்தின் மீது ஊகச் சந்தையில் பந்தயம் கட்டிச் சூதாடி பெரும்பணமும் ஈட்டிய கோல்ட்மன் சாக்ஸ் இந்த ஓபன் கம்ப்யூட் – திறமூல வழங்கி நுட்பத்தில் பிரதான இயக்குநராக சேர்ந்துள்ளது போதாதா?

இணையத்தில் திருடுவதும் அதைத் தடுப்பதற்குமான சட்டம் குறித்து சமீபத்தில் வாசித்த சுவாரசியமான கட்டுரை: சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.