குறும்படம்:
நடிப்பு:
- பாஸ்டன் ஸ்ரீராம்
- ஜெயவேலன்
- மாஸ்டர் சூர்யா
வசனம்: தேவ்
உணர்வும் ஆக்கமும்: இளா
Statutory Warning: இதற்கு மேல் ஸ்பாயிலர்கள் நிறைய இருக்கின்றன.
பின்னணி
1. ஃபேக் போடுவது
நகைச்சுவையான குறும்படம் போல் தென்பட்டாலும் இந்தப் படத்தின் கருப்பொருள் விவகாரமான விஷயம். சொவ்வறைக்காரர்கள் பொய் சொல்வது சகஜம். வானிலை படித்தவர்கள் தவறாக கணித்தால் தப்பில்லை. ஆனால், சாஃப்ட்வேரில் தெரியாததை தெரிந்ததாக சொன்னால் மாட்டிக் கொள்வேன்.
ஃபார்ச்சூன் 100 நிறுவனங்கள் முதல் உள்ளூர் கூடுவாஞ்சேரி கன்சல்ட்டிங் வரை இல்லாததையும் செய்யாததையும் இட்டு நிரப்பி காரியத்தை சாதித்துக் கொள்வதை பாடுபொருளாக ஆக்கியதற்கு பாராட்டுகள்.
2. பாஸ்டனில் கொழிஞ்சிக்காட்டூர்
பிரும்மச்சாரி ரூம் எப்படி இருக்கும்? தமிழக கிராம செட்டிங் மலை, குளம் எல்லாம் அமெரிக்காவில் எங்கே இருக்கும்? அவுட் டோர் சென்றாலும் முண்டா பனியன், கைலி சகிதமாக செல்வது சரிப்படுமா?
இது போன்ற நிதர்சன பிரச்சினைகளை லாவகமாக, பார்வையாளருக்கு துளிக்கூட சந்தேகம் வராத காட்சியமைப்பு. சிணுங்கும் தொலைபேசி முதல் நாயருக்கு டீ சொல்லும் பாங்கு வரை சிரத்தையான நுணுக்கங்கள். ’கலைஞர் டிவி’யின் நாளைய இயக்குநரின் சென்னைக்கார குருப்கள் கூட இப்படி பார்த்து பார்த்து செதுக்குவதில்லை.
3. இளா
இரண்டே நடிகர்கள். அவர்களை சட்டென்று இரண்டே நிமிடத்திற்குள் பதிய வைக்கும் குணச்சித்திரமாக்கம்.
எவ்வாறு என்பதை சுமாரான திரைக்கதை சொல்லிச் செல்லும். ஏன் என்பதை சுவாரசியமான கதைகள் சொல்லும். எப்படி என்பதை நகர்படங்களாக குறிப்பிடத்தகுந்த படங்கள் சொல்லிச் செல்லும். எதற்கு என்பதையும் முடிச்சுக்களோடு குறும்படத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் இளா.
நாடகத்தன்மை எட்டிப் பார்க்காதது; பந்தா செட் போடாதது; பாடல் போட்டு நேரத்தை ரொப்பாதது; கால் மணி நேர குறும்படத்தின் கேரக்டர்களையும் ஆழப் பதிய வைப்பது. பலே… இளா!
ஷொட்டு
- வசனம்: சில்லற இல்லாதவன் தாண்டா சிட்டிக்கெல்லாம் வருவான்!
- ‘திங்க் பிக்’ என்னும் போஸ்டர் ரூம் நெடுக, கதாபாத்திரங்களின் லட்சியங்களை பிரதிபலிக்கிறது.
- கணினிக்காரர்கள் புத்தகம் புத்தகமாக அடுக்கி வைத்து அழகு பார்ப்பதையும்; தலை மேல் துண்டு போல் மேலோட்டமாக வாசிப்பதையும் சொல்வது அழகு.
- இது போல் ரசனைமிக்க காட்சிகள் நிறைய உண்டு. சாம்பிளுக்கு, ‘நோ ஆட்டோ ஃபார் ஃப்ரெஷர்ஸ்’ சொல்லலாம்.
சந்தேகங்கள்
- யோசிப்பதற்காக மோவாய்க்கட்டை தேய்க்கும் தேய்வழக்காக நடிக்கும் ‘சாம்’ – தமிழ்ப்படங்களை நக்கல் விடுவதற்கா?
- கம்ப்யூட்டரை விட ஜோதிகா பிரதானமாகத் தெரிவது, மங்களகரத்தின் சிம்பாலிக் ஷாட்டா?
- ஜோக் தெரிய வேண்டும் என்னும் இடத்திற்காக ‘டெய்ங்’ என்று சத்தமாக வந்து விழும் இசைத் துணுக்கு, வெண்ணிறாடை மூர்த்தி சீரியல்களை கிண்டலடிக்கிறதா?
- கோலிவுட்டை நினைவூட்டும் விதமான ‘சம்போ… சிவ சம்போ’ போன்ற பிட்டுகளின் உள்ளீடு என்ன?
- நடுநடுவே கடிகாரத்தின் டிக் டாக் பின்னணியில் வருவது நேரம் உருண்டோடுவதன் குறியீடா?
- பெங்களூரு, டே-1 எல்லாம் ஆங்கிலம்; சேலம் மாவட்டம் மட்டும் தமிழ் துணையெழுத்தில் வருவதன் ஊடுபிரதி மொழிச்சிக்கல்களைக் கையாள்கிறதா?
தொடர்புள்ள பதிவுகள்:
1. Notable Tamil Short Films: பார்க்கத் தகுந்த தமிழ் குறும்படங்கள்
வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
யோசிப்பதற்காக மோவாய்க்கட்டை தேய்க்கும் தேய்வழக்காக நடிக்கும் ‘சாம்’ – தமிழ்ப்படங்களை நக்கல் விடுவதற்கா?
பதில்: எடிட்டிங்ல் மிஸ் பண்ணியிருக்கேன் – மண் ஒட்டியிருக்கு
கம்ப்யூட்டரை விட ஜோதிகா பிரதானமாகத் தெரிவது, மங்களகரத்தின் சிம்பாலிக் ஷாட்டா?
பதில்: பேச்சுலர் கண்ணியில் ஏதோ ஒரு நடிகை வேண்டுமென்பது என் எண்ணம்,.ஸ்ரீராம் ஜோதிகாவே வேணுமின்னு கேட்டதால 🙂
ஜோக் தெரிய வேண்டும் என்னும் இடத்திற்காக ‘டெய்ங்’ என்று சத்தமாக வந்து விழும் இசைத் துணுக்கு, வெண்ணிறாடை மூர்த்தி சீரியல்களை கிண்டலடிக்கிறதா?
பதில்: அந்த சத்தம் வரலைன்னா அது ஜோக்கே இல்லைங்கிற மாதிரியான காலக்கட்டம் (template)- point taken
கோலிவுட்டை நினைவூட்டும் விதமான ‘சம்போ… சிவ சம்போ’ போன்ற பிட்டுகளின் உள்ளீடு என்ன?
பதில்: நாடோடிகள் படத்துல காதலர்களை சேர்த்து வைத்தால் காது காலும் போவும், அதுதான் அந்தப் படத்திலிருந்து உள்ளீடு
நடுநடுவே கடிகாரத்தின் டிக் டாக் பின்னணியில் வருவது நேரம் உருண்டோடுவதன் குறியீடா?
பதில்: நீங்களாவது கண்டுபுடிச்சீங்களே 🙂
பெங்களூரு, டே-1 எல்லாம் ஆங்கிலம்; சேலம் மாவட்டம் மட்டும் தமிழ் துணையெழுத்தில் வருவதன் ஊடுபிரதி மொழிச்சிக்கல்களைக் கையாள்கிறதா?
Point 🙂
நன்றி பாபா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நீங்க எது செஞ்சாலும் லேட்டாதான் கரக்டா பண்ணுவீங்களா?